கூடங்குளம் அணு உலையை அமைப்பதில் நடந்த ஊழல்கள், தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக ரஷ்ய ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூடங்குளம் அணு உலையை இயங்கச் செய்வதற்கான முயற்சியில் இந்திய அணுசக்தித் துறை சென்று கொண்டிருக்கிறது.
இதனால், கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் உழவர்களும், மீனவர்களும் தங்களைக் காப்பாற்றும்படி தொடர்ந்து அபயக் குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். கூடங்குளம் அணு உலையிலிருந்து திடீர் திடீரென எழும் வெடிச்சத்தத்தாலும், மர்மமான ஓசையாலும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இத்தகைய ஓசை எழுவதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டாலும், கூடங்குளம் அணு உலையில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாததால் அங்கு அச்சமும், பதற்றமும் கலந்த சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் மூத்த அணு விஞ்ஞானியுமான முனைவர். ஏ. கோபாலகிருஷ்ணன் ஆங்கில நாளிதழ் ஒன்றில், ‘கூடங்குளம் பிரச்சினைகளை தீருங்கள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், கூடங்குளம் அணு உலை தொடர்பாக ஊழல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.அணு உலையில் தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும், தரமில்லாத கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாலும் அணு உலையின் நம்பகத்தன்மை குறித்தும், நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்வதற்கான அணு உலையின் திறன் குறித்தும் அப்பகுதி மக்களிடையே பெருகி வரும் கவலை சரியானது தான் என்று கூறி, அவர்களின் நிலைப்பாட்டை ஆதரித்திருக்கிறார். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருப்பதைப் போன்ற இரண்டு அணு உலைகளை சீனாவிலும் ரஷ்ய அணு சக்திக் கழகமான ரோசடோம் அமைத்து வருகிறது. இதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதை அறிந்த சீன அரசு, தங்களது அணு உலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரத்தை மறு ஆய்வு செய்து உறுதி செய்யும்படி ரஷ்ய அணுசக்திக் கழகத்தை கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்திய அரசோ அப்பகுதியில் வாழும் தனது சொந்த மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் உள்ளது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் கடந்த நவம்பர்/ டிசம்பர் மாதங்களில் இந்திய அணுமின் கழகம் நடத்திய முழு அளவிலான ஹைட்ரோ சோதனை, வால்வுகள் சரியாக செயல்படாததால் தோல்வியடைந்து விட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் இந்தசோதனையை மீண்டும் செய்யும்படி இந்திய அணுமின் கழகத்திற்கு இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் ஆணையிட்டிருக்கிறது. ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்திற்கு முன்பாகவே கூடங்குளத்தில் வால்வுகளைக் கொண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தி ஆணையத்தின் உறுப்பினரான எம்.ஆர். சீனிவாசன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்காக அணு உலையின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், இந்தியாவில் ஒரு பகுதியும், ரஷ்யாவில் மறு பகுதியுமாக வடிவமைக்கப்பட்ட வால்வுகளை பொருத்தியதில் சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதன்காரணமாக அணு உலையில் செய்யப்பட்ட இரண்டாவது ஹைட்ரோ சோதனையின் முடிவுகள் வெளியிடப்படாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன.
ரஷ்ய அணு சக்தித் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களுடன், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறைபாடுகளையும் சேர்த்துப்பார்க்கும்போது அச்சம் அதிகரிக்கிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்ய அணுசக்தி கழகத்தின் துணை நிறுவனமான ஜியோ- போடால்ஸ்க் என்ற நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு இயக்குனரான செர்ஜி ஷுடோவை ஊழல் குற்றச்சாற்றுகளின் பேரில் அந்நாட்டின் உளவுப் பிரிவினர் கைது செய்தனர். கூடங்குளம் உட்பட உலகம் முழுவதும் ரஷ்யா அமைக்கும் அணு உலைகளுக்கான ஆவி உருவாக்கிகள் உள்ளிட்ட பல கருவிகளை ஜியோ& போடால்ஸ்க் நிறுவனம் தான் வினியோகித்து வருகிறது. இந்தக் கருவிகளை செய்வதற்காக தரமான எஃகு அமைப்புகளை வாங்காமல், உக்ரைன் நாட்டு நிறுவனத்திடமிருந்து தரம் குறைந்த எஃகு அமைப்புகளை வாங்கியதாக செர்ஜி மீது ரஷ்ய உளவுத்துறை குற்றஞ்சாற்றியிருக்கிறது. கூடங்குளம் அணு உலையிலும், பல்கேரியா, ஈரான், சீனா ஆகிய நாடுகளிலும் இந்த தரம் குறைந்த எஃகு அமைப்புகள் தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதையறிந்த மற்ற நாடுகள் மாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், இந்தியா மட்டும் ரஷ்யாவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டது.
ஜியோ& போடால்ஸ்க் நிறுவனம் தயாரித்த ஏராளமான தரம் குறைந்த கருவிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டு அணு உலைகளிலும் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் குறைபாடுகள் இப்போது தெரியாவிட்டாலும், அணு உலைகள் விரைவில் செயல்படத் தொடங்கும்போது பேரழிவை ஏற்படுத்தும் வகையில் தோல்வியடைக்கூடும்.
கூடங்குளம் அணு உலை இப்போதுள்ள நிலையில், அதில் உற்பத்தியைத் தொடங்குவதென்பது இந்தியாவின் தென் முனையில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் மீது மரணத்தை திணிப்பதாகவே அமையும். எனவே, இப்போதுள்ள சூழலில் கூடங்குளத்தில் உள்ள முதல் அணு உலையில் உறபத்தியைத் தொடங்குவதையும், இரண்டாவது அனு உலையின் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். கூடங்குளம் அணு உலையில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது, இது தொடர்பாக நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விசாரனை நடத்தி முடிக்கப்படும்வரை இப்பணிகளை தொடரக் கூடாது.சென்னையை அடுத்த கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் கடந்த 15-ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்து அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால், அது குறித்தும் வல்லுனர் குழு விசாரணை நடத்த வேண்டும்.
No comments:
Post a Comment