Thursday, October 25, 2012

இந்தியா பரிந்துரைத்த 13-வது அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்ய இலங்கை திட்டம்: டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இந்தியா முன்வைத்த 13-வது அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல் அதிகாரமும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து உலக நாடுகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு இப்போதிருக்கும் ஓரிரு உரிமைகளையும் பறிப்பதற்கான சதித் திட்டத்தை இலங்கை அரசு தீட்டியிருக்கிறது.
13-வது அரசியல் சட்டத்திருத்தத்தையே அடியோடு ரத்து செய்ய இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறது. 13-வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது மட்டுமின்றி, இலங்கையிலுள்ள 9 மாநில எல்லைகளையும் மாற்றியமைத்து 5 மாநிலங்களாக குறைக்க ராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார். இலங்கை அரசின் இந்த சதி திட்டம் நிறைவேறிவிட்டால் ஈழத்தமிழர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள். இதற்கெல்லாம் மேலாக, இந்தியாவுடனான ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படுவது இந்தியாவுக்கு இழைக்கப்படும் பெரும் அவமானம் ஆகும்.
எனவே, இலங்கையின் 13-வது அரசியல்சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, தமிழர்களுக்கு ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தைப் பறிக்கத் துடிக்கும் இலங்கை ஆட்சியாளர்கள், தமிழர்களுக்கு எந்தக்காலத்திலும் சம அதிகாரம் தர மாட்டார்கள் என்பதை உணர்ந்து, ஐ.நா. மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாடார்களை இழிவுபடுத்தி மலையாள நாயர்களை உயர்த்தி எழுதுவதா.. ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டமாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வ குடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருபது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடபட்டுள்ள 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 168வது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கபட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடபட்டிருக்கிறது.
இது மிகபெரிய வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில், தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டமாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வ குடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருபது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
அதே பாடத்தின் இன்னொரு பகுதியில், நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிந்ததாகவும், மேலாடை அணிவதற்காக நாடார் சமுதாய பெண்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும் கூறப்பட்டிக்கிறது. இதுவும் வரலாற்றுத் திரிபாகும்.
கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டிந்த போது, அதை எதிர்த்தும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்தும் 1836ம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டங்களை நடத்தியவர் அய்யா வைகுந்தர் ஆவார்.
எனவே நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அய்யா வைகுந்தரின் விடுதலைப் போராட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையிலும் இந்த பாடம் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படியான 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் உள்ள பிழைகள் உடனடியாக திருத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி தமிழர் விடுதலைப் போராட்டத்தை நடத்திய அய்யா வைகுந்தரின் வாழ்க்கை வரலாற்றை மத்திய மற்றும் மாநிலப் பாடத்திட்ட பாடநூல்களில் ஒரு பாடமாக சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Monday, October 22, 2012

'3 வருடத்தில 3000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரமாம்.. மக்கள் காதில் பூ சுற்றும் ஜெ'- ராமதாஸ்

கிருஷ்ணகிரி: மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்ளை திசை திருப்பவே சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்ப 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்ய போவதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மெகாவாட் வீதம் 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி என்பது நடைமுறையில் சாத்தியமல்ல. 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளிசக்தி மின்சாரம் தயாரிக்க ரூ.33 ஆயிரம் கோடி தேவை. இந்த நிதிக்கு என்ன செய்வார்கள்?.

குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி கூட 3 ஆண்டில் 600 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தியைதான் உற்பத்தி செய்துள்ளார்.

மாயாவதி பார்முலாவை கடைப்பிடிப்போம்

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் அதைச் சந்திப்பதற்கு பாமக தயாராக உள்ளது. எங்கள் தலைமையில் தமிழகத்தில் ஏற்கனவே 3-வது அணி உள்ளது.

தேர்தலில் திராவிட மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம். உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதி செய்ததை போல சமுதாயங்களுடன் கூட்டணி வைத்து கொள்வோம்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் மாதம் 17-ந்தேதி பாமக சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது என்றார் அவர்.

Saturday, October 20, 2012

உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்


மழை நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பருவ மழை துவங்கி கடந்த மூன்று நாட்களிலேயே இதுவரை வரலாறு காணாத அளவில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பருவ மழைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், கடந்த மூன்று நாட்களிலேயே சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதையும் காண முடிகிறது.

பல பகுதிகளில் கழிவு நீர் குழாய்கள் உடைந்து குடிநீர் குழாயுடன் கழிவு நீர் கலந்து பெரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மூன்று நாட்களுக்கே இப்படி என்றால், இன்னும் பருவ மழை தீவிரமடைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

சென்னை மாநகரமே வெள்ளக்காடாக ஆகி விடும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து, இதுவரை உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Sunday, October 14, 2012

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: ராமதாஸ்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் சென்னையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மக்களிடையே பெரும் அச்சமும்,பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், டெங்கு காய்ச்சலை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங்கள் வந்தால் டெங்கு காய்ச்சல் ஏற்படுவது இயல்பு தான் என்று கூறி தங்களின் பொறுப்பை தட்டிக் கழிக்க அரசு அதிகாரிகள் முயல்கின்றனர். இது அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பின்மையையும், அலட்சியத்தையுமே காட்டுகிறது.

தமிழகத்தை தற்போது ஆட்டிப்படைக்கும் டெங்கு காய்ச்சல் திடீரென வந்த ஒன்றல்ல. கடந்த ஏப்ரல் மே மாதங்களிலேயே நெல்லை மாவட்டம் கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போதே கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு டெங்குவைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தவறியதன்  விளைவாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த நோய் பரவத் தொடங்கியது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் டெங்கு பரவி ஒரு வயது குழந்தை உட்பட சிலர் உயிரிழந்தனர். ஆனால் அப்போது சென்னை உட்பட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும்   டெங்கு இல்லை என்று மறுப்பு தெரிவிப்பதில் தான் அரசு தீவிரம் காட்டியதே தவிர , டெங்குவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. அண்மையில் சென்னையில் காலரா நோய் பரவி சுமார் 29 பேர் உயிரிழந்தபோம் அதை மறைப்பதில் தான் அரசு அக்கறை காட்டியது. இதுதொடர்பான உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்திய மாநகராட்சி சுகாதார அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தமிழக அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

மாநகரங்களில் உள்ள அரசுப் பொது மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கும் போதிலும், பல மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உள்நோயாளிகளாக சேர்ப்பதற்கு படுக்கை கிடைக்காத அவலம் நிலவுகிறது. மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைஅளிப்பதற்கான வசதிகள் இல்லை; டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் அதை செய்வதற்காக அவர்களுக்கு இரத்த வட்டுக்களை செலுத்தும் வசதிகள் இல்லை. இதனால் டெங்குவால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளை சிகிச்சைக்காக 100 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள மருத்துவ மனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டியிருக்கிறது.

எனவே, தமிழக அரசு இனியாவது அதன் பொறுப்பை உணர்ந்து டெங்குவை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மற்றும் வட்டத் தலைமை மருத்துவமனைகளில் டெங்குவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டும். டெங்கு அறிகுறி காணப்படும் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். மாநிலம் முழுவதும் கொசு மருந்து தெளிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுவதுடன்,டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டோம்: அன்புமணி ராமதாஸ்



மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டோம் என்று பாமக முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்து வந்துள்ளது. இதனால், பா.ம.க. மீதான நம்பகத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். மக்களிடம் கட்சி இழந்த நம்பிக்கையை திரும்ப பெறுவதற்கு ஒரு முன்னுரை அமைத்துள்ளோம்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு, மக்களிடம் நம்பிக்கையை பெறுவோம். இது 2016-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கி செல்ல உதவிகரமாக இருக்கும். கட்சி விரும்பினால் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்.

கடந்த 2001 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க உடன் கூட்டணி சேர்ந்திருந்தோம். ஆனால், டெல்லி மேல் சபை (ராஜ்ய சபா) தேர்தலுக்கு முன்பாகவே, அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். சுயமரியாதையை விட்டுக் கொடுத்து, அந்த கூட்டணியில் நாங்கள் நீடித்திருந்தால், ஒரு ராஜ்ய சபா எம்.பி., பதவியை பெற்றிருக்க முடியும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.
2011 சட்ட சபை தேர்தலில் தி.மு.க உடன் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து கொண்டோம். அப்போது கூட எங்களுக்கு ராஜ்ய சபா சீட்டு தர தி.மு.க. தலைவர் மறுத்து விட்டார். ராஜ்ய சபா சீட்டுக்காக அந்த கட்சியில் கூட்டணி அமைத்தோம் என்றால், தேர்தல் முடிந்த கையோடு தி.மு.க கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறி இருக்க மாட்டோம். இந்த இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகத்தின் சமூக பொருளாதார கட்டமைப்பை சீரழித்து விட்டன.

இந்த கட்சிகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிரப்பும். 2016 சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய இடம் வகிக்கும். பா.ம.க. தலைமையில் ஒரு கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, October 8, 2012

பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்க்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் 08.10. 2012 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருவதால் காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் அனுபவித்து வரும் எண்ணிலடங்காத பிரச்சனைகளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் நீங்கள் பிறப்பித்த ஆணைக்கு பணிய மறுத்துவிட்ட கர்நாடக அரசு, இந்தப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்கும் வரை, தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட  திறந்து விடவில்லை. உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்குப் பிறகுதான் காவிரி பாசன மாவட்டங்களின் சம்பா பாசனத்திற்காக, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இரவு முதல், காவிரியில் வினாடிக்கு 9000 கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.

இந்த தண்ணீர் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு போதுமனதல்ல என்ற நிலையில், இந்த அளவுக்குக் கூட தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இத்தகைய சூழலில், கர்நாடக அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நீங்கள் இன்று தில்லியில் கூட்டியிருக்கிறீர்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள், தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என்பதற்காக, பொய்யான தகவல்களை கொடுத்து உங்களை தவறாக வழிநடத்தக்கூடும். அவர்களின் இது போன்ற நியாயமற்ற கோரிக்கைகளுக்கு நீங்கள் உடன்படக்கூடாது. மாறாக காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நாளான அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பிறகும், வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம்  தண்ணீர் திறந்து விடுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தல் ராமதாஸ் கூறியுள்ளார்.

Friday, October 5, 2012

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி! அன்புமணி ராமதாஸ் பேட்டி!





அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாமக இனி தனித்துப் போட்டியிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

நெய்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் இன்று மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் ஆண்ட கட்சியும், ஆளுகிற கட்சியும்தான். காவிரி நீரைப் பெற்றுத்தருவதில் இரு கட்சிகளும் மெத்தனமாகவே செயல்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் வழியை ஆய்வு செய்து அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும்.
பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு. மேலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது பாமக. எனவே திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு தற்போது இளைஞர்கள் பாமகவில் தங்களை இணைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாமக இனி தனித்துப் போட்டியிடும் என்றார்.

இலங்கை ராணுவ தளபதி பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்! ராமதாஸ் அறிக்கை!

இந்தியாவுக்கு பயிற்சிக்காக வரும் 45 உயரதிகாரிகளை தமிழக அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தட்டும் என்று இலங்கை ராணுவ தளபதி பேசியிருப்பதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை சிறப்பு படையணியை சேர்ந்த 45 உயரதிகாரிகள் வரும் டிசம்பர் மாதம் பயிற்சிக்காக இந்தியாவுக்கு வர இருப்பதாகவும், முடிந்தால் அவர்களை தமிழக அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்திக்கொள்ளட்டும் என்றும் இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியிருக்கிறார்.

இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை அமைச்சருமான பசில் ராஜபக்சே நேற்று கொழும்பில் இந்திய பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் தான் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதை எவராலும் தடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே இலங்கை அனுராதபுரத்தில் நடைபெற்ற ராணுவத்தின் 63-வது ஆண்டு விழாவில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா, இலங்கை ராணுவ வீரர்கள் சுமார் 800 பேர் இந்தியாவில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, ``ராணுவ ஒத்துழைப்பை பொறுத்தவரை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மிக நெருங்கிய புரிந்துணர்வு நிலவுகிறது. தமிழக அரசியல்வாதிகள் என்னதான் எதிர்ப்புக்குரல் எழுப்பினாலும் இந்த ஒத்துழைப்பை தடுக்க முடியாது. தமிழக அரசியல்வாதிகளுக்கு நாங்களே தகவல் தருகிறோம். வரும் டிசம்பர் மாதத்தில், இலங்கை சிறப்பு படையணியை சேர்ந்த 45 உயரதிகாரிகள் இந்தியாவுக்கு வரவிருக்கின்றனர். முடிந்தால் அவர்களை தமிழக தலைவர்கள் தடுத்து நிறுத்திக்கொள்ளட்டும்'' என்று திமிருடனும், அகம்பாவத்துடனும் அவர் பேசியிருக்கிறார். இலங்கைப் படைத் தளபதியின் இந்த பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இலங்கைப்போரின் போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் இந்த ஜெயசூர்யா. இதற்காகவே அமெரிக்காவிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் இவர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களை இனப்படுகொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு, போர்க் குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு கொடூரன் இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கு சவால் விடும் அளவுக்கு பேசத் துணிந்திருப்பதற்கு காரணம், நட்பு நாடு என்ற போர்வையில் இலங்கை அரசுக்கு இந்தியா அளித்துவரும் ஆதரவுதான்.

மத்தியில் ஆட்சி அமைப்பதில் தமிழகம் தொடர்ந்து முக்கிய பங்காற்றிவரும் நிலையில், ``தமிழக தலைவர்கள் சொல்வதை இந்திய அரசு கேட்காது; நாங்கள் சொல்வதைத்தான் கேட்கும்'' என்று ஒரு சுண்டைக்காய் நாட்டின் தளபதி சொல்வதைக் கேட்கும் போது இந்தியா ராஜபக்சேவின் காலணி ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறதா? என்ற வினா எழுகிறது. இலங்கைப் படைத் தளபதியின் இந்தப் பேச்சுத் தமிழக தலைவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய இறையான்மைக்கும் விடப்பட்ட சவால் ஆகும்.

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என மத்திய அரசு கருதினால், இலங்கை அமைச்சர் மற்றும் ராணுவ தளபதியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படும் சிங்கள வீரர்கள் 800 பேரையும் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ஓய்வூதியம்-காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் சீர்திருத்தத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஓய்வூதியத் துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, ஓய்வூதிய நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்வது உள்ளிட்ட சீர்த் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு வசதியாக ஓய்வூதிய சட்டத்திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் கோடிக் கணக்கான பணியாளர்களின் சமூக பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியிருக்கிறது. அரசு ஊழியர்கள் தங்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் பணிக்காலம் முழுவதும் சேமிக்கும் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது ஆகும்.
அண்மைக்காலங்களாக பங்கு சந்தைகள் சூதாட்டக் களங்களாக மாறிவரும் நிலையில், அரசு ஊழியர்களின் பணத்தை அவற்றில் முதலீடு செய்தால், அவை எந்த அளவுக்கு திரும்ப கிடைக்கும் எனபதற்கு உத்தரவாதம் எதும் இல்லை. மேலைநாடுகளில் பங்குசந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த மாத ஊதியதாரர்களின் பணம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் காணாமல் போய்விட்டது.

இதற்குப் பிறகும் பணியாளர்களின் ஓய்வூதிய நிதியில் ஒரு பகுதியை பங்குசந்தையில் முதலீடு செய்ய அரசு தீர்மானித்திருப்பது விளக்கை பிடித்துக்கொண்டு கிணற்றில் குதிக்கும் செயலாகவே அமையும். அதேபோல் ஓய்வூதியத் துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதும், காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டின் உச்சவரம்பை 26 விழுக் காட்டிலிருந்து 49 சதவீதம் ஆக உயர்த்துவதற்கு அனுமதித் திருப்பதும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதிகபட்சமாக 49 சதவீதம் அளவுக்கு மட்டுமே அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படுவதால், காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாக அதிகாரம் இந்திய நிறுவனங்களிடம் தான் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்திய சந்தைகளுக்குள் அமைதியாக நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள், பின்னர் படிப்படியாக தங்களின் ஆக்டபஸ் கரங்களால் ஒட்டுமொத்த சந்தையையும் வளைத்து வசப்படுத்தி வருவதை கிழக்கிந்திய கம்பெனி காலத்திலிருந்தே பார்த்து வருகிறோம்.

ஓய்வூதியத்துறை, காப்பீட்டுத் துறை சீர்த்திருத்தங்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால், கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலை யில், திடீரென இதற்கான மசோதாக்களை நாடாளு மன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதன் பின்னணியில் ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மாத ஊதியதாரர்கள் மற்றும் பொது மக்களின் நலனுக்கு எதிரான ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் துறை சீர்திருத்தங்களை மத்திய

Monday, October 1, 2012

இறந்தவர்களின் உயிரை ஜெயலலிதாவால் திருப்பித்தரமுடியுமா? ராமதாஸ் கேள்வி

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பூரண மதுவிலக்கு கோரி ஒப்பாரி என்ற நூதன போராட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் இன்று (01.10.2012) காலை சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த இளம் விதவைகள், தங்கள் கணவர்கள் குடிப்பழக்கத்தால் உயிரிழந்ததை பற்றி உருக்கமாக பேசியது அனைவரின் கண்களிலும் கண்ணிரை வரவழைத்தது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராமதாஸ்,
இந்தியாவில் இளம் விதவைகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான். காரணம் குடிப்பழக்கம். இந்த அரசு மக்களுக்கு இலவச பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு மதுவை ஒழித்தாலே நாடு சிறப்பாக இருக்கும். இந்த குடிப்பழக்கத்தால் இறந்தவர்களின் உயிரை ஜெயலலிதாவால் திருப்பித்தரமுடியுமா. இலவசங்கள் மட்டும் எதற்கு. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கதறிய இளம் விதவைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது. இதற்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும். முதல்வரும் ஒரு பெண் என்பதால், இந்த விதவைகளின் மனதை புரிந்து கொண்டு காந்தி ஜெயந்தி அன்றே மதுக்கடைக்கடைகளை முற்றிலும் மூட ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். பாமக சார்பில் வரும் டிசம்பர் 17 அன்று மீண்டும் மதுக்கடைக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்த உள்ளோம். இங்கே வந்துள்ள பாதிக்கப்பட்ட அத்தனை விதவை பெண்களும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார்.
 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: