சென்னை: சிந்தனையை, மானத்தை மழுங்கடிக்க மது மற்றும் இலவசங்களை திமுக, அதிமுக அரசுகள் வாரி இறைக்கின்றன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:ADVERTISEMENTஇந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சமூக, பொருளாதார சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும், வரைவுப் பட்டியலில் இருந்து தமிழகத்தின் நிலையை அறிய முடிகிறது.தமிழகத்தின் நிலை மிக மோசமாகவும், வேதனையளிப்பதாகவும் உள்ளது. தமிழ்நாட்டை 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் மாற்றி மாற்றி ஆட்சி செய்து வருகின்றன. இதில் அ.தி.மு.க. 25 ஆண்டுகளும், தி.மு.க. 22 ஆண்டுகளும் தமிழகத்தை நிர்வாகம் செய்துள்ளன.
எப்போதும் நலிவான நிலையில்.. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவது தான் எங்களது குறிக்கோள் என்று இரு கட்சிகளும் முழங்குவது வாடிக்கையாகிவிட்டது. தமிழகத்தின் இத்தனை அவலங்களுக்கும் காரணம் தமிழ்நாட்டு மக்களை எப்போதுமே நலிவடைந்த நிலையிலேயே வைத்திருந்தால் தான் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்ற திராவிடக் கட்சிகளின் மனநிலை தான்.
மனிதனின் சிந்தனையை மழுங்கடிக்க மது, மானத்தை மழுங்கடிக்க இலவசங்கள், கேள்வி கேட்கும் மனநிலையை மழுங்கடிக்க திரைப்படங்கள் ஆகியவை தான் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் முப்பெரும் உத்திகளாக உள்ளன. அதனால் தான் ஒருபுறம் இலவசங்களைக் கொடுத்துவிட்டு, மறுபுறம் ஏழைகள் உழைத்து வாங்கி வரும் ஊதியம் முழுவதையும் மதுவைக் கொடுத்து பறித்துக் கொள்ளும் அவலம் நடைபெறுகிறது.
மக்களுக்கு கல்வி வழங்கினால் அவர்கள் சிந்திக்கும் திறன் பெற்று ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் எழுப்புவார்கள்; மதுவைக் கொடுத்தால் மயங்கிய நிலையிலேயே கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டு செல்வர் என்ற மனநிலையில் இருந்து தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறாததால் தான் தமிழகம் முன்னேறவில்லை.
அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சீரழிந்து வருவதற்கு காரணம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் என்று வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகிறேன். மாநிலத்தைச் சீரழித்த இந்த இரு கட்சிகளுக்கும் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
No comments:
Post a Comment