Monday, June 15, 2015

மசூதிகளை கோவில்களாக மாற்றுவோம் என மிரட்டுவதா...? சிங்கால் பேச்சுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை : ராமர் கோயில் கட்டுவதைத் தடுத்தால், இந்தியாவிலுள்ள அனைத்து மசூதிகளையும் கோயில்களாக மாற்றுவோம் என்ற விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் பேச்சுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்; மாறாக ராமர் கோயில் கட்டுவதைத் தடுத்தால் இந்தியாவிலுள்ள அனைத்து மசூதிகளையும் கோயில்களாக மாற்றுவோம் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் கூறியிருக்கிறார். இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்தே மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை சங் பரிவாரங்கள் ஓங்கி உரக்க ஒலிப்பது வாடிக்கையாகி விட்டது. மத்திய அரசு பதவியேற்ற சில வாரங்களிலேயே கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், ''இந்தியா என்பது இந்துக்களின் தேசம். கடந்த காலங்களில் இழந்ததை இப்போது மீட்போம். கடந்த காலங்களில் மத மாற்றம் செய்யப்பட்டவர்களை இப்போது கட்டாய மதமாற்றம் செய்வோம்" என்று எச்சரித்தார்.அடுத்த சில வாரங்களில் மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "இந்தியா ஒரே நாடு, இங்கு ஒரே மதம் தான் இருக்க வேண்டும், ஒரே மொழி தான் பேசப்பட வேண்டும். ஒரே கடவுளைத் தான் வழிபட வேண்டும்" என்று கட்டளையிட்டார். மத்தியில் ஆளும் கட்சியை வழி நடத்தும் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரே இப்படி பேசுவது மத நல்லிணத்தை வலுப்படுத்துமா? வலுவிழக்கச் செய்யுமா? இத்தகைய பேச்சுக்களை அனுமதிக்கலாமா? என்பதற்கெல்லாம் மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசோ இதையெல்லாம் காதில் வாங்க மறுக்கிறது.இன்னொரு பக்கம் ‘இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு விரட்டியடிப்போம்', ‘மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தான் அன்னை தெரசா சேவை செய்தார்', ‘காந்தியை கொன்ற கோட்சேவுக்கு சிலை அமைப்போம்' என்பன போன்ற முழக்கங்களைத் தான் திரும்பிய திசையெல்லாம் சங் பரிவாரங்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே இப்போது மசூதிகளுக்கு எதிராக அசோக் சிங்கால் மிரட்டல் விடுக்கிறார். இத்தகைய பேச்சுக்கள் நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கு எந்த வகையிலாவது உதவுமா? என்று சங் பரிவாரங்களின் தலைவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவை இன்று வரை அனுபவிக்கிறோம். கோத்ரா ரயில் எரிப்பும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை சரி செய்ய முடியாத அளவுக்கு கெடுத்து வைத்துள்ளன. இத்தகைய சூழலில் சங் பரிவாரத் தலைவர்கள் வாயைக் கட்டுப்படுத்தாமல் வார்த்தைகளைக் கொட்டுவதும், அதை ஆட்சியாளர்கள் வேடிக்கைப் பார்ப்பதும் நிச்சயமாக இந்தியாவுக்கு நன்மை பயக்காது. மற்ற மதத்தினரின் அனைத்து சுதந்திரங்களும் பாதுகாக்கப்படும்; மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது என பிரதமர் மோடி இதுவரை இரு முறை கூறியிருக்கும் போதிலும், அதை அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்களும், பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்களுமே கேட்பதில்லை என்பதிலிருந்தே இந்து அமைப்புகளின் ஆதிக்கமும், அதிகாரமும் நாட்டின் பிரதமரையும் தாண்டி வளர்ந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.நாட்டில் கடந்த ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால், மதவாத பேச்சுக்கள், கட்டாய மறு மதமாற்றம், இந்தித்திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதத்தையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் விட மோசமான ஆபத்து மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலான பேச்சுக்கள் தான். இப்பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அணிக்கு மக்கள் வாக்களித்ததன் நோக்கமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான். அமைதியும், நல்லிணக்கமும் நிலவினால் மட்டுமே நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதை உணர்ந்து, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-slams-ashok-singhal-228788.html

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: