Wednesday, July 31, 2013

மக்கள் மாண்டாலும் பரவாயில்லை மது விற்றால் போதும் என்ற கொள்கையை அரசு கடை பிடிக்கிறது: ராமதாஸ்

மக்கள் மாண்டாலும் பரவாயில்லை மது விற்றால் போதும் என்ற மன சாட்சியில்லாத கொள்கையை அரசு கடை பிடித்து வரும் நிலையில், அதை எதிர்த்து போராட மாணவர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூடகோரி உண்ணாவிரதம் இருக்கும் மதுரை சட்டக்கல்லூரிமாணவிக்கு ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கடந்த திங்கட்கிழமை முதல் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
அவருக்கு ஆதாரவாக மேலும் சில மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் உண்ணாநிலையில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில் மாணவர்கள் தொடங்கியுள்ள இப்போராட்டத்திற்கு பா.ம.க.வின் பாராட்டுக்களையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை சீரழிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான போராட்டங்களை பா.ம.க. நடத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இதே கோரிக்கையை வலியுறுத்தி யார் போராட்டம் நடத்தினாலும் அதற்கு முழுமையான ஆதரவையும் பா.ம.க. அளித்து வருகிறது. இதனால், மதுவின் தீமைகள் குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருகிறது.
ஆனால், தமிழக அரசோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மது விற்பனையை அதிகரிப்பதில் தான் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31–ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போதிலும் அதை செயல்படுத்த மறுத்து விட்ட தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஆகஸ்ட் 14–ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கண்டிப்புடன் கூறிவிட்ட போதிலும், மதுக் கடைகளை மூட தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மக்கள் மாண்டாலும் பரவாயில்லை மது விற்றால் போதும் என்ற மன சாட்சியில்லாத கொள்கையை அரசு கடை பிடித்து வரும் நிலையில், அதை எதிர்த்து போராட மாணவர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. மதுவுக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் இன்னும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும், மது ஒழிப்புக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Saturday, July 27, 2013

அமைச்சர்களை நீக்குவாரா? முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவாரா? ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கேள்வி!



பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 27.07.2013 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிகையில்,

கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 151 பேரில் 16 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம், மேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.சாமி, ஆண்டிப்பட்டி தங்கத் தமிழ்ச்செல்வன், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் வெற்றிவேல், கரூர் செந்தில் பாலாஜி, கோபிச் செட்டிபாளையம் கே.ஏ. செங்கோட்டையன், அரியலூர் துரை. மணிவேல், நன்னிலம் ஆர். காமராஜ், கிருஷ்ணராயபுரம் எஸ். காமராஜ், மதுரை தெற்கு செல்லூர் ராஜு, ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி. சண்முக நாதன், நெய்வேலி எம்.பி.எஸ். சுப்பிரமணியன், மானாமதுரை எம்.குணசேகரன், நாகர்கோவில் நாஞ்சில் முருகேசன், மணப்பாறை சந்திரசேகரன், சாத்தூர் ஆர்.பி. உதயக்குமார் ஆகியோர் மீது பல்வேறு கால கட்டங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த 16 பேரில் 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 15-ஆம் தேதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘‘ ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால், ஜனநாயக ரீதியில், அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும்; வன்முறை மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்கமுடியாது. கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் கடமை ஆகும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் கூறிய முதலமைச்சர் அதை தாமும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யயாததுடன், பொதுச் சொத்துக்களை சேதப் படுத்தியவர்களையும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியவர்களையும் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார். இதன்மூலம் பேரூந்துகளை எரித்தவர்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கும் தான் அ.தி.மு.க.வில் பதவி வழங்கப்படும் என்று மறைமுகமாக கூறுகிறாரா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கி, பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பில் அவர்களையே அமர்த்துவதைவிட ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயல் எதுவும் இருக்க முடியாது. தாம் வகிக்கும் முதலமைச்சர் பதவி மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே மரியாதை இருக்குமானால், சட்டப்பேரவையில் கூறியவாறு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாற்றுக்கு ஆளாகியிருக்கும் 5 அமைச்சர்களையும், 11 சட்டப்பேரவை உறுப்பினர்க¬ளையும் பதவி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, அ.தி.மு.க.வினரால் சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களுக்காக இழப்பீட்டை கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவே செலுத்த வேண்டும். இதற்கெல்லாம் மேலாக பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சக்திகளுக்கு அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வழங்கி ஊக்குவித்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, July 25, 2013

ஏழைகளின் வாழ்வுடன் விளையாட வேண்டாம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 25.07.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 2004&05 ஆம் ஆண்டின் அளவான 37.2 விழுக்காட்டிலிருந்து 2011&12 ஆம் ஆண்டில் 21.9 விழுக்காடாக குறைந்துள்ளது என்ற மத்தியத் திட்டக்குழுவின் அறிவிப்பு மகிழ்ச்சியளித்தது. ஆனால், கிராமப் பகுதிகளில் தினமும் ரூ27. 20&ம், நகர்ப்புறங்களில் ரூ.33.30&ம் செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டியவர்கள் என்ற அளவுகோளின் அடிப்படையில் தான் இந்த புள்ளி விவரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்ததும் வருத்தமும், வேதனையும் தான் விஞ்சியது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரம் சாதனை என்பதைவிட தந்திரம் என்பது தான் உண்மை. கிராமப்புறங்களில் தினமும் 27 ரூபாய் செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டியவர்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது எதார்த்தங்களை கணக்கில் கொள்ளாமல் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்களின் அளவு குறைந்து விட்டதாக கணக்கு காட்டப்படும் 7 ஆண்டுகளில் மட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 300% வரை அதிகரித்திருக்கின்றன. மத்திய திட்டக்குழு வலியுறுத்தலின்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 100% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வறுமைக்கோட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது எதார்த்தத்திற்கு எதிரான செயல் ஆகும். ஒரு லிட்டர் குடிநீரின் அளவு ரூ. 25&க்கும் மேல் விற்கும் நிலையில், அதே தொகையில்  ஒருவர் ஒருநாள் முழுவதற்குமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஏழைகளின் வாழ்க்கையுடன் விளையாடும் செயலாகும்.
நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் வறுமையை ஒழித்து விட்டோம் என்று கணக்கு காட்டி செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவே இப்புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதன் மூலம் மத்திய அரசு வறுமையை ஒழிக்க வில்லை.... மாறாக வறியவர்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்பது தான் உண்மை. ஒவ்வொரு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் போதும், மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இதுபோன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. 2004&ஆம் ஆண்டில் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பெயரில் ஒரு கட்சியின் செலவில் செய்யப்பட்ட பிரச்சாரம் தான் இப்போது ‘இந்தியாவில் வறுமை ஒழிகிறது’ என்ற பெயரில் அரசு செலவில் செய்யப்படுகிறது. ஆனால், இத்தகைய தந்திரங்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இன்றைய நிலையில், மத்திய மாநில அரசுகள் கடைபிடித்து வரும் தவறான கொள்கைகள் காரணமாக இந்தியாவில் சமத்துவமின்மையும், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் 77% மக்கள் தினமும் ரூ.20 கூட சம்பாதிக்க முடியாமல் தடுமாறும் நிலையில், இந்தியாவின் 55 கோடீஸ்வரர்களிடம் மட்டும் ரூ. 10 லட்சம் கோடி சொத்து முடங்கிக் கிடக்கிறது என்பது தான் உண்மை.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இலவசமாகவும், தரமாகவும் வழங்குதல், இந்திய மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்திற்கு தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்கி அதை இலாபகரமான தொழிலாக மாற்றுதல் ஆகியவற்றின் மூலம் தான் வறுமையை ஒழிக்கவும், சமத்துவத்தை ஏற்படுத்தவும் முடியும். மாறாக மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசங்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையோ, நாட்டின் பொருளாதாரத்தையோ ஒரு போதும் உயர்த்த முடியாது. எனவே,  எதார்த்த நிலைக்கேற்ப வறுமைக் கோட்டு வரம்பை நிர்ணயித்து, அந்த வறுமையிலிருந்து மக்களை மீட்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

Wednesday, July 24, 2013

மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடி... தண்ணீர் திறக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட சாகுபடிக்கு அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவது காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அதேநேரத்தில் குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் விசயத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்து வருவது கவலையை உருவாக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டதாலும், பருவமழை பொய்த்ததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி குறிப்பிடத்தக்க பரப்பளவில் நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிரும் வறட்சி காரணமாக கருகியது.வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் போதிய அளவு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், நடப்பாண்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்தால் தான் கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பின் ஒரு பகுதியையாவது ஈடுகட்ட முடியும்.குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், நடப்பாண்டில் ஜூலை மாதம் முடிவடையப் போகும் நிலையிலும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.குறுவை சாகுபடி ஏற்கனவே 50 நாட்கள் தாமதமாகிவிட்ட நிலையில், இப்போதாவது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் தான் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அறுவடை செய்ய முடியும்; இல்லாவிட்டால் வடகிழக்கு பருவ மழையால் பயிர்கள் சேதம் அடைந்துவிடும்.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 83 அடியாக(45 டி.எம்.சி) உள்ளது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 75 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் நீர்வரத்து இனி வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும். கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அம்மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டதாலும் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து இப்போதே தண்ணீர் திறந்து விடப்பட்டால், பின்பருவ பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் போய்விடுமோ என்று தமிழக அரசு அஞ்சத் தேவையில்லை.மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால், வீராணம் ஏரியை நிரப்பி அதன்மூலம் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டையும் போக்க முடியும். எனவே, காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நலனையும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையையும் கருத்தில் கொண்டு, இனியும் தாமதிக்காமல் மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீரை திறந்து விட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tuesday, July 23, 2013

மருத்துவர் அய்யாவின் பாதுகாப்பில் அலட்சியம்: தமிழக அரசுக்கு கண்டன...ம் - பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிக்கை

சமூக விரோத சக்திகளால் மருத்துவர் அய்யாவின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது - மருத்துவர் அய்யாவின் பாதுகாப்பில் அலட்சியம்: தமிழக அரசுக்கு கண்டன...ம் - பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிக்கை
==================================
தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகளும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவும் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விசயத்தில் தமிழக அரசு மிகுந்த அலட்சியத்துடனும், பழி வாங்கும் உணர்வுடனும் நடந்து கொள்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் அய்யா அவர்கள் கல்வி, சமூகநீதி உள்ளிட்ட மக்களை பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் போராடி வருகிறார். மதுவுக்கும், புகையிலைக்கும் எதிராக மருத்துவர் அய்யா நடத்தி வரும் போராட்டங்கள் ஒட்டு மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைப்பவை ஆகும். மருத்துவர் அய்யா வலியுறுத்தி வரும் கொள்கைகளால் பாதிக்கப் பட்டுள்ள வலிமை வாய்ந்த சமூக விரோத சக்திகளால் மருத்துவர் அய்யாவின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் அய்யா அவர்கள் புதுச்சேரி மாநிலம் அபிஷேகப் பாக்கம் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கும்பல் கொலைவெறி தாக்குதலை நடத்தியது. அப்போது மருத்துவர் அய்யாவின் பாதுகாப்புக்காக வந்த தொண்டர்கள் சமயோசிதமாக செயல்பட்டு, அவரது உயிரைக் காப்பாற்றினர்.
மருத்துவர் அய்யாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த தமிழக அரசு, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பு அளித்து வந்தது. மருத்துவர் அய்யாவின் இல்லத்திற்கும், அவர் செல்லுமிடங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டு வந்தனர். நிகழ்ச்சிகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லும்போது அம்மாவட்ட காவல்துறையினரும் பாதுகாப்புக்கு வருவது வழக்கமாகும். கடந்த சில மாதங்களாக மருத்துவர் அய்யாவுக்கு அச்சுறுத்தல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் தமிழக அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முறையீடு அளிக்கப்பட்டது. ஆனால், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 26.04.2013 முதல் மருத்துவர் அய்யாவுக்கும், அவரது இல்லத்திற்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென திரும்பப்பெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து கடந்த ஆண்டு இறுதியிலும், நடப்பாண்டின் தொடக்கத்திலும் மிரட்டல் கடிதங்கள் வந்தன. அதேபோல், பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு அவர்களுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இவை குறித்து, மிரட்டல் கடிதங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் கடந்த 03.01.2013, 19.02.2013 ஆகிய நாட்களில் தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோரிடம் நானும், பா.ம.க.வின் மாநில நிர்வாகிகளும் எழுத்துப் பூர்வமாக புகார் செய்தோம். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாசு, பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். மருத்துவர் அன்புமணி இராமதாசு கடந்த 27.02.2013 அன்று காவல்துறைத் தலைமை இயக்குனரை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை மனுவாக அளித்தார்.
அதன் பின்னர் பலமுறை இந்த அதிகாரிகளை நான் நேரில் சந்தித்து இக்கோரிக்கைகள் குறித்து நினைவூட்டினேன். ஆனாலும் பயனில்லை. மருத்துவர் அய்யா, அன்புமணி இராமதாசு, ஜெ.குரு ஆகியோருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர் அய்யா அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றதும், மற்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுப்பதும் கடுமையாக கண்டிக்கத் தக்கவை ஆகும்.
மருத்துவர் அய்யா உள்ளிட்ட பா.ம.க. தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதையும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையும் காவல்துறை அதிகாரிகளே தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அனைத்து சமுதாய பேரியக்கக் கூட்டங்களின்போது சென்னை, மதுரை, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கறுப்புக்கொடி போராட்டம் என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மருத்துவர் அய்யா அவர்களை தாக்க முயன்றனர் என்பதும் காவல்துறைக்கு தெரியும். ஆனாலும், பாதுகாப்பு வழங்க இன்று வரை அரசு முன்வராததற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் பொதுமக்களே சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில், மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாசு, ஜெ.குரு ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க மறுப்பதன் மூலம் என்ன நடக்க வேண்டும் என தமிழக அரசு விரும்புகிறது? என்பது தெரியவில்லை.
முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அவருக்கு வழங்கப்பட வேண்டியதை விட அதிகமாகவே, கறுப்புப் பூனை படையினர் 12 பேர், தமிழக காவல்துறை சார்பில் இரு துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 75 பேரைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் ஓய்வெடுப்பதற்காக செல்லும் கொடநாடு மாளிகை, சிறுதாவூர் மாளிகை ஆகியவற்றுக்கும், ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவை போதுமானதாக இல்லை என்று கூறி கடந்த 2008-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பைப் பெற்றார். அதன்பின், 2010-ஆம் ஆண்டில் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமரை சந்திக்க வைத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி வலியுறுத்தச் செய்தார்.
தமக்கும், தாம் ஓய்வெடுக்கும் மாளிகைகளுக்கும் கூட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, பா.ம.க. தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையினரே ஒப்புக் கொண்ட பிறகும், மருத்துவர் அய்யாவுக்கு 15 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு திடீரென திரும்பப் பெற்றதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதாகவே தோன்றுகிறது. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன; அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சேலம் நிகழ்விற்குப் பிறகாவது பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு, பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு ஆகியோருக்கு தமிழக அரசு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Monday, July 22, 2013

குரு கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்



தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பாமக எம்எல்ஏவும் வன்னியர் சங்க தலைவருமான குரு கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், மத்திய மாநில அரசுகள் 6 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குரு கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்த சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து  செய்த போதும் மீண்டும் குரு கைது செய்யப்பட்டார். தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குரு, தனது வழக்கறிஞர்கள் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Sunday, July 21, 2013

அரசியல் தலைவர்கள் எவருமே சுதந்திரமாக நடமாட முடியவில்லை :ராமதாஸ்



இந்து அமைப்பைச் சேர்ந்தோர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டிக்கும் வகையில் திங்கள்கிழமை (ஜூலை 22) பாஜக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவி்த்துள்ளது.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ’’தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான் சேலத்தில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளரும், ஆடிட்டருமான ரமேஷ் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஓராண்டில் மட்டும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் இதுதொடர் பான வழக்குகளில் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.
திருச்சி மற்றும் மதுரையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகளில் கடந்த பல மாதங்களாக குற்றவாளி களை காவல்துறையினரால் நெருங்கக் கூட முடியவில்லை.
தமிழக காவல்துறையினரின் அலட்சியம் மற்றும் திறமையின்மையால் கொலைகாரர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் அச்சம் போய்விட்டது. பொதுமக்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை எவரு மே சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது தான் தமிழகத்தின் இன்றைய நிலை ஆகும்.
ரமேஷின் படுகொலை உள்பட தமிழகத்தில்  தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் படுகொலைகளைக் கண்டித்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக சார்பில் திங்கள்கிழமை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவிக்கிறது’’என்று அவர் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: