Thursday, September 19, 2013

தமிழ்நாட்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ஒதுக்கீடு



 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு பாதியாக குறைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாகும்.
இந்தியாவில் கல்வி கற்காத குழந்தைகளே இருக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி கடந்த 2009-10 ஆண்டில் ரூ.862 கோடியாக இருந்த தமிழகத்திற்கான நிதிஒதுக்கீடு படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டில் ரூ.1988.24 கோடியாக அதிகரித்தது.


நடப்பாண்டில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.3000 கோடியாக உயர்த்தித் தரும்படி மத்திய அரசை  தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட மத்திய அரசு, கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட சுமார் ரூ. 500 கோடி குறைவாக ரூ. 1500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது.
14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதென்றால் ஒவ்வொரு ஆண்டும் புதிய பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்; ஏற்கனவே திறக்கப்பட்டப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் பட வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. இவற்றையெல்லாம் செய்து தர அதிக அளவில் நிதி உதவி தேவைப்படும் நிலையில், ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வந்த நிதியில் 25 விழுக்காட்டை குறைத்திருப்பது எந்த வகையிலும்  நியாயமாக இருக்காது.
அனைவருக்கும் கல்வி இயக்க நிதி இந்தளவுக்கு குறைக்கப்பட்டால் புதிய பள்ளிகளை தொடங்க முடியாத நிலை எற்படுவதுடன், இருக்கும் பள்ளிகளையும் மூட வேண்டிய அவலம் உருவாகும்.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற் காக கடந்த ஆண்டை விட 17 விழுக்காடு அதிகமாக ரூ. 27,258 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை போதுமானதல்ல என்று எதிர்க்கட்சிகள் கூறியபோது கல்வித் துறையை பொறுத்தவரை பணம் ஒரு பொருட்டல்ல என்றும், தேவையான நேரத்தில், தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.


ஆனால், அந்த உத்தரவாதத்திற்கு மாறாக  தமிழ்நாட்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏற்கக் கூடியதல்ல.
இந்தியாவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பது உண்மை தான். அதை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது போன்ற சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தலாம். அதைவிடுத்து கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது நாட்டின் வளர்ச்சியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
எனவே, அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தவும், புதிய பள்ளிகளைத் தொடங்கவும் வசதியாக மாநில அரசு கோரியவாறு ரூ. 3000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு இது தேசிய அவமானம் : ஜி.கே.மணி



சேலம் மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் 3 பேர்  விடுவிக்கப்பட்டனர்.  அவர்களை வரவேற்பதற்காக சென்ற ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர்,  ‘’தமிழகத்தில் பாமகவினர் மீது போலீஸார் தொடர்ந்து பொய் வழக்குகள் தொடர்ந்து வருகின்றனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது.
இலங்கை ராணுவத்திடம் இருந்து தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே நிரந்தரத் தீர்வு கட்சத் தீவை மீட்பது மட்டுமே.
இலங்கைச் சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வெள்ளைக் கொடியுடன் இலங்கை அரசிடம் சரணடைய இருப்பதாக, காரைக்கால் முதல் ராமேசுவரம் வரையிலான மீனவர் சங்கங்கள் அறிவித்திருப்பது மத்திய அரசுக்கு ஒரு தேசிய அவமானம்.
எனவே, இனியாவது மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களைக் காக்க முன் வர வேண்டும்’’ என்றார்.

ஜெ., அவதூறு வழக்கு : ராமதாஸ் நேரில் ஆஜராக விலக்கு

அரியலூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக பேசியதாக அம்மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் ராமதாசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இம்மாதம் 24ம் தேதி நேரில் ஆஜராவதற்கு ராமதாஸுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்கு விலக்கு அளிக்க கேட்டும், அது தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ் அரியலூர் கோர்ட்டில் ராமதாஸ் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்தார்

Tuesday, September 17, 2013

விஜயகாந்த் மீது 34 அவதூறு வழக்குகள் போட்டு அவரை முடக்கியுள்ளார் ஜெ.: ராமதாஸ் தாக்கு

சென்னை: தமிழகத்தில் நடப்பது அண்ணா திமுக அரசா அல்லது அடக்குமுறை திமுக அரசா என்ற ஐயம் ஏற்படுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில் அமைச்சர்கள் உறங்கும் படத்தை வெளியிட்ட ஒரு நாளிதழுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு விளம்பரம் நிறுத்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்ததற்காக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இது கடந்த இரு ஆண்டுகளில் அவர் மீது தொடரப்பட்ட 12 ஆவது அவதூறு வழக்காகும்.
ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்துவது தான் எதிர்க்கட்சிகளின் முதன்மைக் கடமையாகும். ஆனால், ஆயிரம் தவறுகளை செய்தாலும் அரசை எவரும் விமர்சிக்கக் கூடாது என்ற பிடிவாதத்துடன் செயல்படும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமது தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதன் ஒரு கட்டமாகத் தான் 90 வயதான கலைஞரை நீதிமன்றங்களின் படிகளில் ஏற வைக்க வேண்டும் என்பதற்காக அவதூறு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
கலைஞர் மட்டுமின்றி, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் விருப்பம்போல அவதூறு வழக்குகளை முதலமைச்சர் தொடர்ந்து வருகிறார். தமிழகம் வறுமையில் வாடும்போது, கொடநாடு மாளிகைக்கு சென்று முதலமைச்சர் ஓய்வெடுப்பது முறையா? என்று கேட்டதற்காக 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் அரியலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக 4 மாதம் கழித்து என் மீது இரண்டாவது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அதே போல் சட்டப்பேரவையில் முதலமைச்சரிடம் சவால் விட்டுப் பேசினார் என்பதற்காக அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர் மீது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது இத்தனை அவதூறு வழக்குகளைத் தொடர்ந்த அநியாயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெற்றதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அவரது கடமையை செய்யக் கூடாது என்பதற்காகவே அவர் மீது ஆட்சியாளர்கள் இத்தனை வழக்குகளைத் தொடர்ந்து முடக்கி வைத்திருக்கிறார்கள்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீதும் 5 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. ஊடகங்களும் ஜெயலலிதாவின் அவதூறு வழக்குகளுக்கு தப்பவில்லை. தமிழ்நாட்டில் இரு நாளிதழ்களைத் தவிர மற்ற அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு பாய்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களை நிறுத்தி அவற்றை முடக்கும் செயலிலும் அரசு ஈடுபட்டிருக்கிறது.
தமிழக அரசும், முதலமைச்சரும் தொடர்ந்துள்ள வழக்குகள் அனைத்துமே அடிப்படை ஆதாரமற்றவை. இவற்றில் எந்த வழக்கிற்குமே முதல்நோக்கு ஆதாரம் கூட கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்குகள் தொடரப்படுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியை ஒடுக்குவதற்காக என்னையும், கட்சியின் முன்னணி தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது, 8000 நிர்வாகிகளை சிறையில் தள்ளி கொடுமைப் படுத்தியது, 123 பேர் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டத்தை ஏவியது என ஏராளமான அடக்குமுறைகளை இந்த அரசு கட்டவிழ்த்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரான ஜெ.குருவை ஆதாரமே இல்லாமல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தமிழக அரசு, அந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் இரத்து செய்த பிறகும் மீண்டும், மீண்டும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சியிருக்கிறது. மூன்று மாதங்களில் அவர் மீது மூன்று முறை தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட முதலமைச்சர், மற்ற கட்சிகளை அடக்க அவற்றின் மீது அவதூறு வழக்குகளை பாய்ச்சி வருகிறார். தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அடக்குமுறைகளில் மட்டும் தான் தான் முதன்மை மாநிலமாக்கியிருக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அவதூறு வழக்குகளை தொடர்ந்து ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார். இந்த ஆட்சி முடிவதற்குள் இன்னும் எவ்வளவு வழக்குகளைத் தொடர்ந்து எத்தனை சாதனைகளை படைக்கப்போகிறாரோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் இப்போது கட்டவிழ்த்து விடப்படுவது போன்ற அடக்குமுறைகள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் நடப்பது அண்ணா திமுக அரசா? அல்லது அடக்குமுறை திமுக அரசா? என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
தமிழக நீதிமன்றங்களில் ஏற்கனவே லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கும் நிலையில், தேவையில்லாத அவதூறு வழக்குகளைத் தொடருவதன் மூலம் நீதிமன்றங்களின் மாண்பை குறைக்க முயல்கிறார். பழிவாங்கும் நோக்கத்துடன் பொய் வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிக்கும் நடவடிக்கைகளை நீதித்துறையும் கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, அவற்றைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்தாமல், எதிர்க்கட்சிகளையும், ஊடகங்களையும் ஒடுக்குவதில் மட்டும் முதலமைச்சர் தீவிரம் காட்டுவது அவரது பழிவாங்கும் உணர்வையே காட்டுகிறது. தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த, தமிழக மக்களின் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி, அவற்றுக்கு தீர்வு காண ஆளுங்கட்சி முயன்றால், அது தான் ஆக்கபூர்வமான அரசியலுக்கு உதாரணமாக இருக்கும். அதைவிடுத்து அவதூறு வழக்குகள் மற்றும் அடக்குமுறைகளின் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிவிடலாம் என்று முதலமைச்சர் கருதினால் அவர் பகல் கனவு காண்கிறார் என்று தான் அர்த்தம். இத்தகைய அடக்குமுறைகளின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியையோ அல்லது மற்ற எதிர்க்கட்சிகளையோ ஒடுக்க முடியாது. அதே நேரத்தில் தொடர்ந்து ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் தமிழக அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும், ஊடகங்களும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Saturday, September 14, 2013

2016-ல் பா.மக. ஆட்சி அமையும்: அன்புமணி ராமதாஸ்



பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செஞ்சியில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ம.க.வை சேர்ந்த 123 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத செயல் இது. சிறையில் உள்ள அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும். மரக்காணம் கலவரம்  நீதி விசாரணை கோரினோம். இதுவரை இல்லை. இந்த பிரச்சினைக்கு தி.மு.க. இதுவரை கருத்தோ கண்டனமோ தெரிவிக்க வில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். வரும் 2016-ல் பா.மக. ஆட்சி அமையும், அதற்கேற்ப மக்கள் எங்கள் மீது நம்பிக்கை பெற பாடுபடுவோம். பாராளுமன்ற தேர்தலில் தனியாக எதிர்கொள்ள சபதம் ஏற்று பல்வேறு அமைப்புகள், இயக்கங்களுடன் கூட்டணி அமைத்து 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.

ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால்.... : ராமதாஸ்



பாமக நிறுவனர் ராமதாஸ் எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகளை சுரண்டுவதாகக் கூறியுள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பெட்ரோல் விலையை மீண்டும் ஒருமுறை லிட்டருக்கு ரூ.2.07  உயர்த்தி ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. சென்னையில் நேற்றுவரை ரூ.77.48 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்று ரூ.79.55 ஆக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், அமெரிக்க டாலர் மதிப்பும் குறைந்து வருவதால்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.50 வரை குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் விவேக் ரே நேற்று முன்னாள் கூறியிருந்தார். இதனால் பெட்ரோல் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
செப்டம்பர் முதல் தேதியன்று 114.07 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நேற்றைய நிலவரப்படி 110.61 டாலராக குறைந்திருக்கிறது. அதே போல் டாலர் மதிப்பும், இதே காலத்தில், ரூ.66.13-லிருந்து ரூ.63.07 ஆக குறைந்திருக்கிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களோ கச்சா எண்ணெய் விலை 117 டாலராகவும்,  டாலர் மதிப்பு ரூ.66.02 ஆகவும் அதிகரித்துவிட்டதாக கூறி பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளன. பொய்யான தகவல்களைக் கூறி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது பகல் கொள்ளைக்கு ஒப்பானது ஆகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களைச் சுரண்டும் இந்தப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இன்று வரையிலான மூன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை 7 தவணைகளாக  மொத்தம் ரூ.13.65 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது இதுவரை இல்லாத  விலை உயர்வாகும். கடந்த 2008 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலைகள் வரலாறு காணாத அளவை எட்டிய போது கூட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55.07 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெயின் விலை110 டாலர் என்ற குறைந்த  அளவில் இருக்கும்நிலையில், பெட்ரோல் விலையை அப்போதிருந்த தைவிட 50 விழுக்காடு அதிகமாக நிர்ணயித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல. வணிக லாபம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது எண்ணெய் நிறுவனங்களுக்கு அழகல்ல.
எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, பெட்ரோல் டீசல் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு திரும்பபெற வேண்டும்.
ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை உயரும் போதும் அதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக கூறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அந்த பாதிப்பை போக்க எதையும் செய்யவில்லை.
 கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் மட்டும் தமிழக அரசுக்கு லிட்டருக்கு ரூ. 2.85 கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது. ஜெயலலிதா நினைத்தால், கூடுதலாக கிடைக்கும் வரி வருவாய் தேவையில்லை என்று கூறி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை குறைக்க முடியும். ஏழை மக்களின் நலனில் ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் மதிப்பு கூட்டு வரியை குறைத்து அதன் மூலம் பெட்ரோல் விலையை குறைக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Friday, September 13, 2013

நமது சமுதாயத்தை அடக்க நினைக்கிறார்கள் : அன்புமணி ராமதாஸ்



விழுப்புரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடத்தில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும் மாநில இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் பேசியபோது,
’’இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். அடுத்து 2016 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பா.ம.க. ஆட்சியை பிடிக்க வேண்டும். நமது சமுதாயத்தை அடக்க நினைக்கிறார்கள்.
மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து 8 ஆயிரம் பேர் கைது, 123 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதிகாரிகளே உங்கள் கடமையை உணர்ந்து செயல்படுங்கள். இன்னும் 2 வருடங்கள்தான். அதன் பிறகு எங்கள் ஆட்சி நடக்கும். தமிழகத்தில் மின்சாரம் இல்லை.
சட்டம் ஒழுங்கு சரியில்லை. பா.ம.க.வின் முக்கிய 2 கோரிக்கைகள். பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். அதற்கு முன்பு திருமணம் நடக்க வேண்டுமென்றால் பெற்றோரின் அனுமதி பெற வேண்டும். அடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு. ஒரு சொட்டு சாராயமும் இருக்காது. அனைத்து கடைகளையும்
மூடி விடுவோம். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தனியாக தான் போட்டியிட போகிறோம். யாருடனும் கூட்டணி கிடையாது. 2016-ல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி நடக்கும். இதற்கு ஒவ்வொருவரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.’’என்று தெரிவித்தார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: