Thursday, September 19, 2013

தமிழ்நாட்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ஒதுக்கீடு



 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு பாதியாக குறைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாகும்.
இந்தியாவில் கல்வி கற்காத குழந்தைகளே இருக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி கடந்த 2009-10 ஆண்டில் ரூ.862 கோடியாக இருந்த தமிழகத்திற்கான நிதிஒதுக்கீடு படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டில் ரூ.1988.24 கோடியாக அதிகரித்தது.


நடப்பாண்டில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.3000 கோடியாக உயர்த்தித் தரும்படி மத்திய அரசை  தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட மத்திய அரசு, கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட சுமார் ரூ. 500 கோடி குறைவாக ரூ. 1500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது.
14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதென்றால் ஒவ்வொரு ஆண்டும் புதிய பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்; ஏற்கனவே திறக்கப்பட்டப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் பட வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. இவற்றையெல்லாம் செய்து தர அதிக அளவில் நிதி உதவி தேவைப்படும் நிலையில், ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வந்த நிதியில் 25 விழுக்காட்டை குறைத்திருப்பது எந்த வகையிலும்  நியாயமாக இருக்காது.
அனைவருக்கும் கல்வி இயக்க நிதி இந்தளவுக்கு குறைக்கப்பட்டால் புதிய பள்ளிகளை தொடங்க முடியாத நிலை எற்படுவதுடன், இருக்கும் பள்ளிகளையும் மூட வேண்டிய அவலம் உருவாகும்.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற் காக கடந்த ஆண்டை விட 17 விழுக்காடு அதிகமாக ரூ. 27,258 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை போதுமானதல்ல என்று எதிர்க்கட்சிகள் கூறியபோது கல்வித் துறையை பொறுத்தவரை பணம் ஒரு பொருட்டல்ல என்றும், தேவையான நேரத்தில், தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.


ஆனால், அந்த உத்தரவாதத்திற்கு மாறாக  தமிழ்நாட்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏற்கக் கூடியதல்ல.
இந்தியாவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பது உண்மை தான். அதை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது போன்ற சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தலாம். அதைவிடுத்து கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது நாட்டின் வளர்ச்சியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
எனவே, அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தவும், புதிய பள்ளிகளைத் தொடங்கவும் வசதியாக மாநில அரசு கோரியவாறு ரூ. 3000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: