Sunday, October 14, 2012

மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டோம்: அன்புமணி ராமதாஸ்



மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டோம் என்று பாமக முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்து வந்துள்ளது. இதனால், பா.ம.க. மீதான நம்பகத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். மக்களிடம் கட்சி இழந்த நம்பிக்கையை திரும்ப பெறுவதற்கு ஒரு முன்னுரை அமைத்துள்ளோம்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு, மக்களிடம் நம்பிக்கையை பெறுவோம். இது 2016-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கி செல்ல உதவிகரமாக இருக்கும். கட்சி விரும்பினால் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்.

கடந்த 2001 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க உடன் கூட்டணி சேர்ந்திருந்தோம். ஆனால், டெல்லி மேல் சபை (ராஜ்ய சபா) தேர்தலுக்கு முன்பாகவே, அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். சுயமரியாதையை விட்டுக் கொடுத்து, அந்த கூட்டணியில் நாங்கள் நீடித்திருந்தால், ஒரு ராஜ்ய சபா எம்.பி., பதவியை பெற்றிருக்க முடியும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.
2011 சட்ட சபை தேர்தலில் தி.மு.க உடன் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து கொண்டோம். அப்போது கூட எங்களுக்கு ராஜ்ய சபா சீட்டு தர தி.மு.க. தலைவர் மறுத்து விட்டார். ராஜ்ய சபா சீட்டுக்காக அந்த கட்சியில் கூட்டணி அமைத்தோம் என்றால், தேர்தல் முடிந்த கையோடு தி.மு.க கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறி இருக்க மாட்டோம். இந்த இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகத்தின் சமூக பொருளாதார கட்டமைப்பை சீரழித்து விட்டன.

இந்த கட்சிகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிரப்பும். 2016 சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய இடம் வகிக்கும். பா.ம.க. தலைமையில் ஒரு கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: