Saturday, March 17, 2012

தமிழ் மொழி, இனத்துக்கு கருணாநிதி செய்தது என்ன? ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழ் இன, மொழிக்கு கருணாநிதி செய்தது என்ன? அப்படிச் செய்திருந்தால், அவருடன் நேரடியாக விவாதிக்க, தான் தயாராக இருப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சவால் விட்டுள்ளார்.

பா.ம.க., சார்பில், சென்னையில் நேற்று நடந்த "திராவிட மாயை' கருத்தரங்கில் அவர் பேசியதாவது: திராவிடம் என்ற மாயையை உருவாக்கி, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள், திராவிடம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமைகளை, பிற மாநிலங்களிடம் அடகு வைத்துவிட்டன. ஆற்று நீர் உரிமைகள் தீர்க்க முடியாத அளவுக்கு தீவிரம் அடைந்ததற்கு, திராவிடக் கட்சிகளே காரணம். திராவிடம் என்ற மாயையால் தமிழகம் சீரழிந்தது பற்றி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே "திராவிட மாயை' கருத்தரங்கை நடத்துகிறோம். திராவிடம் என்ற சொல்லை கட்சிப் பெயரில் கொண்டுள்ள தி.மு.க., தமிழகத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டது. அதன் தலைவர் கருணாநிதி, தமிழுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார். தமிழ் மொழிக்கும், இனத்துக்கும் அவர் செய்தது என்ன? சாதியை ஒழிக்க என்ன செய்தார். ஒரு தெரு அல்லது ஒரு சிற்றூரில் சாதியை ஒழித்துள்ளாரா? கடவுள் இல்லை என்பதில், அவரின் தற்போதைய நிலை என்ன?

காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒற்றைக் கொள்கையைக் கொண்டு ஆட்சிக்கு வந்தார், இப்போது அக்கொள்கையின் நிலை என்ன? பெண்ணுரிமைக்காக அவர் செய்தது என்ன? அவருடைய "டிவி'க்கள் பெண்ணுரிமைக்குத் தரும் முக்கியத்துவம் என்ன? பார்ப்பனர் எதிர்ப்பிலேயே இப்போதும் இருக்கிறாரா? தமிழும், தமிழ் இனமும் தான் ஆதியில் தோன்றியது என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை, தமிழர் முன்னேற்றக் கழகம் என மாற்ற வேண்டியது தானே? தமிழைச் செம்மொழியாக உயர்த்தியதாகக் கூறும் கருணாநிதி, செம்மொழிக்காக என்ன நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தந்துள்ளார். தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என, இப்போது தான் தோன்றியதா? ஆங்கிலம், தமிழ் என இரு மொழிக் கொள்கை கொண்ட கருணாநிதிக்கு, தமிழ் என்ற ஒரு மொழிக் கொள்கை எப்போது வரும். சாராயம், திரைப்பட மோகம் என தமிழ் இனத்தை அடிமையாக்கியதைத் தவிர, தமிழ் இனத்துக்கு உருப்படியாகக் கருணாநிதி செய்தது என்ன? அப்படிச் செய்திருந்தால், அது குறித்து அவருடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: