Tuesday, October 22, 2013

அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் போதிய அளவு மாணவர்கள் சேராத அரசு தொடக்கப்பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும் மூட அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேராத பள்ளிகளை இணைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், அத்தகைய பள்ளிகளின் பட்டியலை உடனடியாக தயாரித்து அனுப்பும் படியும் உயரதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். அதனடிப்படையில் இணைக்கப்பட உள்ள பள்ளிகளின்  பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எந்த நேரமும் இது செயல்படுத்தப்படலாம் என்றும் தெரிகிறது.
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன என்று அரசுத் தரப்பில் பூசி மெழுகும் வார்த்தைகளால் கூறப்பட்டாலும், 2 அல்லது 3 பள்ளிகளை இணைத்து ஒரே பள்ளியாக்கி விட்டு மீதமுள்ள பள்ளிகளை மூடுவது தான் தமிழகஅரசின் திட்டமாகும். தொலைநோக்குப் பார்வையில்லாத, மாணவர்கள் நலனுக்கு எதிரான இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும்.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விகிதம் வேகமாக குறைந்து வருகிறது என்பது உண்மை தான். இது அரசின் குற்றமே தவிர, மாணவர்களின் குற்றமோ அல்லது பெற்றோர்களின் குற்றமோ அல்ல. அரசு பள்ளிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்  என தமிழக அரசு அறிவித்து பல ஆண்டுகள் ஆகும் போதிலும் இன்று வரை அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
அண்மையில் தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தமிழகத்தில் 2253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான் பணியில் இருக்கிறார்கள் என்றும், இவற்றில் பல பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மேல்நிலைப்பள்ளிகள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதைவிடக் கொடுமை என்னவெனில், 16 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்பதால் சத்துணவு அமைப்பாளர்கள்  மாணவர்களை கவனித்துக் கொள்கிறார்கள் என்பது தான். இத்தகைய அவலநிலையில் அரசு பள்ளிகள் இருப்பதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் என கல்வி கற்பதற்குத் தேவையான எதுவுமே இல்லாததால் தான் கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் தரம் குறைந்தவை என்பதைக் கூட அறியாமல் தங்களின் குழந்தைகளை அங்கு சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்ததற்கு இது தான் காரணம் ஆகும். அரசுப் பள்ளிகளில் காணப்படும் குறைகளைக் களைந்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது என்பது காலில் ஏற்பட்ட புண்ணை குணப்படுத்துவதற்குப் பதிலாக காலையே வெட்டி எடுப்பதற்கு சமமானதாகும்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. கல்வியில் பின்தங்கிய விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தக் குறைகளை சரி செய்து அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி , போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். எனவே, குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடும் முடிவைக் கைவிட்டு, அந்தப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: