இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டு மக்கள் நலனில் தங்களுக்கு சற்றும் அக்கறை இல்லை என்பதையும், மக்கள் மாண்டாலும் மது வருமானத்தை பெருக்குவது தான் தங்கள் கொள்கை என்பதையும் அ.தி.மு.க. அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. தமிழகத்திலுள்ள 226 வட்டங்களிலும் தலா 2 கடைகள் வீதம் மொத்தம் 452 எலைட் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிர்வாக சீர்கேடுகளால் அரசின் நிதிநிலைமை மோசமடைந்து இருப்பதாகவும், இலவசத் திட்டங்களுக்கு நிதி இல்லை என்றும் தெரிகிறது. இதை சமாளிக்கவே எலைட் மதுக்கடைகள் திறக்கப்படவிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த சில வாரங்களில் எலைட் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என ஆணையிடப்பட்டிருப்பதால் அதற்கான ஏற்பாடுகளில் டாஸ்மாக் நிறுவனத்தின் மாவட்ட அளவிலான அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
வட்டத் தலைநகரங்களில் எலைட் மதுக்கடைகளை திறக்கும் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றதுமே பணக்காரர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 200 எலைட் மதுக்கடைகளை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு காரணமாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாலும் இந்த திட்டத்தை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. பின்னர் 2013 ஆம் ஆண்டு அக்டோபரில் ஓசையின்றி சென்னை உள்ளிட்ட 10 மாநராட்சிகளிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் எலைட் மதுக்கடைகளை அரசு திறந்தது. 200 கடைகளை திறக்க இலக்கு நிர்ணயித்திருந்த அரசு அவற்றில் பெரும்பாலானவற்றை திறந்து விட்டது. எனினும், அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் போதாது என்பதற்காக இப்போது மேலும் 226 எலைட் மதுக்கடைகளை திறக்க திட்டமிட்டிருக்கிறது.
மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசு, அதன் திட்டச்செலவுகளுக்கான முதன்மை ஆதாரமாக மது விற்பனையை நம்பியிருப்பது தலைகுனிய வேண்டிய விஷயமாகும். மது விற்பனை மூலம் வருமானம் கிடைப்பதாக அரசு நம்பிக்கொண்டிருந்தாலும், மதுவால் அரசுக்கு கிடைக்கும் வருவாய் குறைகிறது என்பது தான் உண்மை. தெருவுக்குத்தெரு திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் தொழிலாளர்களும், இளைஞர்களும் மது அருந்தி மயங்கி விடுவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி தடைபடும்போது மாநிலத்தின் வருவாய் பெருமளவில் குறையும். இதை உணராத அரசு மதுவைக் கொடுத்து மக்களை கெடுப்பதுடன், அதன் வருவாய் ஆதாரங்களையும் அழித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தை மதுவிலிருந்து மீட்டெடுக்கவே முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சி நடத்திவரும் மது ஒழிப்பு போராட்டங்களின் பயனாக மதுவின் கொடுமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூடுதலாக 226 மதுக்கடைகளை திறக்க அதிமுக அரசு துடிக்கிறதென்றால் மக்களின் உணர்வுகளை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் இதுவரைக் குடிக்காதவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி அதன் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தான் அரசின் திட்டம். இது மிகவும் குரூரமானது; உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் எலைட் மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அதைவிடுத்து எலைட் மதுக்கடைகளை திறக்க அரசு முயன்றாலோ, சாதாரண மதுக்கடைகளை புதிதாக திறக்க முயன்றாலோ பா.ம.க.வைச் சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் திரண்டு அறவழியில் போராட்டம் நடத்தி மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை முறியடிப்பர் என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment