Sunday, March 25, 2012

காவிரியில் மீண்டும் கர்நாடகம் விஷமம்... அனைத்துக் கட்சிக் கூட்டம் கோருகிறார் ராமதாஸ்

சென்னை: காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசும், அந்த மாநில விவசாயிகளும் மீண்டும் தமிழக நலன்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதால் இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புகளையும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் கர்நாடக அரசு, அடுத்த கட்டமாக தமிழக உழவர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், நீர் மின் உற்பத்தி செய்யவும் வசதியாக மேகதாது என்ற இடத்தில் 60 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது.

இது கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் விட பெரியதாகும். மேட்டூர் அணையில் மூன்றில் இரண்டு பங்கு கொள்ளளவு கொண்டதாகும்.

இந்த அணை கட்டப்பட்டால் மழைக்காலங்களில் தமிழ்நாட்டிற்கு கசிந்து வரும் வெள்ள நீர்கூட காவிரி ஆற்றில் வராத நிலை ஏற்பட்டு விடும். இதனால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். புதிய அணை கட்டுவது ஒருபுறம் இருக்க, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மீறி கர்நாடக அணைகளில் உள்ள காவிரி தண்ணீரைப் பயன்படுத்தி அங்குள்ள விவசாயிகள் கோடை சாகுபடி செய்து வருகின்றனர்.

கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரை அம்மாநில விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டால், தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்படும். இதனால் காவிரி தண்ணீரை நம்பியுள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

கர்நாடகத்தில் கோடை சாகுபடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருப்பதால், ஆத்திரமடைந்துள்ள கர்நாடக அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர்கூட தரக்கூடாது என்று போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.

கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவும் அவர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இத்தகைய சூழலில் காவிரி பாசன விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. கர்நாடக அரசின் விதி மீறல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ள போதிலும், அரசியல் ரீதியிலான அழுத்தங்களையும் தந்தால்தான் காவிரி ஆற்று நீரில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும், அத்தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் இன்றுவரை வெளியிடப்படவில்லை. எனவே காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து விவாதிக்கவும், இந்தப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்யவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: