Friday, October 25, 2013

செய்யூர் அனல் மின்நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்: ராமதாஸ்



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் ரூ.24 ஆயிரம் கோடியில் 4000 மெகாவாட் திறன் கொண்ட அதிஉயர்சக்தி அனல் மின் நிலையம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மின் திட்டத்திற்கு நிதிஉதவி வழங்கவிருக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மின் நிலையம் அமைக்கப்படவிருக்கும் இடத்தை நேற்று முன்தினம் பார்வையிடச் சென்ற போது அவர்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் கடுமையான மின்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதைப் போக்கவும், எதிர்கால மின் தேவையை சமாளிக்கவும் இது போன்ற மின்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். அதேநேரத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கித் தருபவையாக இருக்க வேண்டுமே தவிர, மக்களின் வாழ்வாதாரங்களை பறிப்பவையாக இருக்கக் கூடாது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். செய்யூர் அனல் மின் நிலையம் அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்காக ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக செய்யூரை அடுத்துள்ள 5 கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட இருப்பதால் அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி, வீடுகளையும் இழந்து இடம்பெயர வேண்டியிருக்கும். பனையூர் பெரியக்குப்பம், சித்தர்காடு, கங்கதேவன் குப்பம், வேடல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்படுவதால் மாணவர்கள் கல்வியை இழக்கும் நிலை உருவாகும்.
பொதுவாக அனல் மின் நிலையங்கள் ஒதுக்குப்புறமான பகுதிகளில் தான் அமைக்கப்படும். ஆனால் செய்யூர் அனல் மின் நிலையம் மக்கள் வாழும் பகுதிகளில் வேளாண் விளைநிலங்களுக்கு அருகில் அமைக்கப்படஉள்ளது. செய்யூர் பகுதியில்  80 ஏரிகள் உள்ளிட்ட ஏராளமான நீர் நிலைகள் உள்ளன.   இவை தவிர இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் அரண்களான சதுப்புநிலக் காடுகளும், மணல் குன்றுகளும் பெருமளவில் உள்ளன. சுற்றுச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் அது அப்பகுதியின் சூழலியல் அமைப்புக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும். விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல் உள்ளிட்ட கழிவுகளும் விவசாயத்தை  கடுமையாக பாதிக்கும். பனையூர் பெரியகுப்பத்தில் நிலக்கரி இறக்குவதற்காக துறைமுகம் அமைக்கப்பட இருப்பதால் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
இதுபோன்ற பகுதிகளில் மின் நிலையங்களை அமைப்பது தவறு என்று சுற்றுச்சூழல் விதிமுறைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த அனல் மின்நிலையம் பயன்பாடற்ற தரிசு நிலப்பகுதியில் தான் அமைக்கப்பட இருப்பதாகவும், இப்பகுதியில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் எதுவும் இல்லை என்றும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் தவறான தகவல்களைக் கூறி  இத்திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்தும் மத்திய பொதுத்துறை நிறுவனமான மின் நிதிக் கழகம் தொடக்கம் முதலே இப்பகுதி மக்களின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு மின்சாரம் தேவை தான் என்ற போதிலும், சுற்றுச்சூழல் ரீதியாக இவ்வளவு பாதிப்புகளை தாங்கிக் கொண்டு இந்த மின்திட்டத்தை செயல்படுத்துவது கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயலாகவே அமையும். அதுமட்டுமின்றி, செய்யூர் மின்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் 4000 மெகாவாட் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட போவதில்லை. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 2400 மெகாவாட் மின்சாரம் ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியம், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குத் தான் வழங்கப்படவுள்ளன.
மின்சாரத்தைவிட லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமும், இயற்கை பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதால் செய்யூர் அதிஉயர்சக்தி மின் திட்டத்தை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். வாய்ப்பு இருந்தால் வடசென்னை பகுதியில் ஏற்கனவே பல்வேறு மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிக்கு இத்திட்டத்தையும் மாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: