Monday, February 8, 2016

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இம்முடிவு ஊரக மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.கடந்த 2012 ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 2013 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test - NEET) நடத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆணை செல்லாது என்று கடந்த 2013 ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்தது.பொது நுழைவுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதைக் காரணம் காட்டி தான் உச்சநீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நுழைவுத்தேர்வு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் வகையில் 1956 ஆம் ஆண்டின் இந்திய மருத்துவக் குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு இப்போது முடிவு செய்திருக்கிறது.கடந்த ஆண்டு அக்டோபரில் இதற்கான முயற்சிகள் தொடங்கியபோதே அதை நான் கடுமையாக எதிர்த்தேன். ஆனால், அதற்குப் பிறகும் நுழைவுத்தேர்வை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் விக்கிரமாதித்தனைப் போல மத்திய அரசு ஈடுபடுவது சரியல்ல.இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் ஒரே மாதிரியான பள்ளிக் கல்வி வழங்கப்படும் வரை பொது நுழைவுத் தேர்வு நடத்தும் யோசனை கூட மத்திய, மாநில அரசுகளுக்கு எழக்கூடாது. தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு வரை நுழைவுத்தேர்வுகள் நடைமுறையில் இருந்தன. அப்போது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர்வது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு மருத்துவப் படிப்புக்கான இடங்களில் சுமார் 70% வரை கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கிறது.இத்தகைய சூழலில் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகி விடும். இந்தியாவில் மருத்துவப்படிப்புக்கு இப்போது 90 நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், அவற்றுக்கு பதிலாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் சுமை குறையும் என்பது உண்மை தான். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளை களைய முடியும் என்பதிலும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், இந்த சீர்த்திருத்தங்களுக்காக ஊரக, ஏழை மாணவர்களின் நலனை பலி கொடுக்கக்கூடாது.அப்படியானால் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்துவது எப்படி? என்ற வினா எழலாம். 12-ஆம் வகுப்புத் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தையும், தேர்வுமுறையையும் நடைமுறைப்படுத்தி, அத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து மத்திய அரசு சிந்திக்கலாம்.மாறாக மாணவர் சேர்க்கைக்கான பொது அளவுகோலாக பொது நுழைவுத்தேர்வை ஒரு போதும் மத்திய அரசு பயன்படுத்தக்கூடாது. எனவே, மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-statement-about-entrance-examination-246356.html

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: