சென்னை: இலங்கை இனப்பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் தமிழக மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பிரதமர் உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், அம்மாநாட்டில் இந்தியா நிச்சயமாக பங்கேற்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்து உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே, உலக நாடுகளின் கண்டனத்திலிருந்து தப்புவதற்காகவே காமன்வெல்த் மாநாட்டை கொழும்புவில் நடத்தத் துடிக்கிறார். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் தார்மீகக் கடமை இந்திய அரசுக்கு இருக்கும் நிலையில், இராஜபக்சே தப்பிக்க இந்தியா துணை போகக் கூடாது.எனவே, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக தமிழக சட்டப்பேரவையிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்தநிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கண்டிப்பாக பங்கேற்கும் என்றும், இந்தியக் குழுவுக்கு தலைமை தாங்கப் போவது குடியரசுத் தலைவரா, பிரதமரா, குடியரசுத் துணைத் தலைவரா அல்லது தாமா? என்பது தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.கூட்டாட்சித் தத்துவத்தின்படி மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களை ஆராய்ந்து சாதகமான முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை மதிக்காமல், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று சல்மான் குர்ஷித் கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமலும், இலங்கையுடன் உறவு வைத்துக் கொள்ளாமலும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது? என்று சல்மான் குர்ஷித் கேட்டிருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும். இம்மாதத் தொடக்கத்தில் இலங்கை சென்ற குர்ஷித் தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் தாக்கப்படுவது குறித்தோ அல்லது கைது செய்யப்படுவது குறித்தோ எதுவும் பேசவில்லை.மாறாக இராஜபக்சேவின் குரலாக மாறி, தமிழக மீனவர்கள் பேராசையுடன் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கை கடல் வளங்களையும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிப்பதாக குற்றஞ்சாற்றினார்.அது மட்டுமின்றி, மீனவர் நலன் சம்பந்தப்பட்ட கச்சத்தீவு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தடை விதித்தவரும் இவர் தான். இப்படிப்பட்டவர் தான் தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்காகவே காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதாக கூறுகிறார். அமைச்சரின் பேச்சைக் கேட்கும் போது ஆடு ஓநாய் பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் கூறியிருக்கிறார். இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்காத நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று குர்ஷித் கூறுகிறார் என்றால், அவர் பிரதமரை விட அதிக அதிகாரம் பெற்றவரா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை இனப்பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் தமிழக மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பிரதமர் உடனடியாக பதவி நீக்க வேண்டும்.காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பதுடன், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Sunday, October 27, 2013
தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் சல்மான் குர்ஷிதை பிரதமர் பதவி நீக்க வேண்டும்: ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment