Thursday, October 10, 2013

தேவர் குருபூஜைக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் போராட்டத் தலைவரும், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்தவர்களில் ஒருவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106 ஆவது பிறந்தநாள் விழாவும், 51 ஆவது குருபூசையும் வரும் 30 ஆம் தேதி அவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டைப் போடும்வகையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 (1) தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது.
தமிழக அரசின் காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவின்படி, குருபூஜை விழா நடைபெறும் பசும்பொன் கிராமம் உட்பட மாவட்டம் முழுவதும் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது; வாடகை வாகனங்களிலும், இரு சக்கர ஊர்திகளிலும், பொதுமக்கள் வரக்கூடாது என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது; அரசியல் தலைவர்கள் 3-க்கும் மேற்பட்ட ஊர்திகளில் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், கடந்த 50 ஆண்டுகளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை பொலிவில்லாத, சாதாரணமான விழாவாக நடத்த வேண்டிய சூழலை தமிழக அரசு திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. இது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை  கடவுளாக வணங்கும் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தும் செயல் என்பது மட்டுமின்றி, தேசியத் தலைவராக திகழும் தேவர் திருமகனாருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமரியாதையும் ஆகும்.
 இந்திய அரசியல் சட்டத்தின் 19(பி), 19(டி) ஆகிய பிரிவுகளின்படி, பொதுமக்கள் எந்த ஓரிடத்திலும் அமைதியாக கூடுவதற்கும், நடமாடுவதற்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அடிப்படை உரிமைகளைக் கூட பறிக்கும் வகையில் தமிழக அரசின் தடைகள் அமைந்திருக்கின்றன. தேவர் பெருமகனாரின் குருபூஜை விழா அரசு விழாவாகவும், முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. அத்தகைய விழாவிற்கு தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும்.
குருபூஜையை அமைதியாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று தமிழக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. லட்சக்கணக்கில் மக்கள் கூடும் விழாக்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இயல்பானது தான். அத்தகைய கட்டுப்பாடுகள் விழாவின் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, விழாவின் கோலாகலத்தை குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது. கடந்த 50 ஆண்டுகளாக தேவர் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு வருபவர்களால் ஒருமுறை கூட பிரச்சினையோ அல்லது மோதலோ ஏற்பட்டதில்லை.
எனவே, தேவர் குருபூஜை விழாவிற்கு விதிக்கப்பட்டுள்ள 144(1) தடையாணை உள்ளிட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு நீக்க வேண்டும். கடந்த காலங்களில் தேவர் குருபூஜை விழா எவ்வளவு சிறப்பாக கொண்டாடப்பட்டதோ, அதேஅளவு உற்சாகத்துடன், இந்த ஆண்டும்  கொண்டாடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்; அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: