Sunday, February 21, 2016

வண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன்னோட்டமாக அமையட்டும்! ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மடல் 

‘’அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே...!
வண்டலூரில் இன்னும் 5 நாட்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் இதே மாதத்தில் தொடங்கிய நமது வெற்றிப்பயணம் இலக்கை எட்டப் போவதை எண்ணி மனம் நிறைந்தாலும் இனி தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் தான் பா.ம.க. மாநில மாநாட்டுக்கான அழைப்பு மடலை உங்களுக்கு வரைகிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல... 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான் அவர்களின் எதிர்பார்ப்பு, ஆசை, விருப்பம் அனைத்தும். அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, மக்கள் நலன் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாற்று அணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி  சேலத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு அன்று மாலை நடந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இவை தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான விதையாக அமைந்தன.

பா.ம.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போது வரையிலான ஓராண்டு காலத்தில் நமது முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்புகள், கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்களைத் திரட்டி மது ஒழிப்பு போராட்டங்கள், எட்டு திசையிலும் நமது வெற்றிக்கு கொட்டு முரசு கொட்டும் வகையில் 8 மண்டல மாநாடுகள், சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டத்தை உருவாக்கும் வகையில் ‘‘ நாம் விரும்பும் சென்னை’’ கொள்கை ஆவணத்தை வெளியிட்டதுடன், அது குறித்து சென்னை பெருநகரம் முழுவதும்  பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது என நாம் கடந்து வந்த மைல்கற்கள் ஏராளம்.

 இப்போது நாம் நிற்கும் இடத்திலிருந்து ‘மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம்’ என்பது தொட்டுவிடும்  தூரம் தான். தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருப்பதன் முதற்கட்டமாகத் தான் தலைநகரின் நுழைவாயிலான வண்டலூரில் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் மாநில மாநாட்டை வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகலில் மிகச்சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.


தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு மாநாடும் இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதில்லை; எந்த ஒரு மாநாட்டுக்கும் இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டதில்லை  என்று வியக்கும் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், ரவிராஜ், பொன். கங்காதரன், கே.என். சேகர், பாலயோகி  மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். ஆனால், தமிழகத்தில் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வதை விட பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் இம்மாநாட்டுக்கு தடை விதித்தது. அந்த தடையை தகர்த்து இம்மாநாட்டை நடத்தவிருக்கிறோம். இது வெற்றிக்கு முதல்படி.

இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து 20 ஆண்டுகளில் கல்வித் துறையிலும், சுகாதாரத் துறையிலும், வேளாண் துறையிலும் கட்டி எழுப்பப்பட்ட முன்னேற்றங்கள், அடுத்த 50 ஆண்டுகளில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. கல்வியும், சுகாதாரமும் தனியாரின் கைகளுக்கு போய்விட்டன. 

 ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் ஈட்டும் ஊதியத்தின் பெரும்பகுதியை கல்விக்காகவும், மருத்துவச் செலவுகளுக்காகவுமே செலவிட வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் விவசாயம் லாபம் கொடுக்கும் தொழிலாக இருந்த நிலை மாறி, விவசாயிகளை கடன் வலையில் சிக்க வைத்து தற்கொலைக்கு தூண்டும் கருவியாக மாறிவிட்டது. இவை தவிர சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் கண்டது சீரழிவைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த சீரழிவுகளில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பது தாம் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இதுவரை நடந்த 8 மண்டல மாநாடுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. அவற்றை விஞ்சும் வகையில் இந்த மாநில மாநாடு அமைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்... இதை நீங்கள் நிறைவேற்றுவீர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.நமது லட்சியப் பயணத்தின் முக்கிய மைல்கல்லான இம்மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கவிருப்பது பாட்டாளிகளின் வருகை தான். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் இம்மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இதைவிட மிகவும் முக்கியம் நமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பது தான். சென்னை மாநகரின் நுழைவாயிலில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த மாநாடு நடைபெறவிருப்பதால் போக்குவரத்துக்கும், பொதுமக் களுக்கும் எந்தவித இடையூறுமின்றி, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வண்டலூரில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாட்டை மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: