Wednesday, October 30, 2013

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை: அன்னதானம் வழங்கி மரியாதை செலுத்திய பாமகவினர்



ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும் பொன்னில் ஆண்டுதோறும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா, அக்டோபர் 28 முதல் 30–ந்தேதி வரை 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை திங்கட்கிழமை தொடங்கியது.
விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இந்த ஆண்டு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் சில அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு செல்ல முடியவில்லை.
இந்தநிலையில் திண்டிவனத்தில் பாமக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமையில் சுமார் 100 பேர் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். மேலும், 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.
தமிழகம் முழுவதும் உள்ள முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்கள், தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையில் கலந்து கொள்ள செல்வார்கள். ஆனால் வடமாவட்டங்களில் இதுபோன்று இதுவரை செய்ததில்லை. இந்த வருடம் முதல் முறையாக இதுபோன்று பாமகவினர் செய்துள்ளனர். இதுகுறித்து பாமகவினர் கூறியதாவது, அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பாக தேவருக்கு மரியாதை செலுத்தியும், அன்னதானமும் வழங்கியுள்ளோம் என்றனர்.

Tuesday, October 29, 2013

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்: ராமதாஸ்



இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி  ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.9300 அடிப்படை ஊதியம், ரூ.4200 தர ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து தொடக்க ஊதியமாக ரூ.27,100 வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் மாநில அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியம், ரூ.2800 தர ஊதியம், ரூ.750 சிறப்பு ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து ரூ. 17,165 மட்டுமே தொடக்க ஊதியமாக வழங்கப் படுகிறது. அதாவது மத்திய அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை விட மாநில அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மாதம் சுமார் ரூ.10,000 குறைவாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரே விதமான பணியை செய்யும் மத்திய மற்றும் மாநில அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இருவேறு ஊதியம் வழங்கப்படுவது  சரியல்ல. இது மாநில அரசு ஆசிரியர்களுக்கு செய்யப்படும் துரோகம் ஆகும்.
ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களையக் கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அவர்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை.  ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைவது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க அதிகாரி ராஜீவ்ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. ஆசிரியர்களின் குறைகளை களைய வேண்டிய அக்குழு, ‘‘ இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் பணியாற்றுகின்றனர்; அங்கு விலைவாசி குறைவாக இருப்பதால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கத் தேவையில்லை’’ என்ற அதிமேதாவித்தனமான பரிந்துரையை அரசுக்கு அளித்தது. அரசும் அதையேற்று ஊதிய உயர்வு அளிக்க மறுத்தது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை. இதனால் 10 ஆண்டுகளுக்கும் குறைவான பணி மூப்பு கொண்ட சுமார் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1.2 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
ஏழாவது ஊதியக் குழுவும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஓய்வுக்காலத்தை ஆசிரியர்கள் நிம்மதியாக கழிக்கும் வகையில் புதிய ஓய்வூதியக் கொள்கையை கைவிட்டு, பழைய ஓய்வூதியக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், காப்பீட்டையும்  இப்போதுள்ள ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர்  மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Sunday, October 27, 2013

தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் சல்மான் குர்ஷிதை பிரதமர் பதவி நீக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இலங்கை இனப்பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் தமிழக மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பிரதமர் உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், அம்மாநாட்டில் இந்தியா நிச்சயமாக பங்கேற்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்து உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே, உலக நாடுகளின் கண்டனத்திலிருந்து தப்புவதற்காகவே காமன்வெல்த் மாநாட்டை கொழும்புவில் நடத்தத் துடிக்கிறார். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் தார்மீகக் கடமை இந்திய அரசுக்கு இருக்கும் நிலையில், இராஜபக்சே தப்பிக்க இந்தியா துணை போகக் கூடாது.எனவே, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக தமிழக சட்டப்பேரவையிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்தநிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கண்டிப்பாக பங்கேற்கும் என்றும், இந்தியக் குழுவுக்கு தலைமை தாங்கப் போவது குடியரசுத் தலைவரா, பிரதமரா, குடியரசுத் துணைத் தலைவரா அல்லது தாமா? என்பது தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.கூட்டாட்சித் தத்துவத்தின்படி மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களை ஆராய்ந்து சாதகமான முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை மதிக்காமல், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று சல்மான் குர்ஷித் கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமலும், இலங்கையுடன் உறவு வைத்துக் கொள்ளாமலும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது? என்று சல்மான் குர்ஷித் கேட்டிருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும். இம்மாதத் தொடக்கத்தில் இலங்கை சென்ற குர்ஷித் தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் தாக்கப்படுவது குறித்தோ அல்லது கைது செய்யப்படுவது குறித்தோ எதுவும் பேசவில்லை.மாறாக இராஜபக்சேவின் குரலாக மாறி, தமிழக மீனவர்கள் பேராசையுடன் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கை கடல் வளங்களையும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிப்பதாக குற்றஞ்சாற்றினார்.அது மட்டுமின்றி, மீனவர் நலன் சம்பந்தப்பட்ட கச்சத்தீவு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தடை விதித்தவரும் இவர் தான். இப்படிப்பட்டவர் தான் தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்காகவே காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதாக கூறுகிறார். அமைச்சரின் பேச்சைக் கேட்கும் போது ஆடு ஓநாய் பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் கூறியிருக்கிறார். இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்காத நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று குர்ஷித் கூறுகிறார் என்றால், அவர் பிரதமரை விட அதிக அதிகாரம் பெற்றவரா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை இனப்பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் தமிழக மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பிரதமர் உடனடியாக பதவி நீக்க வேண்டும்.காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பதுடன், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Friday, October 25, 2013

செய்யூர் அனல் மின்நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்: ராமதாஸ்



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் ரூ.24 ஆயிரம் கோடியில் 4000 மெகாவாட் திறன் கொண்ட அதிஉயர்சக்தி அனல் மின் நிலையம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மின் திட்டத்திற்கு நிதிஉதவி வழங்கவிருக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மின் நிலையம் அமைக்கப்படவிருக்கும் இடத்தை நேற்று முன்தினம் பார்வையிடச் சென்ற போது அவர்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் கடுமையான மின்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதைப் போக்கவும், எதிர்கால மின் தேவையை சமாளிக்கவும் இது போன்ற மின்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். அதேநேரத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கித் தருபவையாக இருக்க வேண்டுமே தவிர, மக்களின் வாழ்வாதாரங்களை பறிப்பவையாக இருக்கக் கூடாது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். செய்யூர் அனல் மின் நிலையம் அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்காக ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக செய்யூரை அடுத்துள்ள 5 கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட இருப்பதால் அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி, வீடுகளையும் இழந்து இடம்பெயர வேண்டியிருக்கும். பனையூர் பெரியக்குப்பம், சித்தர்காடு, கங்கதேவன் குப்பம், வேடல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்படுவதால் மாணவர்கள் கல்வியை இழக்கும் நிலை உருவாகும்.
பொதுவாக அனல் மின் நிலையங்கள் ஒதுக்குப்புறமான பகுதிகளில் தான் அமைக்கப்படும். ஆனால் செய்யூர் அனல் மின் நிலையம் மக்கள் வாழும் பகுதிகளில் வேளாண் விளைநிலங்களுக்கு அருகில் அமைக்கப்படஉள்ளது. செய்யூர் பகுதியில்  80 ஏரிகள் உள்ளிட்ட ஏராளமான நீர் நிலைகள் உள்ளன.   இவை தவிர இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் அரண்களான சதுப்புநிலக் காடுகளும், மணல் குன்றுகளும் பெருமளவில் உள்ளன. சுற்றுச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் அது அப்பகுதியின் சூழலியல் அமைப்புக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும். விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல் உள்ளிட்ட கழிவுகளும் விவசாயத்தை  கடுமையாக பாதிக்கும். பனையூர் பெரியகுப்பத்தில் நிலக்கரி இறக்குவதற்காக துறைமுகம் அமைக்கப்பட இருப்பதால் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
இதுபோன்ற பகுதிகளில் மின் நிலையங்களை அமைப்பது தவறு என்று சுற்றுச்சூழல் விதிமுறைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த அனல் மின்நிலையம் பயன்பாடற்ற தரிசு நிலப்பகுதியில் தான் அமைக்கப்பட இருப்பதாகவும், இப்பகுதியில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் எதுவும் இல்லை என்றும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் தவறான தகவல்களைக் கூறி  இத்திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்தும் மத்திய பொதுத்துறை நிறுவனமான மின் நிதிக் கழகம் தொடக்கம் முதலே இப்பகுதி மக்களின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு மின்சாரம் தேவை தான் என்ற போதிலும், சுற்றுச்சூழல் ரீதியாக இவ்வளவு பாதிப்புகளை தாங்கிக் கொண்டு இந்த மின்திட்டத்தை செயல்படுத்துவது கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயலாகவே அமையும். அதுமட்டுமின்றி, செய்யூர் மின்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் 4000 மெகாவாட் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட போவதில்லை. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 2400 மெகாவாட் மின்சாரம் ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியம், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குத் தான் வழங்கப்படவுள்ளன.
மின்சாரத்தைவிட லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமும், இயற்கை பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதால் செய்யூர் அதிஉயர்சக்தி மின் திட்டத்தை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். வாய்ப்பு இருந்தால் வடசென்னை பகுதியில் ஏற்கனவே பல்வேறு மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிக்கு இத்திட்டத்தையும் மாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tuesday, October 22, 2013

அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் போதிய அளவு மாணவர்கள் சேராத அரசு தொடக்கப்பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும் மூட அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேராத பள்ளிகளை இணைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், அத்தகைய பள்ளிகளின் பட்டியலை உடனடியாக தயாரித்து அனுப்பும் படியும் உயரதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். அதனடிப்படையில் இணைக்கப்பட உள்ள பள்ளிகளின்  பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எந்த நேரமும் இது செயல்படுத்தப்படலாம் என்றும் தெரிகிறது.
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன என்று அரசுத் தரப்பில் பூசி மெழுகும் வார்த்தைகளால் கூறப்பட்டாலும், 2 அல்லது 3 பள்ளிகளை இணைத்து ஒரே பள்ளியாக்கி விட்டு மீதமுள்ள பள்ளிகளை மூடுவது தான் தமிழகஅரசின் திட்டமாகும். தொலைநோக்குப் பார்வையில்லாத, மாணவர்கள் நலனுக்கு எதிரான இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும்.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விகிதம் வேகமாக குறைந்து வருகிறது என்பது உண்மை தான். இது அரசின் குற்றமே தவிர, மாணவர்களின் குற்றமோ அல்லது பெற்றோர்களின் குற்றமோ அல்ல. அரசு பள்ளிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்  என தமிழக அரசு அறிவித்து பல ஆண்டுகள் ஆகும் போதிலும் இன்று வரை அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
அண்மையில் தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தமிழகத்தில் 2253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான் பணியில் இருக்கிறார்கள் என்றும், இவற்றில் பல பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மேல்நிலைப்பள்ளிகள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதைவிடக் கொடுமை என்னவெனில், 16 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்பதால் சத்துணவு அமைப்பாளர்கள்  மாணவர்களை கவனித்துக் கொள்கிறார்கள் என்பது தான். இத்தகைய அவலநிலையில் அரசு பள்ளிகள் இருப்பதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் என கல்வி கற்பதற்குத் தேவையான எதுவுமே இல்லாததால் தான் கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் தரம் குறைந்தவை என்பதைக் கூட அறியாமல் தங்களின் குழந்தைகளை அங்கு சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்ததற்கு இது தான் காரணம் ஆகும். அரசுப் பள்ளிகளில் காணப்படும் குறைகளைக் களைந்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது என்பது காலில் ஏற்பட்ட புண்ணை குணப்படுத்துவதற்குப் பதிலாக காலையே வெட்டி எடுப்பதற்கு சமமானதாகும்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. கல்வியில் பின்தங்கிய விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தக் குறைகளை சரி செய்து அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி , போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். எனவே, குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடும் முடிவைக் கைவிட்டு, அந்தப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

அடுத்த வாரத்துக்குள் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: அன்புமணி ராமதாஸ்



பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை டாக்டர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்டார்.
அதன்படி கிருஷ்ணகிரி தொகுதியில் ஜி.கே.மணி, ஆரணி தொகுதியில் ஏ.கே. மூர்த்தி, சேலம் தொகுதியில் இரா.அருள், அரக்கோணம் தொகுதியில் அரங்க.வேலு ஆகியோர் போட்டியிடுகிறார்கள். புதுச்சேரியில் அனந்தராமன் போட்டியிடுகிறார்.
இந்த 5 தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடந்தது. இதற்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து கருத்து கேட்டார். தேர்தல் பிரசார வியூகம், தொண்டர்களின் தேர்தல் பணி, கூட்டணி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள 5 பாராளுமன்ற தொகுதி பா.ம.க. நிர்வாகிகளுடன் கலந்து பேசினேன். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடத்தப்படும்.
அதற்கான தேதி இன்று மாலைக்குள் முடிவு செய்யப்படும். அடுத்த வாரத்துக்குள் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து சமுதாய கூட்டணியில் இதுவரை 9 அமைப்புகள் சேர்ந்துள்ளன: ஏ.கே.மூர்த்தி



பாமக தலைமையிலான அனைத்து சமுதாய கூட்டணியில் இந்திய மக்கள் கட்சி இணைந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் யாதவ மகா சபை தலைவரும், இந்திய மக்கள் கட்சியின் தலைவருமான தேவநாதனை பாமக நாடாளுமன்ற வேட்பாளர்கள் அரங்க வேலு, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.மூர்த்தி, அனைத்து சமுதாய கூட்டணி, திராவிட கட்சிகளின் மாற்று கூட்டணியாக அமையும். அனைத்து சமுதாய கூட்டணியில் இதுவரை 9 அமைப்புகள் சேர்ந்துள்ளன என்றார்.
இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று தேவநாதன் தெரிவித்தார்.

Monday, October 21, 2013

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார்.நாடாளுமன்ற தேர்தலில் பாமக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. 15 தொகுதிகளிலும் பாமக போட்டியிடுகிறது. மேலும் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஒத்துழைப்புடன் போட்டியிடுகிறது.இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டார்.

 
அதன் விவரம் வருமாறு,கிருஷ்ணகிரி - ஜி.கே. மணிஅரக்கோணம் - ஆர். வேலுஆரணி - அ.கி. மூர்த்திசேலம் - அருள்புதுவை - அனந்தராமன்முன்னதாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் புதுவை அல்லது தர்மபுரியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. தற்போது புதுவையில் அனந்தராமன் போட்டியிடுவதால் அன்புமணி தர்மபுரியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Monday, October 14, 2013

பக்ரீத் திருநாள்: ராமதாஸ் வாழ்த்து



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தியாகத்  திருநாளாம்  பக்ரீத்  திருநாளை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின்நோக்கமாகும்.  இறை தூதரான இப்ராகிம், இறைவனின் கட்டளையை ஏற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன்வந்த போது, வான் தூதரை அனுப்பி அதை தடுத்த இறைவன், மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிகொடுக்கும்படி கூறினார். இப்ராகிமின் தியாகத்தையும் இறைவன் பாராட்டினார். இதை குறிக்கும் வகையிலேயே தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப் படுத்தும்.
சோதனைகளை சாதனைகளாக மாற்ற முடியும் என்பதையும் உணர்த்துகின்ற நாள்தான் இந்தத் தியாகத் திருநாள். தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் இடர்ப்படுகிற சோதனைகளை எல்லாம் தாங்கி, சாதனைகளாக மாற்றி வெற்றிப் பயணத்தைத் தொடரவும்,அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் , மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்றுச் செயல்படுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

காமன்வெல்த்திலிருந்து இலங்கையை நீக்கக் கோரி பேரவையில் தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகின் மிகக் கொடுமையான இனப்படுகொலையையும், மனித உரிமை மீறலையும் நடத்திய இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது; அம்மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழகத்தில் பல மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
காமன்வெல்த் அமைப்பில் ஒரு நாடு தொடர்வதற்கு என்னென்ன தகுதிகள் தேவையோ, அவற்றில் ஒன்று கூட இலங்கைக்கு இல்லை; காமன்வெல்த் அமைப்பிலிருந்து ஒரு நாடு நீக்கப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும் இலங்கைக்கு எதிராக உள்ளன. எனவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதமே மத்திய அரசை நான் வலியுறுத்தினேன். தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மாணவர்கள் அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், மத்திய அரசோ கேளாக்காதினராய் இருந்து வருகிறது. மாறாக, தமிழர்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்குவது, இலங்கையில் மின் நிலையங்களை அமைத்துத் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இன்னொருபுறம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை வரும் மார்ச் மாதத்திற்குள் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்; தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவத்தினரை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ள நிலையில், அதை ஏற்க முடியாது என்று இராஜபக்சே சவால் விடுகிறார். ஈழத் தமிழர்களுக்கு 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் படி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தும் நிலையில், தமிழர்களுக்கு நில அதிகாரமோ அல்லது காவல்துறை அதிகாரமோ வழங்கப்படாது என்று கூறி இந்திய அரசுக்கு அவமரியாதை செய்திருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
இலங்கை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இந்தியாவின் அமைதி மிகவும் ஆபத்தானது. கடந்த மார்ச் மாதத்தில் கூட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போது, இறுதி வரை அமைதி காத்த இந்தியா, கடைசி நேரத்தில் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து இராஜபக்சேவைக் காப்பாற்றியது. இப்போது கூட காமல்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் விசயத்தில் முடிவெடுப்பதற்கு முன்பாக தமிழக மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்வேன் என பட்டும்படாமலும் தான் பிரதமர் கூறுகிறாரே தவிர, தமிழர்களின் நலனைவிட  இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது எனக்கு முக்கியமல்ல என்று உறுதிபட தெரிவிக்க மறுக்கிறார்.  எனவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த விசயத்தில் மழுப்பலாக பதிலளிப்பதை விடுத்து, தனது நிலைப்பாட்டை இந்தியா உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இந்த விசயத்தில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் கடமை தமிழக அரசுக்கு  உள்ளது.  எனவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது; அம்மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, வரும் 23 ஆம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும். பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து, தீர்மானத்தின் நகலைக் கொடுத்து அதில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Saturday, October 12, 2013

ரூ.2 லட்சம் கோடி மணல் கொள்ளை: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆற்று மணல் கொள்ளையை தடுக்கத் தவறியவர்கள் மீதும், மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைப் போலத் தோன்றினாலும், இது உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி ஆகும். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை இன்று, நேற்றல்ல... கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த அனைத்து மணல் குவாரிகளையும் கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அரசே அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
இந்த மணல் குவாரிகள் அனைத்தும் பெயரளவில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதிலும், இவற்றில் மணல் அள்ளும் உரிமம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதைப் பயன்படுத்திக்கொண்டு  தனியார் நிறுவனங்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள மணல் வளம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான மணல் வணிகர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியில் தனிநபர் ஒருவர்  சுமார் 44 ஆயிரம் லாரி மணலை சட்டவிரோதமாக குவித்து வைத்து விற்பனை செய்து வந்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் இதேநிலை தான் காணப்படுகிறது. மொத்தத்தில்  அள்ளப்படும் மணலில் ஒரு விழுக்காடு கூட கணக்கில் காட்டப்படுவதில்லை. கடந்த 2012&13 ஆண்டில் மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.188 கோடி. அதேநேரத்தில் மணல் கொள்ளையர்களுக்கு கிடைத்த லாபம் ரூ. 15 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
மணல் குவாரிகளை அரசு ஏற்றதில் தொடங்கி இன்று வரையிலான 11 ஆண்டுகளில் மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகம் எனத் தெரிகிறது. இந்தியாவையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழலை விட இது மிகப்பெரிய ஊழலாகும். இதை மட்டும் அரசு தடுத்திருந்தால் தமிழக அரசின் ரூ. 1.55 லட்சம் கோடி கடனை அடைத்திருக்க முடியும் என்பதுடன், பேரூந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சுமைகளை விதித்து மக்களை சிரமப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நான் போராடி வருகிறேன். சட்டப்பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் மணல் கொள்ளைக்கு எதிராக எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் மணல் கொள்ளைக்கு எதிராக எங்களின் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் இளவழகன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்து சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். தமிழகத்தில் உள்ள பல ஆற்றுப்படுகைகளில் நானும், எங்கள் கட்சியினரும் நேரடியாக களமிறங்கி மணல் கொள்ளையை தடுத்தோம். மணல் கொள்ளை குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இந்த நிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மணல் கொள்ளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் ஆணையிட்டிருக்கிறது. இதன் மூலம் எனது நிலைப்பாடு மிகவும் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  அதேநேரத்தில், காஞ்சிபுரம் மணல் கொள்ளை என்பது ஊழலின் ஒரு சிறு பகுதி தான்; தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. மணல் கொள்ளைக்கு அதிகாரிகளை மட்டுமே பொறுப்பாக்கி விட்டு ஆட்சியாளர்களை தப்ப வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. ஆட்சியாளர்களின் துணை இல்லாமல் மணல் கொள்ளை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.
எனவே, கடந்த 2003 ஆண்டில் தொடங்கி இன்று வரையிலான 11 ஆண்டுகளில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற மணல் கொள்ளை குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அதனடிப்படையில் மணல் கொள்ளைக்கு மூல காரணமாக இருந்த ஆட்சியாளர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Friday, October 11, 2013

கல்லூரி முதல்வர் கொலை: மாணவர்களை நல்வழிப்படுத்தும் கல்விமுறையே அவசரத் தேவை: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே குழந்தை இயேசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் அதே கல்லூரியில் பயிலும்  மாணவர்களால் கொடூரமான முறையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியையும், வேதனையும், துயரத்தையும் அளிக்கிறது.
கல்லூரியில் ஒழுங்கீனமாகவும், மாணவிகளிடம் தகாத முறையிலும் நடந்து கொண்ட ஒருமாணவர் மீது கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவர் தமது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இந்தக் கொடூர செயலை நிகழ்த்தியிருக்கிறார். முதல்வர் சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட விதம் பற்றி  ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கும்போது, திரைப்படங்களில் வரும் வன்முறை மற்றும் கொலைக் காட்சிகள் இந்த மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
மாதா, பிதாவுக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்களை தங்களின் கடவுளாக மாணவர்கள் மதித்து வந்த  நிலை மாறி, ஆசிரியர்களையே படுகொலை செய்திருக்கும் நிலை உருவாகியிருப்பது ஒட்டுமொத்த தமிழகமும் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும். நல்லொழுக்கத்தை கற்றுத் தரும் நோக்கம் கொண்டதாக இருந்த கல்விமுறை, அதிக மதிப்பெண்களை எடுத்தால் போதும் என்ற நோக்கம் கொண்ட எந்திரத் தனமானதாக மாறியது தான் இந்த சீரழிவுக்கு முதன்மைக் காரணமாகும். கடந்த காலங்களில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் வாரத்திற்கு இரு பாடவேளைகளிலாவது நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இப்போது நீதிபோதனை வகுப்புகள் என்றால் என்ன? என்பதே பெரும்பாலான மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரியவில்லை.
அதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவுமுறை மரியாதையும், பொறுப்பும் நிறைந்த பெற்றோர் & குழந்தை உறவுமுறைக்கு இணையானதாக இருந்தது. மாணவர்கள் எவரேனும் தவறான பாதையில் சென்றால் அவர்களை ஆசிரியர்கள் திருத்துவதும், தங்களுக்கு  ஏதேனும் பிரச்சினை என்றால் அதை ஆசிரியர்களிடம் கூறி மாணவர்கள் சரி செய்து கொள்வதும் வழக்கமானதாக இருந்ததால் பள்ளிகளும், கல்லூரிகளும் ஒழுக்கத்தின் உறைவிடங்களாக இருந்தன.
ஆனால், தற்போதுள்ள பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. மாணவர்களை பணம் பறிக்கும் எந்திரங்களாக கல்லூரி நிர்வாகங்களும், அதிக மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக பெற்றோரும் பார்ப்பதால் ஏற்படும் அழுத்தங்கள் தான் மாணவர்களை திசைமாறிச் செல்ல வைக்கின்றன. தெருவுக்குத் தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும்  மதுக்கடைகளும், கல்லூரிகளுக்கு அருகிலேயே கிடைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களும், குற்றங்களை எப்படி செய்வது என்பதைக் கற்றுத் தரும் திரைப்படங்களும் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.
இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் 25 வயதுக்கும் குறைவானவர்கள். 35 வயதுக்குட்பட்டவர்களின் அளவு 66 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். இந்தியா வல்லரசாவது இவர்களின் கைகளில் தான் உள்ளது என அனைவரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள் இத்தகைய வன்முறைப் பாதையில் பயணம் கவலையளிக்கிறது. இதற்கு ஒட்டு மொத்த சமுதாயமும் பொறுப்பேற்கவேண்டும். மாணவ சமுதாயத்தினரில் ஒரு சிலர் தான் இவ்வாறு  தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என்ற போதிலும், அவர்களைத் திருத்தி நல்வழிப் படுத்துவது நமது அவசர, அவசியக் கடமையாகும்.
எனவே, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் ஏற்படுத்துதல், மாணவர்களின் பிரச்சினைகளை அறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளையும், ஆறுதல்களையும் வழங்குதல் உள்ளிட்டவை அடங்கிய கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், மதுக்கடைகளை மூடவும், போதைப் பொருள் விற்பனையை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, தங்களின் பெற்றோர் கனவையும், நாட்டின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டிய மிகப்பெரிய கடமை தங்களுக்கு இருப்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட மாணவர் சமுதாயம் முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, October 10, 2013

ஜெ. குருவை தவிர 132 பாமகவினரும் விடுதலை



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைதைத் தொடர்ந்து, மாநிலத்தில் பல பகுதிகளில், வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து பா.ம.க.,வினர் பலர் கைது செய்யப்பட்டனர்.    இவர்களில், 132 பேர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. பா.ம.க.,- எம்.எல்.ஏ., குரு மீது, தே.பா., சட்டம் பாய்ந்தது.
 குண்டர் சட்டம், தே.பா., சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்து உத்தரவு பெற்றனர். குண்டர் தடுப்பு மற்றும் தே.பா., சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டதை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த, 14 பேர், தே.பா., சட்டத்தின் கீழ், கைது செய்ததை, ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் ராஜேஸ்வரன், ஆறுமுகசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
தே.பா., சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டதை, 'டிவிஷன் பெஞ்ச்' ரத்து செய்தது. தற்போது, குரு மீதான வழக்கு மட்டும், நிலுவையில் உள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து, பா.ம.க., வழக்கறிஞர், கே.பாலு கூறும்போது, 'குண்டர் தடுப்பு மற்றும் தே.பா., சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட, 132 பேர், விடுவிக்கப்பட்டுள்ளனர். தே.பா., சட்டத்தின் கீழ், குரு கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனு, 11ம் தேதி (இன்று) விசாரணைக்கு வருகிறது," என்றார்.

தேவர் குருபூஜைக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் போராட்டத் தலைவரும், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்தவர்களில் ஒருவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106 ஆவது பிறந்தநாள் விழாவும், 51 ஆவது குருபூசையும் வரும் 30 ஆம் தேதி அவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டைப் போடும்வகையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 (1) தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது.
தமிழக அரசின் காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவின்படி, குருபூஜை விழா நடைபெறும் பசும்பொன் கிராமம் உட்பட மாவட்டம் முழுவதும் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது; வாடகை வாகனங்களிலும், இரு சக்கர ஊர்திகளிலும், பொதுமக்கள் வரக்கூடாது என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது; அரசியல் தலைவர்கள் 3-க்கும் மேற்பட்ட ஊர்திகளில் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், கடந்த 50 ஆண்டுகளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை பொலிவில்லாத, சாதாரணமான விழாவாக நடத்த வேண்டிய சூழலை தமிழக அரசு திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. இது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை  கடவுளாக வணங்கும் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தும் செயல் என்பது மட்டுமின்றி, தேசியத் தலைவராக திகழும் தேவர் திருமகனாருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமரியாதையும் ஆகும்.
 இந்திய அரசியல் சட்டத்தின் 19(பி), 19(டி) ஆகிய பிரிவுகளின்படி, பொதுமக்கள் எந்த ஓரிடத்திலும் அமைதியாக கூடுவதற்கும், நடமாடுவதற்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அடிப்படை உரிமைகளைக் கூட பறிக்கும் வகையில் தமிழக அரசின் தடைகள் அமைந்திருக்கின்றன. தேவர் பெருமகனாரின் குருபூஜை விழா அரசு விழாவாகவும், முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. அத்தகைய விழாவிற்கு தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும்.
குருபூஜையை அமைதியாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று தமிழக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. லட்சக்கணக்கில் மக்கள் கூடும் விழாக்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இயல்பானது தான். அத்தகைய கட்டுப்பாடுகள் விழாவின் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, விழாவின் கோலாகலத்தை குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது. கடந்த 50 ஆண்டுகளாக தேவர் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு வருபவர்களால் ஒருமுறை கூட பிரச்சினையோ அல்லது மோதலோ ஏற்பட்டதில்லை.
எனவே, தேவர் குருபூஜை விழாவிற்கு விதிக்கப்பட்டுள்ள 144(1) தடையாணை உள்ளிட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு நீக்க வேண்டும். கடந்த காலங்களில் தேவர் குருபூஜை விழா எவ்வளவு சிறப்பாக கொண்டாடப்பட்டதோ, அதேஅளவு உற்சாகத்துடன், இந்த ஆண்டும்  கொண்டாடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்; அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

பா.ம.க.வை இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டோம்: ராமதாஸ் பேச்சு



 



தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஆரணி, அரக்கோணம் ஆகிய 5 தொகுதிகளை சேர்ந்த பா.ம.க. இளைஞரணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் 10.10.2013 வியாழக்கிழமை காலை நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
பாராளுமன்ற தேர்தலில் முழுக்க முழுக்க இளைஞர் சக்தியை நம்பி பா.ம.க. போட்டியிடுகிறது. தனித்து போட்டியிடப் போகிறோம் என்று முடிவெடுத்த உடனேயே கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டோம். இளைஞர்களின் ஆற்றலும், அறிவும் சேரும்போது வெற்றி நிச்சயம். திராவிட கட்சிகளை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பது காலம் நமக்கு இட்டுள்ள கட்டளை. அதை நிறைவேற்றியே தீருவோம். அதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரை இப்போதே இந்தக் கூட்டத்தில் நான் அறிவித்துவிடுவேன். இருப்பினும் ஓரிரு நாட்கள் ஆகட்டும். பாராளுமன்ற தேர்தலில் முதல் முதலாக வேட்பாளரை அறிவிக்கும் கட்சி பாமகதான். வேட்பாளர்களுக்கு துணையாக இளைஞர்கள் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், இளம்பெண்கள் சங்கம் ஆகிய அணிகளில் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் களப்பணி ஆற்ற வேண்டும். நமது கட்சியை சேர்ந்த காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. உள்பட 123 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் காடுவெட்டி குருவை தவிர 122 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்காக டாக்டர் அன்புமணி, வக்கீல் பாலு ஆகியோர் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்து முயற்சிகள் எடுத்தனர். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இவ்வாறு பேசினார்.

Saturday, October 5, 2013

ரயில் கட்டண உயர்வை திரும்ப பெறுக: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மக்களை பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பயணிகள் மற்றும் சரக்குக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:"டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி பயணிகள் ரயில் கட்டணம் நாளை மறுநாள் முதல் 2 சதவீதம் உயர்த்தப்படும் என்று ரயில்வேத்துறை அறிவித்திருக்கிறது. இது தவிர சரக்குக் கட்டணமும் வரும் 10 ஆம் தேதி முதல் 1.7 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.பார்சல் கட்டணம், பொருட்கள் சரக்குக் கட்டணம் ஆகியவை கடந்த ஒன்றாம் தேதி 15 சதவீதம் உயர்த்தப்பட்டன. அதற்குள்ளாக பயணிகள் கட்டணமும், சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயில்வேத்துறைக்கு ஆண்டுக்கு ரூ.4700 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இது டீசல் விலை உயர்வால் ரயில்வேத்துறைக்கு ஏற்படும் கூடுதல் செலவைவிட அதிகமாகும்

ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாய பேரியக்க கூட்டம் : தீர்மானங்கள் - படங்கள்


ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாய
 பேரியக்க கூட்டம் : தீர்மானங்கள் - படங்கள்

 


அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் மாநில அளவிலான சமுதாய தலைவர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.
இதற்கு தலைமை தாங்கிய டாக்டர் ராமதாஸ் பேசியபோது, ’’சமுதாயங்களுக்குள் ஏற்படும் பிரச்சினை களுக்கு குரல் கொடுப்பதற்காக அனைத்து சமுதாய பேரியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் சார்பில் 32 மாவட்டங்களுக்கும் சென்று கூட்டம் நடத்தினோம். இதற்கு கிடைத்த வரவேற்பு மனநிறைவு தருவதாக உள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாய பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் போராடுவோம். தேர்தல் வரும் போகும். இந்த இயக்கத்தில் இருக்கின்ற தலைவர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் தான்.
ஆனால் சமூக பிரச்சினை என்று வரும்போது எல்லோரும் ஓர் அணியில் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த நோக்கத்துக்காகத்தான் இந்த அமைப்பு தொடங்கி செயலாற்றி வருகிறது’’என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
இரு மனங்கள் ஒன்றுபடும் காதல் புனிதமானது. அது போன்ற காதல் திருமணங்களுக்கோ, கலப்பு திரும ணங்களுக்கோ தடை போடுவது நாகரீக சமுதாயத்தில் சரியானது அல்ல.
என்றாலும் காதல் என்ற பெயரில் நடைபெறும் மோசடி நாடகங்களை தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். அதற்கு முன்பாக இது போன்ற திருமணங்களுக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயம் ஆக்க வேண்டும். இல்லையென்றால் அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வரும்படி, ஜனாதிபதி, மற்றும் பிரதமரை சந்தித்து நேரில் வலியுறுத்தி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க வேண்டும். தேவர் குருபூஜைக்கு 144 தடை உத்தரவு போடக்கூடாது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: