Saturday, October 12, 2013

ரூ.2 லட்சம் கோடி மணல் கொள்ளை: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆற்று மணல் கொள்ளையை தடுக்கத் தவறியவர்கள் மீதும், மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைப் போலத் தோன்றினாலும், இது உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி ஆகும். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை இன்று, நேற்றல்ல... கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த அனைத்து மணல் குவாரிகளையும் கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அரசே அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
இந்த மணல் குவாரிகள் அனைத்தும் பெயரளவில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதிலும், இவற்றில் மணல் அள்ளும் உரிமம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதைப் பயன்படுத்திக்கொண்டு  தனியார் நிறுவனங்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள மணல் வளம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான மணல் வணிகர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியில் தனிநபர் ஒருவர்  சுமார் 44 ஆயிரம் லாரி மணலை சட்டவிரோதமாக குவித்து வைத்து விற்பனை செய்து வந்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் இதேநிலை தான் காணப்படுகிறது. மொத்தத்தில்  அள்ளப்படும் மணலில் ஒரு விழுக்காடு கூட கணக்கில் காட்டப்படுவதில்லை. கடந்த 2012&13 ஆண்டில் மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.188 கோடி. அதேநேரத்தில் மணல் கொள்ளையர்களுக்கு கிடைத்த லாபம் ரூ. 15 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
மணல் குவாரிகளை அரசு ஏற்றதில் தொடங்கி இன்று வரையிலான 11 ஆண்டுகளில் மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகம் எனத் தெரிகிறது. இந்தியாவையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழலை விட இது மிகப்பெரிய ஊழலாகும். இதை மட்டும் அரசு தடுத்திருந்தால் தமிழக அரசின் ரூ. 1.55 லட்சம் கோடி கடனை அடைத்திருக்க முடியும் என்பதுடன், பேரூந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சுமைகளை விதித்து மக்களை சிரமப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நான் போராடி வருகிறேன். சட்டப்பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் மணல் கொள்ளைக்கு எதிராக எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் மணல் கொள்ளைக்கு எதிராக எங்களின் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் இளவழகன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்து சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். தமிழகத்தில் உள்ள பல ஆற்றுப்படுகைகளில் நானும், எங்கள் கட்சியினரும் நேரடியாக களமிறங்கி மணல் கொள்ளையை தடுத்தோம். மணல் கொள்ளை குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இந்த நிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மணல் கொள்ளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் ஆணையிட்டிருக்கிறது. இதன் மூலம் எனது நிலைப்பாடு மிகவும் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  அதேநேரத்தில், காஞ்சிபுரம் மணல் கொள்ளை என்பது ஊழலின் ஒரு சிறு பகுதி தான்; தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. மணல் கொள்ளைக்கு அதிகாரிகளை மட்டுமே பொறுப்பாக்கி விட்டு ஆட்சியாளர்களை தப்ப வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. ஆட்சியாளர்களின் துணை இல்லாமல் மணல் கொள்ளை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.
எனவே, கடந்த 2003 ஆண்டில் தொடங்கி இன்று வரையிலான 11 ஆண்டுகளில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற மணல் கொள்ளை குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அதனடிப்படையில் மணல் கொள்ளைக்கு மூல காரணமாக இருந்த ஆட்சியாளர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: