பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து வரும் தமிழக அரசு, அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக ஆசிரியர்கள் இடமாற்ற விதிகள் மாற்றியமைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வு ஆண்டு தோறும் நடத்தப்படும். ஒரு பள்ளியில் ஓர் ஆண்டு பணியாற்றினால் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்று இடமாற்றம் பெற முடியும். ஆனால், நடப்பாண்டிற்கான இடம் மாறுதல் கலந்தாய்வில் இந்த விதி மாற்றப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணியாற்றியிருந்தால் மட்டும் தான் இக்கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பள்ளிக்கல்வித்துறை செயலர் தெரிவித்திருக்கிறார். இது அனைத்து ஆசிரியர்களுக்கும், குறிப்பாக ஆசிரியைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மாநில அளவில் நியமிக்கப்படுகின்றனர். இதனால், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர் அவரது சொந்த மாவட்டத்தில் பணியிடம் காலியாக இல்லாவிட்டால், அண்டை மாவட்டத்திலோ அல்லது அதைத் தாண்டிய மாவட்டத்திலோ தான் பணியில் சேர முடியும். அவ்வாறு பணியில் சேர்ந்து, குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பவர்கள் ஓராண்டு பணி செய்த பிறகு , சொந்த மாவட்டத்திற்கு இட மாறுதல் பெறுவர். ஆனால், புதிய விதி காரணமாக அவர்கள் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரிடும். இது அவர்களை கடுமையாக பாதிக்கும்.
புதிய விதிமுறையால் ஆசிரியைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுவர். கணவன், மனைவி ஆகிய இருவரில் ஒருவர் ஆசிரியராக இருக்கும் பட்சத்தில் கணவன் பணியிருக்கும் இடத்திற்கு மனைவியோ, மனைவி பணிபுயும் இடத்திற்கு கணவனோ இடமாற்றம் கோரும் பட்சத்தில் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால், கணவர் சொந்த தொழில் செய்பவராக இருக்கும் பட்சத்தில், இந்த விதியிலிருந்து ஆசிரியை விலக்கு பெற முடியாது. அவர் இப்போது பணியாற்றும் இடத்தில் தான் மூன்றாண்டுகளுக்கு பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். இது ஆசிரியைகளுக்கு தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் இடம் மாறுதல் கலந்தாய்வில் இத்தகைய விதிமுறை மாற்றம் இப்போது முற்றிலும் தேவையற்றதாகும். ஒருபுறம் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் எந்த வரையறைக்கும் உட்படாமல் இடமாறுதல்கள் செய்யப்படுகின்றன. இதற்கு ஒரே தகுதி பணம் தான். இப்போதும் கலந்தாய்வு அடிப்படையிலான இடமாறுதலை கடினமாக்கினால், நிர்வாக முறையிலான இட மாறுதலுக்கு தேவை அதிகரிக்கும்; இதைப் பயன்படுத்தி ஊழல் செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த விதி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, ஊழல் மற்றும் முறைகேட்டுக்கு வழி வகுக்கும் இந்த விதி மாற்றத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற ஆட்சியாளர்கள், இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகளை வழங்க வேண்டும்; 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கை இதுவரை கண்டு கொள்ளப்படவில்லை. தகுதித் தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை பா.ம.க.வும் கடந்த 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் நிறைவேற்றாத தமிழக அரசு, மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, 1200&க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மூடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசின் இந்த போக்கு தமிழகத்தில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக 15 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) முன் வைத்திருக்கிறது. அந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்காக வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சனிக்கிழமை சென்னையில் ஜாக்டோ அமைப்பினர் நடத்தும் தொடர் முழக்கப் போராட்டத்தை பா.ம.க. ஆதரிக்கும்; பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’
No comments:
Post a Comment