Thursday, December 2, 2010

உயர் நீதிமன்றத்தில் 5 வன்னியர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்-ராமதாஸ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 10 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும்போது குறைந்தபட்சம் 5 வன்னியர்களையாவது நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 9 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மேலும் ஒரு நீதிபதி, மிக விரைவிலேயே ஓய்வுபெற இருப்பதால் காலியிடங்கள் பத்தாக உயரும். இந்த காலி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யும்போது இதுவரையில் போதிய அளவிற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாத வகுப்பினருக்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான வன்னியர் வகுப்பைச் சேர்ந்த தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இப்போது பணியில் உள்ள 51 நீதிபதிகளில் ஒரேயொருவர் மட்டும்தான் வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்.

மாநிலத்தின் இதர முக்கியப் பிரிவினர் அதிகப் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தொகையில் 5ல் ஒரு பங்குள்ள வன்னியர் வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களை, அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் கெளரவமான எண்ணிக்கையில் கூட நீதிபதிகளாக நியமிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்திருப்பது அந்த மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பிய பின்னர் அடுத்த 3, 4 ஆண்டுகளுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட இருப்பதுதான் இதற்குக் காரணம்.

எனவே இப்போது காலியாகவுள்ள 10 நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பெயர்களை பரிந்துரை செய்யும் போது வன்னியர் வகுப்பைச் சேர்ந்த தகுதியுள்ள வழக்கறிஞர்களை தேர்வுக் குழுவினர் பரிந்துரை செய்ய வேண்டும்.

உயர் நீதிமன்றத்திலும், இதர நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்களாகவும், அரசு தரப்பு வழக்குகளில் வாதாடும் குழுக்களிலும் மற்றும் அரசு பொது நிறுவனங்களிலும் பணியாற்றி அனுபவமுள்ள இந்தச் சமூக வழக்கறிஞர்கள் அதிகமாகவே உள்ளனர். அவர்களிலிருந்து குறைந்தபட்சம் 5 பேரையாவது புதிய நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

அதன்மூலம் இச்சமூகத்திற்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதியை துடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: