Monday, September 6, 2010

தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது-ராமதாஸ்

திட்டக்குடி: நாடு சுதந்திரம் அடைந்த பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்து சாராய புரட்சி நடந்து வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதை செயல்படுத்தாமல் முதல்வர் காலம் தாழ்த்தி வருகிறார். அதற்கு வெறும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து கணக்கெடுப்பை எடுக்கலாம். இதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள் கொண்ட ஒரு கமிஷன் அமைக்கலாம்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம். நாங்கள் அனைத்து சாதியினரையும் சேர்த்துதான் கணக்கெடுக்க சொல்கிறோம். இலவசங்களை வழங்குவது மூலம் உண்மையான வளர்ச்சி அடைய முடியாது. எம்ஜிஆர் ஆட்சியின் போது இலவச காலனி, இலவச பல்பொடி என்ற சில திட்டங்களை மட்டும் செயல்படுத்தினார்.

1989ல் 3வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது பேசிய கருணாநிதி , இலவசங்கள் என்பது தற்காலிகமாகத்தான் இருக்க முடியும். அது நீடித்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். உண்மையான முன்னேற்றம் என்பது மக்கள் தாங்களுக்கு தாங்களே தேவையானவற்றை வாங்கி கொள்ளக்கூடிய முறையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வதுதான் என்றார்.

இதை நான் இப்போது கூறும்போது கருணாநிதிக்கு கோபம் வருகிறது. அவர் 1989ல் சொன்னதைத்தான் தற்போது நான் திருப்பிச் சொல்கிறேன்.

இலவச டிவி கொடுப்பதால் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையிலேயே இலவச பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இலவச கழிவறை கட்டி தர வேண்டும்.

விவசாயிகளுக்கு ரூ. 25,000 பணமாகக் கொடுக்க வேண்டும். தற்போது விவசாய விளை நிலங்களை வெளி மாநிலத்தவர்கள் கைப்பற்றி வீட்டு மனைகளாக மாற்றி வருவது விவசாயத்தை அழித்துவிடும். இதனை தடுத்து நிறுத்த சட்டம் கொண்டுவர வேண்டும்.

இல்லையெனில் 5 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உணவுக்கு அடுத்த மாநிலத்தை எதிர்பார்க்கும்நிலை உருவாகும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் நாட்டின் வளர்ச்சிக்காக பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்து சாராய புரட்சி நடந்து வருகிறது.

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் பாமகவே முன்னின்று தமிழ்நாட்டில் இருந்து எந்தப் பொருளும் கேரளாவிற்கு செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தி கேரளாவுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவோம்.

தேர்தலில் பாமக தனித்து நிற்பதன் மூலம் வேறு கட்சிகள் ஆட்சிக்கு வர வழி வகுப்பதாக கூற முடியாது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என்றார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பாமக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய ராமதாஸ்,

உலகில் அரசியல் இல்லாமல் ஒரு துரும்பு கூட அசையாது. ஒவ்வொரு குடிமகனின் தலைவிதியை நிர்ணயிப்பது அரசியல்தான்.

வடஆற்காடு மாவட்டம் இரண்டாக பிரிந்து திருவண்ணாமலை மாவட்டம் 30 ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் வளர்ச்சி அடைந்து எங்கேயோ போய் விட்டார்கள்.

பாமகஅத்திப்பூ என்கிறார்கள். பாமக பூசணி பூ, இது ஆண்ட கட்சி, அத்திமரம், உழைக்கும் மக்களின் கட்சி. தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.

பின்னர் பேசிய அன்புமணி, நான் அமைச்சராக இருந்தபோது தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், 108 அவசர ஊர்தி சேவை திட்டங்களை கொண்டு வந்தேன். இந்தியாவிலேயே ஐ.நாவால் பாராட்டப்பட்ட ஒரே திட்டம் இந்த சுகாதாரத் திட்டம்தான்.

ஒரு பக்கம் இலவசம். மறுபக்கம் டாஸ்மாக் கடை. 1995ம் ஆண்டு மதுபானம் மூலம் அரசுக்கு ரூ. 1,400 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு மதுக்கடை மூலம் ரூ. 13,000 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனை மூலம் அடுத்த ஆண்டு ரூ.15,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் வயிற்றில் அடித்து, கிடைக்கும் இந்த வருமானம் மூலம் இலவசங்களை வழங்க வேண்டாம். அதற்கு பதிலாக இலவச கல்வி, வேலைவாய்ப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

சோனியா காந்திக்கு ராமதாஸ் வாழ்த்து:

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு ராமதாஸ் பேக்ஸ் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், உங்களது செயல்திறன் மிக்க மற்றும் திறமையான தலைமையின் மூலம் சமூக ரீதியாகவும், கல்வியிலும், பொருளாதார நிலையிலும் மிகவும் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மக்களின் துயரங்கள் தீர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: