Tuesday, May 26, 2009

தமிழ்நாட்டின் எதிர்காலம் நம்மால்தான் உருவாகும் :ராமதாஸ்

சென்னை: ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சாதகமாக மோசடி செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறி அதை ஒரு மாடல் எந்திரம் மூலமும் 'விளக்கினார்' பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பாமகவின் தலைமைப் பொதுக்குழு கூட்டம், சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. அதில் ராமதாஸ் பேசுகையில்,

எங்களை யாரும் எந்த காலத்திலும் எந்த நிலையிலும் வீழ்த்த முடியாது. நாங்கள் வீழ்வதற்காக பிறக்கவில்லை. வெல்வதற்காக பிறந்தவர்கள்.

ஆனாலும் சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம், தில்லுமுல்லுகள் போன்றவை முன்னால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம். அதுதான் உண்மை. பணத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு என்று சொல்ல நாவு கூசுகிறது. குடிகார நாடு என்றே தமிழ்நாட்டை சொல்லலாம். புகை, சாராயத்தை ஒழிக்க நாம் பாடுபட்டோம். புகையிலை, சாராயம் உள்ளிட்ட `லாபி'கள்தான் ஆட்சியாளர்களை உருவாக்குவார்கள் என்ற பேச்சு உண்டு.

புகையிலை, சாராய தயாரிப்பாளர்களுக்கு அரசியல்வாதிகளும் துணை போயிருக்கிறார்கள். திமுககாரர்களுக்கு அவர்கள் கொடுத்த பணமும், திமுகவினரின் பணமும் நம்மை இந்த தேர்தலில் அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.

இளைஞன் சாராயக் கடையிலும், சினிமாவிலும் நிற்கிறான். நாடு, மொழி உணர்வு இல்லாமல் இருக்கிறான்.

தமிழக திட்டக்குழு அறிக்கைபடி, ஒருவனுடைய மாத வருமானம் ரூ.351. அப்படியானால் கால்வாசி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். விவசாயம் அழிந்துவிட்டது. விளைநிலம், ரியல் எஸ்டேட் தொழிலில் மனையாக மாற்றப்பட்டது. சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நிலங்களை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு வாங்கித் தரும் புரோக்கராகத்தான் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்துள்ளது.

தமிழகத்தில் இதுபோன்ற மண்டலங்களைப் பற்றி யாருமே பேசவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஒரே பெண்மணி மம்தா பானர்ஜி. எனவே அவரது போராட்ட குணம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மணல், அரிசி கொள்ளை தொடர்கிறது. இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.


தமிழின பாதுகாவலர் என்றவர்கள் எல்லாம் தொலைக்காட்சி மூலம் பண்பாட்டை அழிக்கிறார்கள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிறார்கள். ஆனால், தமிழ் எங்கும் இல்லை. இது குறித்து என்னிடம் பொதுக்கூட்டத்தில் வாதிட திமுக தயாரா?. இனமானப் பேராசிரியர் வேண்டுமானாலும் வரட்டும்.

சமூக நீதியின் ஒட்டுமொத்த எதிரி காங்கிரஸ். 5 ஆண்டு காலத்தில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கு என்னென்ன பாடுபட்டோம்?. எப்படியெல்லாம் அர்ஜுன்சிங் கேலி செய்யப்பட்டார்? `ஏய்ம்ஸ்' நிறுவன இயக்குனர் வேணுகோபாலை வைத்து என்னென்ன விளையாட்டுகளை விளையாடினார்கள். அன்புமணியை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தினார்கள்?.

இந்தியாவிலேயே சமூக நீதிக்காக போராடக் கூடிய, வாதிடக் கூடிய ஒரே ஒரு ஆளை சொல்லுங்கள், என்னைத் தவிர. ஓ.பி.சி. விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களை பட்டியலிட எனக்கு இப்போது நேரமில்லை.

சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு பாமகவைத் தவிர வேறு கட்சி இல்லை. 1949ல் திமுக தொடங்கப்பட்டது. 60 ஆண்டுகளாக ஏமாற்றிய கும்பலில் இருந்து தமிழக மக்களை நாம் விடுவிக்க வேண்டாமா? இவர்களை தோலுரித்து மக்களிடம் காட்டி, அரசியலில் இருந்து இவர்களை அப்புறப்படுத்தப் போகிறோமா, இல்லையா?. விடை கண்டாக வேண்டும்.

இழந்துவிட்ட பண்பாடு, மொழியை மீட்டெடுக்க, வலிமையுள்ள நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்? இன்னும் நாம் போராட வேண்டும். ஒவ்வொருவரும் போராளியாகுங்கள். நமது பண்பாடு, மொழியை திட்டமிட்டு கண்ணெதிரே அழிக்கும் நாசகாரசக்திகளை எதிர்த்து போராட, அழிக்க நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

உங்களை பின்னிருத்தி நான் முன்னே சென்று போராடப் போகிறேன். நீங்கள் இருக்கும் தைரியத்தில் செல்வேன். தமிழ்நாட்டின் எதிர்காலம் நம்மால்தான் உருவாகும் என்ற உற்சாகத்தோடு செல்லுங்கள்.

திட்டமிட்டு சதி செய்து நம்மை தோற்கடித்துவிட்டார்கள். எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் விஞ்ஞானரீதியில் மோசடி செய்துவிட்டனர். இந்த இயந்திரத்தின் மூலம் எல்லா தொகுதியிலும் மோசடி செய்தால் தெரிந்துவிடும் என்பதற்காக நமக்கான 7 தொகுதிகள் உள்பட சில தொகுதிகளில் மட்டும் செய்தனர் என்ற ராமதாஸ்,

எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் எப்படி மோசடி செய்யலாம் என்பது பற்றி 'செயல்முறை விளக்கம்' அளித்தார். இதற்காக பாமகவே தயாரித்த எலக்ட்ரானிக் இயந்திரம் ஒன்றில் திமுகவின் உதயசூரியன், பாமகவின் மாம்பழம் உள்ளிட்ட சின்னங்கள் இருந்தன.

அந்த இயந்திரத்தில் நிருபர் ஒருவரை அழைத்து மாம்பழம் சின்னத்தில் 20 ஓட்டுகளை போடும்படி கூறினர். அதன்படி 20 ஓட்டுகள் போடப்பட்டன. யார் யாருக்கு எவ்வளவு ஓட்டுகள் விழுந்தன என்று எண்ணும்போது, உதயசூரியன் சின்னத்துக்கு 8 ஓட்டுகளும், மாம்பழம் சின்னத்துக்கு 12 ஓட்டுகளும் விழுந்ததாக இயந்திரம் காட்டியது.

இதைக் காட்டி ஒரு ஓட்டுகூட போடப்படாத உதயசூரியன் சின்னத்துக்கு எப்படி 8 ஓட்டுகள் வந்தன என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் உள்ள புரோகிராமை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல்விழும் ஓட்டுகள் எல்லாம் உதயசூரியன் சின்னத்துக்கு விழும்படி இயந்திரத்தில் புரோகிராமை அமைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட சின்னத்துக்கு போடும் ஓட்டுகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்துக்கு வரும்படியும் மாற்றலாம்.

ஓட்டு பதிவு செய்வதற்காக பட்டனை அழுத்தும் போது அங்கிருக்கும் அதிகாரிகள், குறிப்பிட்ட வயரை பிடுங்கிவிட்டு விடவும் வசதியுள்ளது. இதனால் சத்தம் மட்டுமே கேட்கும். ஆனால் ஓட்டு பதிவு ஆகாது என்று தானே உருவாக்கிய எந்திரத்தைக் காட்டி மனம்போன போக்கில் பேசினார் ராமதாஸ்.

முன்னதாக கூட்டத்தில், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தை கைவிட்டுவிட்டு வாக்கு சீட்டு முறைக்கு மாற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: