Wednesday, November 11, 2015

வட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 

வட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களும், காவிரி பாசன மாவட்டங்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் அரசு எந்திரம் காட்டி வரும் அலட்சியத்தால் மக்கள் கடுமையாக கோபமடைந்துள்ளனர்.

வட கிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டது. புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று இரவு கடலூர்&புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் புயல் ஆபத்திலிருந்து தமிழகம் தப்பிவிட்ட போதிலும் சில நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கு குடியிருந்த மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. சாலைகளில் பல அடி உயரத்திற்கு மழை நீர் ஓடியதாலும், மரங்கள் சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், விபத்துக்களும் ஏற்பட்டன. தொடர்மழையால் தொடர்வண்டி சேவையும் பாதிக்கப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள்.

தொடர் மழையால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டவை கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தான். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மட்டும் நேற்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையிலான 9 மணி நேரங்களில் 450 மில்லிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் நிலக்கரி சுரங்கங்களில் வெள்ளம் புகுந்து பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள பெரியகாட்டுசாகை அருந்ததி நகரில் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பலரது உடல்கள் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுவதாலும், பலரை காணவில்லை என்பதாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர கடலூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகமெங்கும் இன்று காலை வரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

 தொடர்மழையால் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் இயல்பு வாழ்க்கையை வாழ முடியவில்லை. வழக்கமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டிய தீபஒளித் திருநாள் தொடர் மழையாலும் அதன் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசாலும் சோகமான தீபஒளியாக மாறிவிட்டது.

வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும்  சாலைகளை சீரமைக்க வேண்டும்& மழை வெள்ளப் பாதிப்புகளை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், மக்கள் நலனில் அக்கறையற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொடநாடுக்கு ஓய்வு எடுக்கச் சென்று விட்டதால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. அதனால் தான் மழை வெள்ள பாதிப்புகள் அதிகரித்திருக்கின்றன. மழை & வெள்ளை நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் எங்கும் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் உண்மை. பல இடங்களில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பணிகளை மேற்கொள்வது போல படம் எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு சென்று விடுகின்றனர் என்பது தான் கள நிலைமை. இதேநிலை நீடித்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கே இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

எனவே, மழை&வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்பி நிவாரணப் பணிகளை விரைவு படுத்துவதுடன், முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். அதேபோல் மழை வெள்ள பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி போதுமானதல்ல என்பதால் அவற்றை உயர்த்தித் தர வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: