Monday, December 28, 2009

பென்னாகரம் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்- பாமக

சென்னை: பென்னாகரம் தொகுதியில் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால், தொகுதி தேர்தல் அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு அத்தொகுதியில் பல்வேறு அதிகார அத்துமீறல்கள் ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று இரவு பா.ம.கவின் இளைஞர் சங்கத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமனி ராமதாஸ் பென்னாகரம் தாசில்தார் பொன்ராஜ் மற்றும் பென்னாகரம் காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார், டி.எஸ்.பி. பஞ்சவர்னம் ஆகியோர்களால் வாகன சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்பட்டு அவமதித்துள்ளனர்.

மேலும் தொகுதிக்கு செல்ல முடியாத வகையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை மறித்து தடை செய்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரனிடம் தெரிவித்ததற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் புகார் செய்த பா.ம.கவினர் மீதே பொய் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

எனவே இந்த பாரபட்ச நடவடிக்கையை கருத்தில் கொண்டு இதில் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரி கோட்ட வருவாய் ஆய்வாளர் (டி.ஆர்.ஓ.) மகேஸ்வரி, அமைச்சர் காந்திசெல்வனின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும் இவர் ஓய்வுபெற்ற போதிலும் இந்த அரசினால் வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு உத்தரவின் பெயரில் பணியாற்றி வருகிறார்.

இவர் அத்தொகுதியின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டால் நேர்மையாகவும், நடுநிலையோடும், பாரபட்சமின்றியும் தேர்தல் நடைபெறாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே தேர்தல் அதிகாரி மகேஸ்வரியை இடமாற்றம் செய்யப்பட்டு பாரபட்சமில்லாத நேர்மையான அதிகாரி அமர்த்தப்பட வேண்டும்.

தொகுதியில் வாகனச் சோதனை என்ற பெயரில் 18 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்வதாக கூறி எதிர்க்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறையினர் மிகுந்த தொல்லை கொடுத்து வருகின்றனர்.

அதேவேளையில் ஆளும் கட்சியின் கட்சிக்கொடி கட்டி செல்லும் வாகனங்களை சோதனை ஏதும் செய்யாமல் சுதந்திரமாக சுற்றி வர காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

எனவே தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரின் இதுபோன்ற அத்து மீறல்களை கண்டும் காணாமல் இருந்து விடாமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து தேர்தல் நியாயமான முறையில் நடைபெற எல்லாவித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி மீது வழக்கு..

இதற்கிடையே, போலீசாருடன் நடந்த மோதலையொட்டி டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாமகவினரை சந்திப்பதற்காக இரவில் பென்னாகரம் சென்ற அன்புமணியின் காரை போலீஸார் அனுமதிக்க மறுத்ததைத் தொடர்ந்து பாமகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.

பென்னாகரம் தாசில்தார் டியூக் பொன்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோருடன் அன்புமணியுடன் வந்த பா.ம.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பா.ம.க.வினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதோடு பதற்றமும் ஏற்பட்டது.

அங்கு நடந்ததை படம் எடுத்து கொண்டு இருந்த தேர்தல் கமிஷன் வீடியோகிராபரை ஆதனூரை சேர்ந்த செந்தில் என்பவர் தாக்கினார். அப்போது கேமரா அடித்து நொறுக்கப்பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தேர்தல் பிரசாரம் செய்ய முன் அனுமதி பெறாமல், கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ததாக டாக்டர் அன்புமணி, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, பென்னாகரம் பா.ம.க. ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் மகாலிங்கம் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் தேர்தல் கமிஷன் வீடியோ கிராபரை தாக்கி காமிராவை சேதப்படுத்தியதாக பென்னாகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஆதனூர் செந்தில், பென்னாகரம் பா.ம.க. ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, தொப்பூர் பஞ்சாயத்து தலைவர் தயாளன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: