Wednesday, February 10, 2016

அதிகார அத்துமீறல், மிரட்டல்: ஜெ.வின் ஆணவத்தை சுக்குநூறாக மக்கள் நொறுக்கப்போவது உறுதி: ராமதாஸ்

ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக மருத்துவ முகாம் நடத்த தனியார் மருத்துவமனைகளை மிரட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்த நாளையொட்டி மாநிலம் முழுவதும் 680 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுத் தரப்பில் நெருக்கடி அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவுக்கு புகழ் சேர வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

விளம்பர வெளிச்சத்தின் ஒளியிலேயே அரசியல் நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமது 68 ஆவது பிறந்த நாளை இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு ஆணையிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 680 மருத்துவ முகாம்களை நடத்துதல், 68 லட்சம் மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஆளுங்கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். மருத்துவ முகாம்களை நடத்துவதற்காக அவர்கள்  தேர்ந்தெடுத்த முறையில் தான் அதிகார அத்துமீறல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாற்று எழுந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக குறைந்தது 2 முதல் 3 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையிட்டிருக்கிறார். மருத்துவ முகாம்களை நடத்த முன்வராத மருத்துவமனைகள்  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவதுடன், இதுவரை அந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

‘‘பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மொத்தம் 16 நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் 30 முதல் 50 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மருத்துவ முகாம்களுக்காக அவற்றை நடத்தும் மருத்துவமனைகளே உள்ளூர் தொலைக்காட்சிகளில்  விளம்பரம் செய்ய வேண்டும். இதுதவிர ஆட்டோ மூலம் ஒலிப்பெருக்கியில் விளம்பரம் செய்தல், துண்டு அறிக்கைகளை வழங்குதல் ஆகியவையும் செய்யப்பட வேண்டும். மருத்துவ முகாம்கள் நடைபெறும் பகுதியில் 8ஙீ4 என்ற அளவில் 4 விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும். அதிமுக ஏற்பாட்டில் தான் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன என்ற தோற்றம் ஏற்படும் வகையில் அனைத்து மருத்துவ முகாம்களையும் அங்குள்ள அதிமுக நிர்வாகிகளை அழைத்து, அவர்களின் கைகளால் தொடங்கி வைக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தனியார் மருத்துவமனைகளின்  நிர்வாகிகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.


மக்களின் நலனுக்காக மருத்துவ முகாம்களை நடத்துவது வரவேற்கத்தக்கது தான். ஜெயலலிதா பிறந்தநாளுக்காக 680 முகாம்கள் அல்ல... 68,000 மருத்துவ முகாம்களைக் கூட நடத்திக் கொள்ளலாம். அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஆனால், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக இதை செய்யும் ஆளுங்கட்சியினர், கடந்த 5 ஆண்டுகளாக ஊழல் செய்து சேர்த்து வைத்திருக்கும் பணத்திலிருந்து செய்தால், அது சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி, மக்கள் பணத்தை திட்டமிட்டு கொள்ளையடித்ததற்காக செய்யப்படும் பரிகாரமாகவும் இருந்திருக்கும். அதை விடுத்து  மருத்துவமனை நிர்வாகங்களை மிரட்டி, முதலமைச்சர் பிறந்த நாளுக்கு மருத்துவ முகாம்களை நடத்துவது தமது நலனுக்காகவும், புண்ணியத்திற்காகவும் அடுத்தவர் நலன்களை பலி கொடுப்பதற்கு ஒப்பானது ஆகும்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக தனியார் மருத்துவமனைகளை மிரட்டி முகாம்களை நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்த நாளுக்காக தமிழ்நாடு முழுவதும் 670 மருத்துவ முகாம்கள் இதே பாணியில் தான் நடத்தப்பட்டன. அப்போது ஜெயலலிதா எந்த பதவியிலும் இல்லை. ஊழல் செய்து சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டு, முதலமைச்சர்  பதவியிலிருந்து நீக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தார். ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் பிறந்த நாளுக்காக அரசு எந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அவல வரலாறு கடந்த ஆண்டு எழுதப்பட்டது. கடந்த ஆண்டு ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்ட அனைத்து வகை அதிகார அத்துமீறலும் இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்காக தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகை அத்துமீறல்களுக்கும் அடிப்படை காரணம் என்னவெனில், 5 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை மக்கள் நம்மிடம் கொடுத்துவிட்டார்கள்... இந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதில் தொடங்கி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது வரை எதை செய்தாலும் யாரும் நம்மை கேட்க முடியாது என்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனதில் எழுந்துள்ள ஆணவம் தான். அந்த ஆணவத்தை அடுத்த சில வாரங்களில் சுக்குநூறாக மக்கள் நொறுக்கப்போவது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 


No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: