Tuesday, December 22, 2015

மழை வெள்ளத்தின் போது இஸ்லாமியர்கள் காட்டிய மனிதம் : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மிலாதுன் நபி வாழ்த்துச் செய்தி :

  ’’ இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு  வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.    

   அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்கவேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள். எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே அவர் வாழ்ந்து காட்டினார். அண்ணல் நபிகளின் போதனையை இங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தவறாமல் கடைபிடிப்பவர்கள் என்பதை  சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை&வெள்ளத்தின் போது  அவர்கள் ஆற்றிய பணியிலிருந்தே இந்த உலகம் உணர்ந்து கொண்டது. பிறர் செய்யத் தயங்கும், முகம் சுழிக்கும் பணிகளைக் கூட இன்முகத்துடன் செய்ததன் மூலம் மனிதம்  மதங்களைக் கடந்தது  என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் நிரூபித்திருக்கின்றனர். இந்த சகோதரத்துவம் தொடர வேண்டும்.

  தொல்லை கொடுப்பவர்களையும், துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு மனிதகுலத்திற்கு வேண்டும்-; எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை அன்பால் எதிர்கொண்டு, எதிரிகளையும் அரவணைக்கவேண்டும் என்ற தத்துவத்தை போதித்த அவர், அதை தமது வாழ்விலும் கடைபிடித்தார். நபிகள் நாயகம் கற்பித்த இந்த போதனைக ளையும் நம் வாழ்வில்  கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் என்று கூறி வாழ்த்துகிறேன்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: