தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு இதுவரை ஒரு மெகாவாட் மின்திட்டம் கூட உருவாக்கி செயல்படுத்தப்படவில்லை என்பதை பலமுறை ஆதாரங்களுடன் கூறியிருக்கிறேன். ஆந்திராவிலும், வட இந்தியாவிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு சொந்தம் கொண்டாடுவது மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல் ஆகும். இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை அடிப்படையாக வைத்து தமிழக எதிர்க்கட்சிகள் சில குற்றச்சாற்றுகளை முன்வைத்திருந்தன. அக்குற்றச்சாற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 4 ஆண்டுகளில் 5346 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்க வகை செய்யப்பட்டிருப்பதாகவும், இது வரலாற்று சாதனை என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு இதுவரை ஒரு மெகாவாட் மின்திட்டம் கூட உருவாக்கி செயல்படுத்தப்படவில்லை என்பதை பலமுறை ஆதாரங்களுடன் கூறியிருக்கிறேன். ஆனாலும், தமிழகத்தில் தங்களின் திட்டங்களால் தான் மின்னுற்பத்தி அதிகரித்ததாக அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பொய்ப்பரப்புரை செய்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மின்திட்டங்கள் குறித்த பட்டியலை வெளியிடும்படி பலமுறை வலியுறுத்தியும் அதை அரசு தவிர்த்து வந்தது. இப்போது அப்பட்டியலை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. ஆனால், இதில் ஒரு மெகாவாட் மின் திட்டத்தைக்கூட அதிமுக அரசு தயாரித்து செயல்படுத்தவில்லை என்று மீண்டும் ஒருமுறை குற்றஞ்சாற்றுகிறேன். தமிழ்நாட்டுக்கு கூடுதலாக கிடைக்கும் மின்சாரத்தை 3 வகைகளாக பிரிக்கலாம். இவற்றில், முதலாவது தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் நேரடியாக செயல்படுத்தப்பட்ட மின்திட்டங்கள், இரண்டாவது மின் வாரியமும் மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் கூட்டாக செயல்படுத்திய திட்டங்கள், மூன்றாவது மத்திய அரசு திட்டங்கள் மற்றும் தனியார் ஒப்பந்தங்கள் மூலம் பெறப்படும் மின்சாரமாகும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் 1,800 மெகாவாட் அனல் மின்சாரமும், 97.5 மெகாவாட் நீர் மின்சாரமும் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது. அனல் மின்சாரத்தைப் பொறுத்தவரை மேட்டூர் மற்றும் இரு அலகு வட சென்னை மின்திட்டங்கள் மூலம் தலா 600 மெகாவாட் வீதம் இம்மின்சாரம் பெறப்படுகிறது. இம்மின்திட்டங்கள் அனைத்தும் முந்தைய திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டவை. மேட்டூர் மின்திட்டத்திற்கு 2.05.2007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு 25.06.2008 அன்று பணிகள் தொடங்கப்பட்டன. அதேபோல், வடசென்னை இரு மின்திட்டங்களுக்கும் 26.06.2007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு முறையே 18.02.08., 16.08.08 ஆகிய தேதிகளில் பணிகள் தொடங்கின. 30 மாதங்களில் இப்பணிகள் நிறைவடையும் என அப்போதைய மின்துறை அமைச்சர் அறிவித்தித்திருந்ததால் கடந்த ஆட்சியில் இவை உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், பணிகள் முடியாத நிலையில், மீதமுள்ள பணிகளை அதிமுக அரசு முடித்து கடந்த 2013&14 ஆண்டுகளில் இந்த மின்திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கின. 97.5 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்திட்டங்களும் முந்தைய ஆட்சி மற்றும் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டவை தான்; அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டவையல்ல.
அதேபோல் கூட்டு முயற்சித் திட்டங்களின் மூலம் வல்லூரிலுள்ள 3 அலகுகளில் இருந்து 1050 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. கடந்த மாதம் செயல்படத் தொடங்கிய தூத்துக்குடி மின்திட்டத்தில் 220 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்ததிட்டங்களை தேசிய அனல் மின்கழகமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் தான் செயல்படுத்தின என்பதால் இதில் தமிழக அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. அதுமட்டுமின்றி, இத்திட்டங்களும் முந்தைய ஆட்சியில் தான் தொடங்கப்பட்டன. மூன்றாவதாக, 898 மெகாவாட் மின்சாரம் கூடங்குளம், என்.எல்.சி, ஆந்திராவிலுள்ள சிம்மாத்ரி ஆகிய மத்திய மின் திட்டங்களிலிருந்து பெறப்படுகிகிறது.1282 மெகாவாட் மின்சாரம் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் பெறப்படுகிறது. இம்மின்சார உற்பத்தியில் தமிழக அரசுக்கு எந்தவித பங்கும் கிடையாது.
தமிழகத்திற்கு கூடுதலாக கிடைக்கும் 5346 மெகாவாட் மின்சாரத்தில் 1897 மெகாவாட் மின்சாரம் தவிர மற்ற மின்சாரத்தின் உற்பத்தியில் தமிழக அரசுக்கு தொடர்பு கிடையாது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நேரடியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் கூட முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டவை. கடந்த ஆட்சியில் முடிக்கப்பட்டது போக மீதமுள்ள பணிகளைத் தான் அ.தி.மு.க. அரசு செய்தது. இதற்காக இந்தத் திட்டங்களில் சொந்தம் கொண்டாட முடியாது. அவ்வாறு இருக்கும்போது அனைத்துத் திட்டங்களையும் தாங்கள் தான் செயல்படுத்தியதாக அ.தி.மு.க. அரசு கூறுவது கண்டிக்கத்தக்கது. ஆந்திராவிலும், வட இந்தியாவிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு சொந்தம் கொண்டாடுவது மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல் ஆகும். இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திட்டமிட்டு செயல்பட்டால் 3 ஆண்டுகளில் ஒரு மின்திட்டத்தை நிறைவேற்ற முடியும். தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்களின் திறன் 8050 மெகாவாட் ஆகும். இத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி இருந்தால் அது அதிமுக அரசின் சாதனை என்று கூறிக்கொள்வதில் அர்த்தம் உண்டு. ஆனால், மின் திட்டங்களை செயல்படுத்தாதது மட்டுமின்றி உடன்குடி மின்திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்த புள்ளியையே ரத்து செய்தது தான் இந்த அதிமுக அரசு. எனவே, அதிமுக அரசு அதன் செயலுக்காக வருந்த வேண்டுமே தவிர, பீற்றிக்கொள்ளக்கூடாது.
No comments:
Post a Comment