Wednesday, March 11, 2015

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதா? ராமதாஸ் கண்டனம்


பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதா? என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக 11.03.2015 புதன்கிழமை ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தை முடக்க அரசு சார்பில் எடுக்கப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை. 

பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவ-மாணவியர் தங்களின் கோரிக்கைகளுக்காக 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் எந்த கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. இதையடுத்து 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தினர். 12 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தின்போது  முக்கிய சாலைகளில் திடீர் திடீரென மறியல் செய்தனர். 

இதை முறியடிக்க காவல்துறை அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. போராட்டக்காரர்களை கைது செய்து சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலுள்ள மதுராந்தகத்திலும், கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சுடுகாட்டிலும் நள்ளிரவில் இறக்கிவிட்ட அவலமும் நடைபெற்றது. 

இதற்கெல்லாம் அஞ்சாமல் தங்களின் உரிமைக்காக போராடிய இவர்களுடன் 3 கட்ட பேச்சு நடத்திய தமிழக அரசு, இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்தது. தொடர்ந்து அமைச்சர்களுடன் இது குறித்து விவாதித்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா,சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர் வேலை வழங்குவது உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அளித்தார். 

ஆனால், பெயரளவில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியதைத் தவிர வேறு எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தான் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றோருக்கு  வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து  மாற்றுத்திறனாளிகள்  தொடர் உண்ணாநிலை போராட்டம் மற்றும் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களை அழைத்து பேசுவதற்கு பதிலாக அவர்களை கைது செய்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விடும் அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. அதுமட்டுமின்றி, ‘‘இப்போதைக்கு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது; நீங்கள் போராட்டம் நடத்த விரும்பினால் தாராளமாக போராடிக் கொள்ளுங்கள்’’ என்று தமிழக அரசின் உயரதிகாரிகள் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்றவர்கள் பின்னடைவுப் பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள்; முதுநிலைப்பட்டம் பெற்ற 200 பேர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், 100 பேர் கல்லூரி விரிவுரையாளர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். இவற்றை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், வாக்குறுதி அளித்து  ஒன்றரை ஆண்டுகளாகியும் இவற்றை நிறைவேற்ற அரசு தயங்குவற்கானக் காரணம் தெரியவில்லை.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை ஜெயலலிதா இன்னும் நிறைவேற்றவில்லை; சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்த வரிசையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் அரசு காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விஷயத்திலேயே தமிழக அரசு இவ்வாறு நடந்து கொண்டால், மற்ற பிரச்சினைகளில் அரசின் செயல்பாடுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை உணரலாம்.  


பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை பொறுப்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்வது தான் ஒரு நல்ல அரசுக்கான இலக்கணமாக இருக்க முடியும். மாற்றுத்திறனாளிகள் வீதியில் இறங்கி  போராடிய பிறகும் அவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருந்தால் அது மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. இதை உணர்ந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: