மது விற்பனை தொடர்பாக தவறான தகவல் தந்து உயர்நீதிமன்றத்தை ஏமாற்ற முயல்வதா? என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த அரசு மது நுகர்வை கட்டுப்படுத்தும் கொள்கையைத் தான் கடைபிடித்து வருவதாக கூறியிருக்கிறது. மேலும், இந்தக் கொள்கைப்படி கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. புள்ளிவிவரங்களையும், காரணங்களையும் திரித்துக் கூறி மக்களை மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தையும் ஏமாற்ற முயல்கிறது.
தமிழ்நாட்டில் தனியாரால் நடத்தப்பட்டு வந்த மதுக்கடைகள் கடந்த 29.11.2003 அன்று பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக்கின் கீழ் கொண்டு வரப்பட்டன. அப்போது டாஸ்மாக் கட்டுப்பாட்டில் 7621 மதுக்கடைகள் இருந்தன. இவற்றில் ஊரகப்பகுதிகளில் இருந்த மதுக்கடைகள் லாபம் ஈட்டவில்லை என்பதால் உடனடியாக மூடப்பட்டன. இதனால் அடுத்த ஓராண்டில் தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 6870 ஆக குறைந்து விட்டது. 2005 ஆம் ஆண்டில் இது 6699ஆக குறைந்தது. இவ்வாறு 922 கடைகள் மூடப்பட்டதற்கு காரணம் லாபம் இல்லை என்பது தானே தவிர, மக்களைக் காக்க வேண்டுமென்ற நல்ல எண்ணம் அல்ல. இதே காலகட்டத்தில் பள்ளிகளுக்கும் கோவில்களுக்கும் அருகிலுள்ள மதுக்கடைகளை மூடும்படி மக்கள் போராட்டம் நடத்தினாலும் அதனால் பயன் இல்லை.
2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை பா.ம.க. நடத்தியது. இதன்பயனாக 3 ஆண்டுகளில் 133 மதுக்கடைகளை திமுக அரசு மூடியது. அதுமட்டுமின்றி, காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12 வரை என்று இருந்த மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை காலை 10 முதல் இரவு 11 மணி வரை 13 மணி நேரமாக குறைத்தது. அதன்பின், 22.12.2008 அன்று பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் முதலமைச்சர் கலைஞரை சந்தித்து 2009 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் முதல் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி வலியுறுத்தினேன். எனது கோரிக்கைகளில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்ட கலைஞர், மதுக்கடைகளின் விற்பனை நேரம் மேலும் ஒரு மணி நேரம் குறைக்கப்படும்; தமிழகத்தில் இனி புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது என்றும் அறிவித்தார். அதன்பின் மேலும் 46 கடைகள் மூடப்பட்டதால் திமுக ஆட்சியின் முடிவில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 6520 ஆக குறைந்தது.
2011 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மீண்டும் பதவியேற்ற பிறகு புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் இனி புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது என சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு கொள்கை அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அதைமீறி 2012 ஆம் ஆண்டில் 278 புதிய மதுக்கடைகளையும், 2013 ஆம் ஆண்டில் 37 மதுக்கடைகளையும் அதிமுக அரசு திறந்தது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள வணிக வளாகங்களில் அதிக விலையுள்ள மது வகைகளை விற்பனை செய்யும் எலைட் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன்விளைவாக 2013 ஆண்டின் இறுதியில் தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை எண்ணிக்கை 6835 ஆக அதிகரித்தது. அதன்பின் தமிழகத்திலுள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 315 புதிய மதுக்கடைகளை திறந்த அதிமுக அரசு, மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டதாக கூறுவது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
மது நுகர்வை குறைப்பது தான் அரசின் கொள்கை என தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது நகைப்பைத் தான் வரவழைக்கிறது. இன்றைய நிலையில், தமிழ்நாடு முழுவதும் 1500 மதுக்கடைகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற ஆணைப்படி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் திறக்கப் பட்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நாகரீக குடிப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மது விற்பனை 6% குறைந்து விட்டதால் அதிர்ச்சியடைந்துள்ள தமிழக அரசு மது விற்பனையை அதிகரிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. மது விற்பனை மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.30,000 கோடி வருவாய் ஈட்டும் தமிழக அரசு மதுவின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக ரூ. 1 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. இந்த தொகையும் பயனுள்ள வகையில் செலவிடப்படுகிறதா? என்பதும் தெரியவில்லை. இதுதான் மது நுகர்வைக் கட்டுப்படுத்தும் லட்சணமா? மது நுகர்வு குறைக்கப் பட்டிருந்தால் பச்சிளம் குழந்தைகளும், பள்ளி மாணவியும் மது அருந்தும் அவலம் ஏற்பட்டிருக்குமா?
தமிழ்நாட்டில் மது வருவாயும், மதுவின் தீமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையில் நடைபெறும் மது ஒழிப்பு போராட்டங்களுக்கு பெண்கள் திரண்டு வருவதே இதற்கு சாட்சியாகும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களின் இந்த கோபம் எதிரொலிக்கும்; பொய்யான தகவல்களை நீதிமன்றத்திற்கு தெரிவித்த இந்த அரசை தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment