Thursday, November 19, 2015

கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

 
கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 2015-16 ஆம் ஆண்டிற்கான அரவைப்பருவம் தொடங்கி 50 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் கரும்புக்கான கொள்முதல் விலை இன்று வரை அறிவிக்கப்படவில்லை. தங்களின் கரும்புக்கு என்ன விலை கிடைக்கும் என்பது கூட தெரியாமல் சர்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு சூழலை தமிழக அரசு ஏற்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா விவசாயிகளின் வாழ்வுடன் விபரீத விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக அதை காலில் போட்டு மிதித்தார். 2011-12 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்குவதாக அறிவித்திருந்த ஜெயலலிதா ரூ.2000 கொள்முதல் விலை, ரூ.100 வாகன வாடகை என மொத்தம் ரூ.2100 மட்டுமே வழங்கினார். அதனால் மாற்றத்தை ஏற்படுத்திய விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.

2012-13 ஆம் ஆண்டிலும் ஜெயலலிதா அவரது வாக்குறுதியை காப்பாற்றவில்லை. மத்திய அரசு அறிவித்த விலையுடன் தமிழக அரசால் வழக்கமாக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.650 சேர்த்து ரூ.2350 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கினார். 2013&14 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ஜெயலலிதா மிகப்பெரிய துரோகத்தை செய்தார். அந்த ஆண்டில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.2100 அறிவித்த நிலையில் தமிழக அரசு ரூ.650 ஊக்கத்தொகை சேர்த்து ரூ.2750 வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ரூ.2,650 மட்டுமே ஜெயலலிதா வழங்கினார். அதேபோல், 2013-14 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த ரூ.2,200 விலையுடன் ரூ.650 சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.2,850 வழங்கியிருக்க வேண்டும். ஆனால், வழக்கமாக வழங்கப்படும் ஊக்கத்தொகையில் ரூ.200 குறைத்து ரூ.2,650 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கப்படும் என அறிவித்தது அதிமுக அரசு.

ஆனால், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை வழங்குவதற்குக் கூட எந்த சர்க்கரை ஆலையும் முன்வரவில்லை.  கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.1,050 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ள நிலையில், அதை பெற்றுத் தர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து செய்த துரோகங்களின் பயனாக உழவர்கள் கரும்பு விவசாயத்தை கிட்டத்தட்ட கைவிட்டு விட்டனர். அதனால், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற போது  386 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி  37% குறைந்து 2014 ஆம் ஆண்டில் 245 லட்சம் டன்னாக சரிந்து விட்டது. விவசாயத்தில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதாகக் கூறி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால், விவசாயத்தில் கடைசி மாநிலமாக மாற்றியதும், வேளாண் வளர்ச்சியை & 12.1(மைனஸ் 12.1)% என்ற  அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றதும் தான் கடந்த நான்கு ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு படைத்த சாதனையாகும்.

தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளில் பெரும்பாலானோர் கடன் வாங்கி விவசாயம் செய்பவர்கள் ஆவர். இத்தகைய சூழலில் விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி விட்டு எப்போது பணம் வரும்... எவ்வளவு பணம் வரும்? என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பது பெரும் கொடுமையாகும். அந்தக் கொடுமையிலிருந்து தமிழக விவசாயிகளை மீட்க அரசு முன்வர வேண்டும். நடப்பு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு 2300 ரூபாயை மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. தில்லியில் நேற்று முன்நாள் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.45 ஊக்கத்தொகை வழங்கவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கரும்பு சாகுபடிக்கான செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்க வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பு ஆகும். பா.ம.க. ஆட்சியில் இந்த விலை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். ஒருவேளை ஜெயலலிதா அரசால் அந்த விலை வழங்க முடியாவிட்டால் மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2345 விலையுடன் தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.650, வாகன வாடகை ரூ.100 சேர்த்து ரூ.3095 வழங்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் 5 ஆண்டுகளாக ஏமாற்றிய அ.தி.மு.க. அரசுக்கு  அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: