Monday, July 20, 2015

என் படங்களில் இனி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது : அன்புமணிக்கு நடிகர் தனுஷ் உறுதி

 


மரியான், வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடிகர் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றன.  இதற்கு பலத்த எதிர்ப்புகள் இருந்து வந்தன.  இந்நிலையில் பாமக அன்புமணி நேற்று ஒரு கடிதம் எழுதினார்.  இதையடுத்து  சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இனி என் படத்தில் இடம்பெறாது என்று அறிவித்துள்ளார் தனுஷ்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., நடிகர் தனுஷுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  ‘’மாரி திரைப்படத்தின் ஏராளமான காட்சிகளில் நீங்கள் புகைபிடித்தபடி நடித்திருப்பது அதிர்ச்சிய ளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் உங்களுடைய ரசிகர்களாக இருக்கும் நிலையில் இந்த தவறன செயல் உங்கள் ரசிகர்களை புகையிலைக்கு அடிமையாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

 புகையிலைக்கு அடிமையாவோரில் 50% பேர், புகையிலையால் ஏற்படும் கொடிய நோய்க்கு பலியாகி உரிய வயதாகும் முன்பே வலிமிகுந்த மரணத்தை தழுவுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் புகைபழக்கத்துக்கு அடிமையாகும் உங்களது ரசிகர்களும் இடம்பெறக் கூடும்.

 தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூரியா, விக்ரம் உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து அதனை உறுதியாக பின்பற்றியும் வருகின்றனர். அதை விட முக்கியமாக, உங்களது மாமனாரும், தமிழ்திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், தனது ரசிகர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகப் பண்பாட்டில் மாமனார் என்பவர் தந்தைக்கு சமமானவராகக் கருதப்படுகிறார். தந்தையின் புகழைக் காப்பாற்றும் கடமை மகனுக்கு இருப்பது போல - மாமனாரின் புகழைக் காப்பாற்ற வேண்டிய கடமை மருமகனுக்கும் உண்டு. திரைப்படங்களில் புகைபிடிக்கும் உங்களது செயல் உங்களது மாமனார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் புகழுக்கு இழுக்கு செய்வதாக அமைகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டின் பல லட்சம் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும். மேலும், இனி திரைப்படங்களில் புகைபிடிப்பிடிக்க மாட்டேன் என பகிரங்கமாக அறிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக இளைஞர்களின் நலனுக்காக மட்டுமின்றி, உங்களது உடல்நலத்துக்காகவும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும் என்று உங்களது சகோதரனாக, ஒரு மருத்துவனாக கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள தனுஷ், ‘’உண்மையில் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது.  மாரி படத்தில் தாதா கேரக்டருக்காக இயக்குநர் வலியுறுத்தியதால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்தேன்.   இனிமேல் என் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  அன்புக்குரிய அன்புமணி ராமதாசுக்கும் இந்த அறிக்கை மூலம் உறுதி கூறுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: