Saturday, September 29, 2012

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ்




தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பா.ம.ப. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் திட்டத்தின்படி கொள்முதல் செய்யப்படும் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,350 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,300 ரூபாயும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே ஏமாற்றத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் விளைச்சல் அதிகரிக்கிறதோ இல்லையோ, விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. உரம் உள்ளிட்ட வேளாண்மைக்கான அனைத்து இடுபொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றவாறு நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வேளாண் அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்திய போதிலும், நெல் கொள்முதல் விலையை வெறும் 16 சதவீதம் மட்டுமே மத்திய அரசு உயர்த்தியது.
ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்

இது போதுமானதல்ல என்ற நிலையில், தமிழக அரசாவது ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தமிழக அரசோ, வழக்கம் போலவே, மத்திய அரசு அறிவித்த விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு 50 ரூபாயும் ஊக்கத்தொகையாக சேர்த்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் உர வகைகளின் விலை 300 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் விலை வெறும் 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது.

இதேநிலை தொடர்ந்தால், விவசாயிகள் நெல் பயிரிடுவதையே விட்டுவிடும் நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தமிழகத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். இதைத் தடுக்கவும், உழவர்களின் நலன்களை பாதுகாக்கவும், தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Thursday, September 27, 2012

மருத்துவப் படிப்புக்கு மீண்டும் நுழைவுத்தேர்வு கூடாது: ராமதாஸ்



தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக 2013-14ம் ஆண்டு முதல் முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தேர்வுக்கான அறிவிப்பையும் வெளியிடப்பட்டிருப்பதால், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் ஆபத்து உருவாகியிருக்கிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்திந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் 15% இடங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு என்ற பெயரில் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2013-14ம் ஆண்டு நுழைவுத்தேர்வு நடத்துவதற்காக அமர்த்தப்பட்டிக்கும் அமைப்பான, மத்திய  இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலுள்ள 355 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கும்,136 பல் மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தபடும் என்று தெரிவிக்கபட்டிக்கிறது.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இப்படி ஒரு நுழைவுத்தேர்வை அறிவிப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதற்கு சமமானதாகும். எனவே, மருத்துவ பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வராவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்காவிட்டால், அதைக் கண்டித்து, தமிழகத்தில் மிகக் கடுமையான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Monday, September 24, 2012

தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்று ஏற்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ்


சென்னை: தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்று ஏற்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :
முடங்கும் பொருளாதாராம்
காற்றாலை மின் உற்பத்தி தடைபட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் 10 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை அறிவிக்கபடாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தபட்டு வருகிறது.கோவை, திருப்பூர் மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொழில் உற்பத்தியும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்;மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியவில்லை; மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிபடுகின்றனர். இதேநிலை நீடித்தால் தமிழகத்தின் பொருளாதார செயல்பாடுகள் அடியோடு முடங்கிவிடும் ஆபத்து உள்ளது.
வெள்ளை அறிக்கை
ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டை போக்குவதாக உறுதி அளித்த முதலமைச்சரால், கடந்த 15 மாதங்களில் ஒரு மெகாவாட் மின்சாரத்தைக் கூட கூடுதலாக உற்பத்தி செய்ய முடியவில்லை. திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாக தமிழகத்தின் மின் உற்பத்தியை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2300 மெகாவாட் குறைத்தது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை ஆகும். மின்வெட்டை போக்குவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதை சென்னை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மக்களின் எந்த பிரச்சினையையும் தீர்ப்பதில் அக்கறை காட்டாத தமிழக அரசு , தொடர் மின் வெட்டால் மக்கள் படும் துயரங்களை பார்த்த பிறகாவது, அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்பதை உறுதி செய்ய நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதற்காக தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை எவ்வளவு? மின் உற்பத்தி எவ்வளவு? நடைமுறையில் உள்ள மின் திட்டங்கள் எத்தனை? அந்த திட்டங்கள் எந்த கட்டத்தில் உள்ளன? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
மின் உற்பத்தித்துறை
தமிழ்நாட்டில் 6 மின் திட்டங்கள் அறிவிக்கபட்ட நிலையிலேயே, எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடபட்டிருக்கின்றன. இந்த திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, விரைவாக செயல்படுத்தி முடிப்பதற்காக, மின் உற்பத்தித் துறை என்ற பெயரில் தனித்துறையை ஏற்படுத்தி அதற்கு திறமையான அமைச்சரையும் , செயலாளரையும் தனியாக அமர்த்த வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்த ஒரு சில ஆண்டுகளிலாவது நிரந்தர தீர்வு காண முடியும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, September 23, 2012

கன்னட அடிப்படைவாத தலைவர் போல செயல்படுவதா... கிருஷ்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்

Lugo s fate highlights Paraguay lan...
Ads by Google
Windows Server 2012 microsoft.com/ws2012
Built From The Cloud Up To Be More Available, Flexible & Efficient.
சென்னை: ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான அமைச்சராக இருக்கும் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஏதோ கன்னட அடிப்படைவாத அமைப்பின் தலைவரைப் போல செயல்படுவது சரியல்ல. இதற்காக அவரை பிரதமர் கண்டிப்பதுடன், தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து விட்டது. இது தொடர்பாக காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் பிறப்பித்த உத்தரவை ஏற்க கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் மறுத்து விட்டார்.
பிரதமரின் பிரதிநிதியாக அவருக்கு அறிவுரை கூறி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடச் செய்ய வேண்டிய நிலையில் உள்ள மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அவ்வாறு செய்யாமல், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு செல்லக் கூடாது என்றும், இருக்கும் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும் என்றும் புதிய யோசனை கூறியிருக்கிறார்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதிமன்றம் மூலமாக நீதி கிடைப்பதை தடுக்கவே இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே இதுவரை 40க்கும் மேற்பட்ட முறை பேச்சு நடத்தப் பட்டிருக்கும் போதிலும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. கர்நாடக முதல்வராக எஸ்.எம்.கிருஷ்ணா இருந்த போதுகூட பலமுறை பேச்சு நடத்தி எந்த பயனும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, 2003ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்ததற்காக உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டவர் தான் இந்த கிருஷ்ணா.
காவிரி பிரச்சினையில் கர்நாடக ஆட்சியாளர்கள் இருதரப்பு பேச்சுக்களுக்கும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் இந்த அளவுக்குத் தான் மதிப்பளித்திருக்கிறார்கள் எனும் போது, எந்த அடிப்படையில் மீண்டும் பேச்சு நடத்த தமிழகம் முன்வர வேண்டும் என்று கிருஷ்ணா கோருகிறார் என்பது தெரியவில்லை.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் இன்னும் சில வாரங்களை ஓட்டிவிட்டால், தமிழகத்திற்கு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தராமல் ஏமாற்றிவிடலாம் என்ற சதி தான் கிருஷ்ணாவின் யோசனைக்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கிருஷ்ணாவின் இந்த யோசனையை தமிழக அரசு ஒரு போதும் ஏற்கக்கூடாது. பிரதமர் கூறிய வினாடிக்கு 9000 கன அடி என்பதற்கு பதிலாக வினாடிக்கு 4500 கன அடி தண்ணீரை காவிரியில் திறந்துவிடலாம் என்றும் கிருஷ்ணா யோசனை தெரிவித்துள்ளார். இந்த நீர் காவிரி ஆற்றின் மணற்பரப்பை நனைப்பதற்குக்கூட போதாது. இது ஒருபுறமிருக்க பிரதமரே அளித்த தீர்ப்பை அவருக்கு கீழ் உள்ள அமைச்சரான கிருஷ்ணா திருத்த முயல்வது கண்டிக்கத்தக்கது.
ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான அமைச்சராக இருக்கும் கிருஷ்ணா, ஏதோ கன்னட அடிப்படைவாத அமைப்பின் தலைவரைப் போல செயல்படுவது சரியல்ல. இதற்காக அவரை பிரதமர் கண்டிப்பதுடன், தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும்.
அதே நேரத்தில், காவிரி பிரச்சினையில், கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் கைகோர்த்து செயல்பட்டு வரும் நிலையில், அவர்களை எதிர்கொண்டு, தமிழகத்திற்கு நீதி பெற்றுத்தர தமிழக கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடனடியாக தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.

Thursday, September 20, 2012

பிரமதர் சொல்லியும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கலைக்க வேண்டும்: ராமதாஸ், கோரிக்கை

சென்னை: பிரதமர் ஆணையிட்ட பிறகும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிரதமர் தலைமையில் நடந்த காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழகத்துக்கு வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிடும்படி கர்நாடகத்துக்குப் பிரதமர் ஆணை பிறப்பித்துள்ளார். அது தமிழகத்தின் தேவையில் பாதியைக்கூட பூர்த்தி செய்யாது. ஆனால் அதைக்கூட கர்நாடக அரசு ஏற்க மறுத்துவிட்டது.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் 3 அணைகள் நிரம்பி வழிகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையும் நிரம்பி வரும் நிலையில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீரைக்கூட தர முடியாது என கர்நாடகம் கூறுவது கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத்தைப் போலவே தமிழகத்திலும் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுவதால் நெய்வேலி உள்பட எந்த மின் நிலையத்தில் இருந்தும் கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்க முடியாது என்று தமிழக அரசு மறுத்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே அச்சுறுத்தலாக அமையும். எனவே, பிரதமர் அளிக்கும் தீர்ப்பைக் கர்நாடக அரசு ஏற்க வேண்டும். அப்படி ஏற்க மறுப்பது மத்திய அரசுக்கு மட்டுமின்றி, அரசியல் சட்டத்துக்கே விடப்பட்ட சவாலாக அமையும்.
இதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்

மக்களுக்கு கெடுதல் செய்வதில்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு போட்டி நிலவுகிறது: டாக்டர் ராமதாஸ் பேச்சு

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்த முதல் கட்சி பா.ம.க.தான் என்றும், இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க. கலந்து கொள்ளும் என்றும் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சமையல் கியாசுக்கு விதித்துள்ள கட்டுப்பாடு மற்றும் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை உடனடியாக திரும்பப் பெறக்கோரியும், தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தும் பா.ம.க. சார்பில் சென்னை மெமோரியல் ஹால் எதிரில் 19.09.2012 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
மக்களுக்கு நன்மை செய்வதில்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு போட்டி இருக்கவேண்டும். ஆனால், இப்போது கெடுதல் செய்வதில்தான் போட்டி நிலவுகிறது. ஆட்சிக்கு வந்த மாநில அரசு மக்கள் மீது ரூ.20 ஆயிரம் கோடி வரி விதித்தது. மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி வரி விதித்தது.

ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.32 ஆக இருந்தது. தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை 48 சதவீதம் உயர்ந்துள்ளது. டீசல் விலையில் 17 சதவீதம் வரி உள்ளது. தற்போது சிலிண்டர் கட்டுப்பாடு, டீசல் விலை உயர்வால் மக்களை மேலும் நசுக்குகிறார்கள்.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்த கட்சி பா.ம.க.தான். தொடர்ந்து பல போராட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறது. சில்லரை வணிகத்தை நம்பி சுமார் 4 கோடி பேர் இருக்கிறார்கள். வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் நுழைந்தால், 22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும், நுகர்வோர்களுக்கு நன்மை என்பதெல்லாம் ஏமாற்று வேலை. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டால் பன்னாட்டு நிறுவனங்களும், அமெரிக்காவும் மட்டுமே பயனடையும். எனவே, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டு அனுமதியை ரத்து செய்யவேண்டும். இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முழு அடைப்புக்கு பா.ம.க. ஆதரவு அளித்து கலந்து கொள்ளும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Tuesday, September 18, 2012

ராமதாஸ் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட் டிருப்பதால், அரிசி, காய்கறி உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இனி ஆண்டு 6 எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்பதும் மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கை ஆகும். இதனால் விறகு, கரி போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எரிபொருள் ஆதாரங்களை தேடிச் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர்.

மாநிலங்களவைத் தலைவர், மக்களவைத் தலைவர், மத்திய மந்திரிகள் ஆகியோருக்கு ஆண்டுக்கு 100 முதல் 200 எரிவாயு சிலிண்டர்கள் வரை மானிய விலையில் வழங்கும் அரசு, மக்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் கள்தான் எனக் கட்டுப்பாடு விதிப்பது கண்டிக் கத்தக்கது.

எனவே டீசல் விலை உயர்வு, சயைமல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி போன்ற மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை திரும்பப்பெற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு தொடர் முழக்க போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்திற்கு நான்  தலைமை ஏற்கிறேன். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை மறுநாள் (20-ந்தேதி) பொது வேலை நிறுத்தத்திற்கும் பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும். ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களில் பா.ம.க. வினரும் கலந்து கொள்வார்கள்’’ என்று கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: