Tuesday, September 17, 2013

விஜயகாந்த் மீது 34 அவதூறு வழக்குகள் போட்டு அவரை முடக்கியுள்ளார் ஜெ.: ராமதாஸ் தாக்கு

சென்னை: தமிழகத்தில் நடப்பது அண்ணா திமுக அரசா அல்லது அடக்குமுறை திமுக அரசா என்ற ஐயம் ஏற்படுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில் அமைச்சர்கள் உறங்கும் படத்தை வெளியிட்ட ஒரு நாளிதழுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு விளம்பரம் நிறுத்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்ததற்காக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இது கடந்த இரு ஆண்டுகளில் அவர் மீது தொடரப்பட்ட 12 ஆவது அவதூறு வழக்காகும்.
ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்துவது தான் எதிர்க்கட்சிகளின் முதன்மைக் கடமையாகும். ஆனால், ஆயிரம் தவறுகளை செய்தாலும் அரசை எவரும் விமர்சிக்கக் கூடாது என்ற பிடிவாதத்துடன் செயல்படும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமது தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதன் ஒரு கட்டமாகத் தான் 90 வயதான கலைஞரை நீதிமன்றங்களின் படிகளில் ஏற வைக்க வேண்டும் என்பதற்காக அவதூறு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
கலைஞர் மட்டுமின்றி, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் விருப்பம்போல அவதூறு வழக்குகளை முதலமைச்சர் தொடர்ந்து வருகிறார். தமிழகம் வறுமையில் வாடும்போது, கொடநாடு மாளிகைக்கு சென்று முதலமைச்சர் ஓய்வெடுப்பது முறையா? என்று கேட்டதற்காக 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் அரியலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக 4 மாதம் கழித்து என் மீது இரண்டாவது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அதே போல் சட்டப்பேரவையில் முதலமைச்சரிடம் சவால் விட்டுப் பேசினார் என்பதற்காக அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர் மீது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது இத்தனை அவதூறு வழக்குகளைத் தொடர்ந்த அநியாயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெற்றதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அவரது கடமையை செய்யக் கூடாது என்பதற்காகவே அவர் மீது ஆட்சியாளர்கள் இத்தனை வழக்குகளைத் தொடர்ந்து முடக்கி வைத்திருக்கிறார்கள்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீதும் 5 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. ஊடகங்களும் ஜெயலலிதாவின் அவதூறு வழக்குகளுக்கு தப்பவில்லை. தமிழ்நாட்டில் இரு நாளிதழ்களைத் தவிர மற்ற அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு பாய்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களை நிறுத்தி அவற்றை முடக்கும் செயலிலும் அரசு ஈடுபட்டிருக்கிறது.
தமிழக அரசும், முதலமைச்சரும் தொடர்ந்துள்ள வழக்குகள் அனைத்துமே அடிப்படை ஆதாரமற்றவை. இவற்றில் எந்த வழக்கிற்குமே முதல்நோக்கு ஆதாரம் கூட கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்குகள் தொடரப்படுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியை ஒடுக்குவதற்காக என்னையும், கட்சியின் முன்னணி தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது, 8000 நிர்வாகிகளை சிறையில் தள்ளி கொடுமைப் படுத்தியது, 123 பேர் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டத்தை ஏவியது என ஏராளமான அடக்குமுறைகளை இந்த அரசு கட்டவிழ்த்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரான ஜெ.குருவை ஆதாரமே இல்லாமல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தமிழக அரசு, அந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் இரத்து செய்த பிறகும் மீண்டும், மீண்டும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சியிருக்கிறது. மூன்று மாதங்களில் அவர் மீது மூன்று முறை தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட முதலமைச்சர், மற்ற கட்சிகளை அடக்க அவற்றின் மீது அவதூறு வழக்குகளை பாய்ச்சி வருகிறார். தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அடக்குமுறைகளில் மட்டும் தான் தான் முதன்மை மாநிலமாக்கியிருக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அவதூறு வழக்குகளை தொடர்ந்து ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார். இந்த ஆட்சி முடிவதற்குள் இன்னும் எவ்வளவு வழக்குகளைத் தொடர்ந்து எத்தனை சாதனைகளை படைக்கப்போகிறாரோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் இப்போது கட்டவிழ்த்து விடப்படுவது போன்ற அடக்குமுறைகள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் நடப்பது அண்ணா திமுக அரசா? அல்லது அடக்குமுறை திமுக அரசா? என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
தமிழக நீதிமன்றங்களில் ஏற்கனவே லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கும் நிலையில், தேவையில்லாத அவதூறு வழக்குகளைத் தொடருவதன் மூலம் நீதிமன்றங்களின் மாண்பை குறைக்க முயல்கிறார். பழிவாங்கும் நோக்கத்துடன் பொய் வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிக்கும் நடவடிக்கைகளை நீதித்துறையும் கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, அவற்றைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்தாமல், எதிர்க்கட்சிகளையும், ஊடகங்களையும் ஒடுக்குவதில் மட்டும் முதலமைச்சர் தீவிரம் காட்டுவது அவரது பழிவாங்கும் உணர்வையே காட்டுகிறது. தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த, தமிழக மக்களின் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி, அவற்றுக்கு தீர்வு காண ஆளுங்கட்சி முயன்றால், அது தான் ஆக்கபூர்வமான அரசியலுக்கு உதாரணமாக இருக்கும். அதைவிடுத்து அவதூறு வழக்குகள் மற்றும் அடக்குமுறைகளின் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிவிடலாம் என்று முதலமைச்சர் கருதினால் அவர் பகல் கனவு காண்கிறார் என்று தான் அர்த்தம். இத்தகைய அடக்குமுறைகளின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியையோ அல்லது மற்ற எதிர்க்கட்சிகளையோ ஒடுக்க முடியாது. அதே நேரத்தில் தொடர்ந்து ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் தமிழக அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும், ஊடகங்களும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: