Friday, January 31, 2014

தமிழகத்தில் தான், ஓட்டுகள் விற்பதும், வாங்குவதும் நடக்கிறது. அதனால், தமிழகம், அவமான சின்னமாக விளங்குகிறது,”


"தமிழகத்தில் தான், ஓட்டுகள் விற்பதும், வாங்குவதும் நடக்கிறது. அதனால், தமிழகம், அவமான சின்னமாக விளங்குகிறது,” என, பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

சேலத்தில், பா.ம.க., சார்பில், மது ஒழிப்பு குறித்த பெண்கள் மாநாட்டுக்கு தலைமை வகித்து, அக்கட்சியின் நிறுவனர், ராமதாஸ் பேசியதாவது:குழந்தைகளுக்கு ஓட்டுகள் இல்லை. ஆனால், அவர்களே, இன்று ஓட்டுகள் விற்பனைக்கு இல்லை என, தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தெரிவிப்பது, எங்களின் எதிர்காலத்தை விற்பனை செய்யாதீர்கள் என்பதே.கோடி, கோடியாக கொட்டி வைத்துள்ள ஊழல், லஞ்ச கறுப்பு பணம் மூலம், ஓட்டுகள், 2,000, 3,000 ரூபாய்க்கு, தேர்தல் நேரங்களில், விலை பேசப்படுகின்றன. கள்ளப் பணத்தில் இருந்து தான், ஊழல் ஆரம்பிக்கிறது.'ஆம் ஆத்மி' கட்சி, ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஓட்டுகளையும் விலைக்கு வாங்கவில்லை.

தமிழகத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., கட்சிகள், வெற்றிலை பாக்குடன், வெங்கடாஜலபதி படத்தை வைத்து, சத்தியம் வாங்கி, ஓட்டுக்கு, ஐந்து ரூபாய் கொடுத்து, இந்த கலாசாரத்தை துவக்கின. இதை, தி.மு.க., தான் முதலில் கொண்டு வந்தது. அதன்பின், 10 ரூபாய் துவங்கி இன்று திருமங்கலம், பென்னாகரம் தேர்தல்களில்ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை, வழங்கப்பட்டது. இதையே திருமங்கலம் பார்முலா என, கூறுகின்றனர்.பெரியண்ணா, 'டிவி' கொடுத்தாரு, இந்த அம்மா பொங்கலுக்கு, 1 கிலோ அரிசி, சர்க்கரையுடன், 100 ரூபாய் தர்றாங்க. அதை வாங்கும் உங்கள் கணவர்கள், 100 ரூபாயுடன், கூடுதலாக, 100 ரூபாய் போட்டு சாராயம் குடிக்கிறாங்க.

தமிழகத்தில், பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், ஒரு சொட்டு சாராயம் கூட விற்பனை செய்யப்படாது. தமிழகத்தில், 2.5 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். நீங்கள் சரியாக முடிவு எடுப்பீர்கள், உங்கள் குடும்பம் வளம் பெற, எதிர்காலத்தில் குழந்தைகளின் வாழ்வாதாரம் சிறக்க, பா.ம.க.,வை ஆதரிக்க கோரி வருகிறோம். தமிழகத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., கட்சிகளைநிரந்தரமாக ஒழிக்க வேண்டும். இவ்வாறு' அவர் பேசினார்.

Thursday, January 30, 2014

சென்னை பல்கலை. ஆசிரியர் நியமனம்: சமூக அநீதியைப் போக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை பல்கலைக்கழகத்தில் 96 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பர அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல்கள் இன்று முதல் நடைபெறவிருக்கின்றன. இந்த ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தில் இப்போது நிரப்பப்படவுள்ள 96 பணியிடங்களில் முறையான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பொதுப்பிரிவினருக்கு 17 இடங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 இடங்கள், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 21 இடங்கள், பட்டியலினத்தவருக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4 இடங்களும், மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 11 இடங்களும், பட்டியலினத்தவருக்கு 3 இடங்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுப்பிரிவினருக்கு 51 இடங்கள், அருந்ததியர் மகளிருக்கு 27 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும் தவறான இட ஒதுக்கீட்டு முறை தான்.
2000 ஆவது ஆண்டில் தமிழக அரசு பிறப்பித்த இட ஒதுக்கீட்டு ஆணைப்படி 100 புள்ளி சுழற்சி முறை (100 Point Roster)இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி ஒரு துறையில் 3 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் முதல் பணியிடம் பொதுப்பிரிவுக்கும், இரண்டாவது பணியிடம் பட்டியலினத்தவருக்கும் ஒதுக்கப்படும். மூன்றாவது பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு வழங்கப்படும். அதன்பின் நான்காவது பணியிடம் எப்போது நிரப்பபடுகிறதோ, அப்போது அப்பணியிடம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் 100 புள்ளி சுழற்சி முறை இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தவரை  பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனத்தில் குழப்பம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், 2007 ஆம் ஆண்டில் சில பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டதால், 100 புள்ளி சுழற்சி முறையை 200 புள்ளி சுழற்சி முறையாக (200 Point Roster) மாற்றி தமிழக அரசு ஆணையிட்டது. இதில் தான் குழப்பம் ஏற்பட்டது. 200 புள்ளி சுழற்சி முறை இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்ட போது, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த 100 புள்ளி சுழற்சி முறையின் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், எந்த குழப்பமும் ஏற்பட்டிருக்காது. ஆனால், 100 புள்ளி சுழற்சி முறை அப்படியே கைவிடப்பட்டு, 200 புள்ளி சுழற்சி முறை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், முந்தைய முறையில் எந்த பிரிவுக்கெல்லாம்  இட ஒதுக்கீடு கிடைத்ததோ, அவர்களுக்கே மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முந்தைய முறையில் இட ஒதுக்கீடு பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் மிகக்குறைந்த பணியிடங்களே இருக்கும் என்பதால், ஒரு பிரிவினருக்கு ஒரு முறை இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. அதுமட்டுமின்றி, ஒரு பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை, இன்னொரு பிரிவினருக்கு வழங்குவதால் அவர்களுக்கிடையே தேவையற்ற பகைமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நடக்கும் முறைகேடுகளை களையும்படி கடந்த 17 ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், குறைகளை சரி செய்ய வேண்டிய தமிழக அரசும், சென்னைப் பல்கலைக்கழகமும் அவசர, அவசரமாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது கண்டிக்கத்தக்கது.

எனவே, சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இன்று முதல் நடைபெற்று வரும் நேர்காணல்களை ரத்து செய்ய அரசு உத்தரவிட வேண்டும். 200 புள்ளி சுழற்சி முறையைகைவிட்டு, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த 100 புள்ளி சுழற்சி முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயித்து பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்,

தமிழக ஆளுனர் உரை! இல்லாத சாதனைக்கு இலவச விளம்பரம்! ராமதாஸ் அறிக்கை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டத்தொடரை தொடக்கி வைத்து ஆளுனர் ரோசய்யா உரையாற்றியுள்ளார். ஆளுனர் உரையில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே என்பதைப் போல அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவுள்ள திட்டங்களின் கொள்கை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவது தான் ஆளுனர் உரையின் நோக்கம் ஆகும். ஆனால், அதற்கு நேர் எதிரான வகையில் அரசின் புகழ்பாடும் அறிக்கையாக நடப்பாண்டின் ஆளுனர் உரை அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 5 விழுக்காடு என்ற அளவை விட குறைந்து விட்டது. இதை சரி செய்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் ஆளுனர் உரையில் இடம் பெறவில்லை. நடப்பாண்டில் மொத்தம் 130 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நெல் உற்பத்தி 100 லட்சம் டன் என்ற அளவைக் கூட எட்டாது எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் நெல் மற்றும் கரும்பு உற்பத்தி குறைந்ததற்கு அரசின் தவறான கொள்கைகளும், விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்காததும் தான் காரணமாகும். இந்தக் குறைகளை சரி செய்து விவசாயத்திற்கு புத்துயிரூட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, வேளாண் உற்பத்தித் திறனை பெருக்க இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்ற வெற்று வசனத்தை மட்டும் ஆளுனர் உரையில் இடம் பெறச் செய்திருக்கிறது. தமிழகத்தை வாட்டி வதைக்கும் மின் வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றை சரி செய்வதற்கான எந்த திட்டமும் ஆளுனர் உரையில் இடம் பெறாதது அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மட்டும் கர்நாடகத்தில் ரூ.12,000க்கு முதலீடு செய்ய முன்வந்துள்ள நிலையில், தொழில்துறையில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் தமிழகத்தை தேடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, எதார்த்தத்தில் இருந்து ஆளுனர் உரை எந்த அளவுக்கு விலகிச் சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஆளுனர் உரையில் வரவேற்கும்படியாக உள்ள ஒரே அறிவிப்பு சென்னையில் பெருநகர தொடர்வண்டித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் புதிய வழித்தடங்களில் செயல்படுத்தப்படும் என்பது தான். மோனோரயில் திட்டத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்த தமிழக அரசு, பெருநகர தொடர்வண்டித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விசயமாகும். இதைத் தவிர, ஆளுனர் உரையின் 43 பக்கங்களை திரும்பத் திரும்ப புரட்டிப் பார்த்தாலும் பாராட்டும் வகையில் எந்த ஓர் அறிவிப்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
 சுருக்கமாக கூற வேண்டுமானால், அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கோடிகளை தமிழக அரசு வாரி இறைக்கிறது..... இம்முறை ஆளுனர்  உரை  மூலம் செய்யாத சாதனைகளுக்கு செலவில்லாமல் விளம்பரம் தேட அரசு முயன்றிருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்

Tuesday, January 28, 2014

தர்மபுரி பாமக மகளிர் அணி மாநாட்டில் ராமதாஸ்



 


தர்மபுரி பாமக மகளிர் அணி மாநாட்டில் ராமதாஸ்,   ‘’தமிழ்நாட்டின் இரண்டு இன்று முக்கிய பிரச்சனையாக உள்ளது. ஒன்று மது என்ற அரக்கன் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக நாட்டை குடிக்க வைத்தே பெண்களின் தாலியை அறுத்து வருகின்றது. அதை ஒழிக்க வேண்டும்.
இரண்டாவது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது கிடையாது. இந்த இரண்டும் கிடைக்க பாமக ஆட்சி அமையவேண்டும்.
அதேபோல கொள்கைகளை மறந்து பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளனர் அதை முறியடிப்போம். இந்த குழந்தைகள் ஓட்டு இல்லை ஆனால் இவர்கள் ஓட்டு விற்பனை இல்லை என்று விளம்பர படுத்துகின்றனர். இந்த கொள்ளை நமது மக்களிடம் வரவேண்டும்’’ என்றார்.

தே.மு.தி.க., பா.ம.க. உறுதியாக கூட்டணிக்கு வரும் என்று நம்புகிறோம்; பொன்.ராதாகிருஷ்ணன்



தே.மு.தி.க., பா.ம.க. உடன் பா.ஜனதா கட்சி நடத்தி வரும் கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அக்கட்சிகள் உறுதியாக கூட்டணிக்கு வரும் என்றும் நம்புவதாகவும் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை கமலாலயத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்,
பா.ஜனதா கட்சி பிற கட்சிகளுடன் நடத்தி வரும் கூட்டணி பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை வண்டலூரில் வரும் 8ந் தேதி நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் கூடுவார்கள். இதில், வெங்கையாநாயுடு எம்.பி., தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடனான கூட்டணி பேச்சு வார்த்தை எந்த நிலையில் உள்ளது?.

பதில்:– 2 கட்சிகளுடனான கூட்டணி பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உறுதியாக கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்புகிறோம்.
கேள்வி:– தி.மு.க. தலைமை மீது மு.க.அழகிரி முறைகேடு புகார் கூறியுள்ளாரே?.

பதில்:– இதில் கவலைப்பட வேண்டியது கட்சியின் தலைவர் கலைஞர்தான்.

கேள்வி:– பிப்ரவரி 8ந் தேதி பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு முன்பாக கூட்டணி இறுதி செய்யப்பட்டால், அக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?.

பதில்:– நிச்சயம் வாய்ப்பு இல்லை. வேட்பாளர்களை கட்சி தலைமைதான் முடிவெடுத்து அறிவிக்கும்.

கேள்வி:– பா.ஜ.க. மகளிரணி சார்பில் மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்துகிறீர்களே. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா?.

பதில்:– படிப்படியாக மதுவில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Sunday, January 26, 2014

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாய கல்வியை இலவசமாக தருவோம்: ராமதாஸ்



மதுவை ஒழித்து மகளிரை காக்க பூரண மதுவிலக்கு வேண்டியும், பெண்ணுரிமை மற்றும் பாதுகாப்பு கோரியும், ஓசூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. மகளிர் அணி சார்பில், அரசியல் எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.
ஓசூர்–பெங்களூர் சாலையில் உள்ள கார்சன் ஓட்டல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேராசிரியை லட்சுமி பழனிசாமி தலைமை தாங்கினார். புஷ்பா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சி நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியபோது,  ’’அ.தி. மு. க. ஆட்சியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டன. கடந்த 3 வருடங்களில் தமிழ்நாட்டில் அதிக அளவில் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. 8, 10 மற்றும் 12 வயதிற்குட்பட்ட 873 சிறுமியர் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லியில் கடந்த ஆண்டு ஓடும் பஸ்சில் மாணவி ஒருவர் 6 பேர் அடங்கிய கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் அந்த மாநில போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதால், குற்றவாளி களுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
ஆனால், நமது மாநிலத்தில் அதே ஆண்டு டிசம்பர் மாதம், தூத்துக்குடி மாவட்டம் தாத்தாங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த புனிதா என்ற 12 வயது சிறுமி, குடிகார கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொலையானார். ஆனால், இச்சம்பவத்தில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் மக்களின் வருமானம் உயரவில்லை, ஆனால் அரிசி, பருப்பு..உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் தாறுமாறாக உயர்ந்து விட்டன.
குடியால் குடும்பங்கள் சீர்குலைந்து பல லட்சம் பெண்களின் வாழ்க்கை நரகமாகி விட்டது. குடியால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இளம் விதவைகள் உருவாகி உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான, கட்டாய கல்வியை இலவசமாக தருவோம். தரமான கல்வி, தரமான மருத்துவம், விவசாயத்திற்கான அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்குவதை கொள்கையாக கொண்டுள்ள ஒரே கட்சி, உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சிதான்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில், எங்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்.


கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணிக்கு ஆதரவு தந்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்’’என்று தெரிவித்தார்.

Saturday, January 25, 2014

யார் ஏளனம் செய்தாலும், சிண்டு முடிய முயன்றாலும் கவலையில்லை : ராமதாஸ்



பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  வெளியிட்ட அறிக்கையில்,  ‘’அனைத்து சமுதாய பேரியக்கத்தின் முதல் கூட்டம் கடந்த 18.08.2012 அன்று சென்னையில் நடைபெற்றது. அதன்பின்னர் 02.12.2012 அன்று சென்னையில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டமும், தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றன.  இதில் பேசிய சில சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் அனைத்து சமுதாய பேரியக்கம் அரசியலில் போட்டியிட வேண்டும் என்று கூறிய போது, நான், அனைத்து சமுதாய பேரியக்கம் அரசியல் இயக்கமல்ல... இது ஒரு சமுதாய இயக்கம் என்று விளக்கமளித்து இருக்கிறேன்.
அனைத்து சமுதாய பேரியக்கத்தில் அங்கம் வகிக்கும் சில தலைவர்கள் ஏற்கனவே அரசியல் கட்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ம.க. தலைமையில் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அதன்படி தான் சமூக ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது.
அந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. முதல் வேட்பாளர் பட்டியல் 21.10.2014 அன்று வெளியிடப் பட்டது. இக்கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று நான் தெரிவித்திருந்தேன்.  அதன்பிறகு, 20.01.2014 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டத்திலும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, அதற்கு முந்தைய கூட்டங்களில் தெரிவித்த அதே கருத்தை நான் மீண்டும் கூறினேன்.


ஆனால், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டை அனைத்து சமுதாய பேரியக்கம் திடீரென எடுத்தது போன்று செய்தி வெளியிடுவது சரியல்ல.
அனைத்து சமுதாய பேரியக்கத்திற்கும், சமூக ஜனநாயக கூட்டணிக்கு வித்தியாசம் தெரியாமல் சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமூக நீதி, சமூக ஒருங்கிணைப்பு ஆகியவை தான் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் நோக்கங்கள் ஆகும். யார் ஏளனம் செய்தாலும், சிண்டு முடிய முயன்றாலும், உள்நோக்கம் கற்பித்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மேலும் வலிமையுடனும், உத்வேகத்துடனும் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் லட்சியப்பயணம் தொடரும்’’ என்று கூறியுள்ளார்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: