Saturday, March 14, 2015

கர்நாடக அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது: ராமதாஸ்

 

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள் அறிக்கையில்,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக கர்நாடக நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கடந்த பல ஆண்டுகளாகவே கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் போதிலும், தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஆனால், மேகதாது அணை திட்டத்தை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்  இப்போது களமிறங்கியுள்ள கர்நாடக அரசு, புதிய அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 நிறுவனங்களை முதற்கட்டமாக தேர்வு செய்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிதியை நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா ஒதுக்கியுள்ளார்.

புதிய அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்த பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்றும், இதுகுறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்தவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு  எதிரானவை என்பது மட்டுமின்றி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கக் கூடியவையாகும். கர்நாடக அரசின் இத்தகைய அத்துமீறலை மத்திய அரசு அனுமதிப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டுள்ள புதிய அணையில் 48 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. தமிழகத்தில் வடக்கே  சென்னையில் தொடங்கி, தெற்கே மதுரை, இராமநாதபுரம் வரை உள்ள 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை காவிரி நீர் தான் நிறைவேற்றுகிறது. மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட்டால்,  இத்திட்டங்கள் பயனற்றுப் போய்விடும். மொத்தத்தில் தமிழகம் பாலைவனமாகிவிடும். காவிரி நீர் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பது தான். 
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு 8 ஆண்டுகளும், மத்திய அரசிதழில் இறுதித் தீர்ப்பு  வெளியிடப்பட்டு இரு ஆண்டுகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்தியில் ஆண்ட அரசும், இப்போது ஆளும் அரசும் முன்வராதது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற அடுத்த வாரமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அறிவித்தார். ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான அனந்தகுமாரும், சதானந்த கவுடாவும் மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியதை அடுத்து அமைச்சர் உமாபாரதியின் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டு விட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு அமைக்கப்படாது என்பதையும், காவிரி பிரச்சினை தொடர்பாக எந்த சிக்கல் வந்தாலும் மத்திய அரசு தங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும் என்பதையும் நன்றாக தெரிந்து கொண்டு தான் காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட எந்த அமைப்பின் ஆணையையும் மதிக்காமல் புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் கர்நாடக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் செயல்படும் நிலையில், தமிழகத்தில் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்த தமிழக அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதது தான் தமிழகத்தின் சாபக்கேடு. இப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும்படி பலமுறை வலியுறுத்தியும் ‘எல்லாம் தெரிந்த முதலமைச்சர்’ அந்த யோசனையை ஏற்கவில்லை. மேகதாது அணை கட்ட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு  4 மாதங்கள் ஆகும் நிலையில் அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதிலிருந்தே இப்பிரச்சினையில் தமிழக அரசின் அக்கறையை புரிந்து கொள்ளலாம்.

காவிரி நீர் இல்லை என்றால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் இல்லை என்பதை  உணர்ந்து கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து, அதில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் இப்பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் நீதியின் நோக்கில் பார்த்து மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: