Saturday, March 24, 2012

பெரிய மாவட்டங்களை பிரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

கிருஷ்ணகிரி: ""தமிழகத்தில் வட மாவட்டங்கள் அனைத்து நிலைகளிலும் பின்தங்கியுள்ளது. இதற்கு நிர்வாக வசதி இல்லாதது காரணமாகும். அதனால், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம் ஆகிய பெரிய மாவட்டங்களை பிரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கிருஷ்ணகிரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல், கர்நாடகாவில் உள்ள அணைகளில் உள்ள நீரை கோடை காலத்தில் விவசாயிகள் பயன்படுத்தி சாகுபடி செய்கின்றனர். தமிழக அரசு இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும், கர்நாடகா விவசாயிகள் கோடை காலத்திலும் அணை நீரை கொண்டு விவசாயம் செய்வது நியாயமானது என, கர்நாடகா முதல்வர் கூறுகிறார்.ஆற்று நீர் பிரச்னையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசுகள் அண்டை மாநிலத்திடம் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்து விட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு 2007ம் ஆண்டு வெளியானாலும் கூட, தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட தற்போதுள்ள தமிழக அரசும், இதற்கு முன் ஆண்ட தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் உதயகுமாரை தமிழக அரசு நம்ப வைத்து ஏமாற்றி விட்டதுடன் அவர்களின் போராட்டத்தை கொச்சைபடுத்தி வருகிறது. தற்போது அணு உலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் உதயகுமார் உடனடியாக உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும். உடல் நலம் நன்றாக இருந்தால் தான் மேற்கொண்டு அணு உலையை எதிர்த்து போராட முடியும்.தமிழகத்தில் வட மாவட்டங்கள் அனைத்து நிலைகளிலும் பின் தங்கியுள்ளது. இதற்கு நிர்வாக வசதி இல்லாதது காரணமாகும். அதனால் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம் ஆகிய பெரிய மாவட்டங்களை, நிர்வாக வசதி கருதி பிரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், வன விலங்குகள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் இலங்கையில் ஒன்றாக சேர்ந்து இருந்தால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. தனி ஈழம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வாகும். தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்கட்சியாக இருக்கும் போது மட்டுமே, தனி ஈழத்தை பற்றி பேசுவார். ஆளும் கட்சியாக இருக்கும் போது அதை பற்றி பேசமாட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: