Wednesday, November 11, 2015

ஒட்டுமொத்த வளர்ச்சியில் கடைசி இடம்; இதுவே ஜெயலலிதா அரசின் சாதனை: ராமதாஸ்

 

‘நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ முதல் ‘ நான்காண்டு ஆட்சி... நாலாபுற வளர்ச்சி’’ என ஒவ்வொரு ஆண்டும் செய்யாத சாதனைகளுக்காக அ.தி.மு.க. அரசு விளம்பரம் செய்து வருகிறது. ஆனால், ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்... உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பதைப் போல அ.தி.மு.க. அரசின் செயல்களை ஆய்வு செய்தால் ஏமாற்றமும், விரக்தியும் மட்டுமே விஞ்சுகிறது.

2015 ஆம் ஆண்டில் மாநில அரசுகளின் செயல்பாடுகள் என்ற குறித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை State of States என்ற தலைப்பில் இந்தியா டுடே ஆங்கில இதழ் வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 10 துறை செயல்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள தர வரிசைப் பட்டியலில், மொத்தமுள்ள 21 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 20 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உத்தர்காண்ட் மாநிலத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் தமிழகத்தைக் காட்டிலும் சிறப்பாக  முன்னேற்றம் அடைந்துள்ளன. இப்பட்டியலில் குஜராத் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், நமது அண்டை மாநிலங்களான கேரளமும், கர்நாடகமும் முறையே 2, 3&ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு&காஷ்மீர் நான்காவது இடத்தைப் பிடித்திருகிறது. வளராத மாநிலங்கள் என்று கூறப்படும் பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களை விட வளர்ச்சியில் பின்தங்கியிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானமாகும்.

துறைவாரியான வளர்ச்சியில் பார்த்தால் விவசாயம், உள்ளடக்கிய மேம்பாடு ஆகியவற்றில் தமிழகம்  கடைசி (21 ஆவது) இடத்தைப் பிடித்திருக்கிறது. வேளாண்துறையில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அம்மாநிலத்தில் விவசாயிகளுக்கு மைனஸ் 10 (-10) விழுக்காடு வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பாசன வசதி பெறும் நிலங்களின் பரப்பு 45% அதிகரித்திருக்கிறது. அதனால் அந்த மாநிலம் வேளாண்மையில் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், வட்டியில்லாக் கடன் வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு அதை செயலில் காட்டாமல், உழவர்கள் கடனை திரும்ப செலுத்தவில்லை என்று கூறி அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்யும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த புதிதாக பாசன வசதி ஏற்படுத்தித் தரப்பட்ட நிலங்களின் பரப்பளவை விட, வீட்டு மனைகளாக்கப்பட்டு விவசாயம் விரட்டியடிக்கப்பட்ட நிலங்களின் பரப்பளவு பல மடங்கு அதிகம் ஆகும். அதன்விளைவு... தமிழகத்திற்கு கடைசி இடம்.  உள்ளடக்கிய மேம்பாட்டில், புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்குள்ள மக்களுக்கு வீடு, குடிநீர், சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப் பட்டிருப்பதுடன், வங்கி, அஞ்சலக வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாதது வெட்ககேடானது.

உட்கட்டமைப்பு வசதிகளில் 17 ஆவது இடத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவையான கல்வித் துறையில் தமிழகம் 13 ஆவது இடத்தில் தத்தளிக்கிறது. கல்வியைக் கடைசரக்காக்கி, அரசு பள்ளிகளை திட்டமிட்டு அழித்தது தான் இந்த அவல நிலைக்கு காரணமாகும். தூய்மையில் பத்தாவது இடம், முதலீடு மற்றும் நிர்வாகத்தில் 9 ஆவது இடம், சுற்றுச்சூழலில் எட்டாவது இடம், சுகாதாரத்தில் ஐந்தாவது இடம் என தமிழகத்தின் பின்னடைவு நீடித்துக் கொண்டே செல்கிறது.

2012 & 13 ஆம் ஆண்டில் 3.39% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்தது. அதே ஆண்டில் வேளாண்துறையில் மைனஸ் 12.1 (-12.1) விழுக்காடும், தொழில்துறையில் மைனஸ் 1.30(-1.30) விழுக்காடும் வளர்ச்சி பெற்று மிகப் பெரிய அவமானத்தை தமிழ்நாடு சந்தித்தது. மேலும் அரசின் நேரடிக் கடன் ரூ.2.11 லட்சம் கோடி, பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.2.01 லட்சம் கோடி என மொத்தம் ரூ.4.12 லட்சம் கோடி கடனை வாங்கிக் குவித்து தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதும் தலா ரூ.57,142 கடன் சுமையை சுமத்தியது தான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை ஆகும்.

ஊடகங்களை மிரட்டியும், விளம்பரங்கள் தர மாட்டோம் என்று அச்சுறுத்தியும் அரசுக்கு எதிரான செய்திகள் வெளிவரவிடாமல் தடுப்பதிலும், மக்கள் வரிப்பணத்தில் பல நூறு கோடி ரூபாயை வாரி இறைத்து தமிழகம் செழிப்பதாக விளம்பரங்களை வெளியிட்டு ஏமாற்றுவதிலும் வேண்டுமானால் ஜெயலலிதா அரசு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், கடந்த 50 ஆண்டுகளிலும், குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளிலும் தங்களின் வாழ்க்கைத் தரம் எப்படி சீரழிந்திருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை வலிமையான வாக்குகள் மூலம் பழி தீர்க்க காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது மக்களின் கோபத்தை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து சீரழித்த இரு கட்சிகளும் உணருவார்கள் என்பது உறுதி! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: