Sunday, March 31, 2013

3-வது அணி அமைப்போம்: ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், ஆரணி பாராளுமன்ற தொகுதி தேர்தல் குறித்த பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 10 இடங்களை பிடிப்போம். 17 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். அப்பா அம்மா பார்த்து நடத்தும் திருமணத்தை ஏற்கவேண்டும்.

காதலுக்கும், கலப்பு திருமணத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல. பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம், தி.மு.க., அ.தி.மு.க. கொள்கை இல்லாத கட்சிகள். பா.ம.க. தான் கொள்கை உள்ள கட்சி. மேற்கண்டவாறு அவர் கூறினார்.

பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி:



வடசென்னை மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நிழல் நிதி அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

மதுவுக்கு எதிராக தொடர்ந்து பா.ம.க. குரல் கொடுத்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நமது தொழிலாளர் தோழர்கள், லாரி ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதற்காக நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பா.ம.க சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் 31-ந் தேதிக்குள் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி.

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, நாகப்பட்டினம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் சமூக அக்கறையில் நலன் உள்ள பெரியவர்களை அழைத்து கொண்டு திமுக தலைவர் கலைஞரிடம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்.

ஆனால் அவர் வேலை நேரம் இரவு 11 மணி வரை இருந்ததை 10 மணியாக மட்டுமே குறைத்தார். கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.

பா.ம.க. விரைவில் ஆட்சிக்கு வரும். அப்படி வந்தால் எங்களின் முதல் கையெழுத்து மதுவிலக்கு கையெழுத்துதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டுக் கூட மது இருக்காது என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

வன்னியர் பெருவிழா: சென்னை வருகிறார் அகிலேஷ்யாதவ்

 


காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பா.ம.க. வின் வன்னியர் சங்கம் சார்பில் வருகிற ஏப்ரல் 25-ந்தேதி சித்ரா பவுர்ணமி அன்று வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடை பெற உள்ளது. இம்மாநாடு நடைபெற உள்ள மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. இளைஞர் சங்க செயலாளருமான அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று விழா ஏற்பாடுகள் குறித்து பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அன்புமணி செய்தியாளர்களிடம், ’’மாமல்லபுரத்தில் நடை பெற உள்ள சித்ரா பவுர்ணமி வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும். இம்மாநாட்டில் உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ்யாதவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இருந்து ஒரு கோடி வன்னியர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்கின்றனர். தமிழகத்தை வன்னியர் ஆள வேண்டும் என்ற முழக்கத்துடன் இம்மாநாடு நடைபெற உள்ளது’’ என்று கூறினார்.

சென்னை பேரூந்து நிலையம் கட்ட விளைநிலங்களை பறிக்கக் கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதையும், கோயம்பேடு பேரூந்து நிலையம் நிரம்பி வழிவதையும் கருத்தில் கொண்டு சென்னையை அடுத்த வண்டலூரில் மிகப் பெரிய  புறநகர் பேரூந்து நிலையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்காக வண்டலூரில் சுமார் 65 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை கோயம்பேடு புறநகர் பேரூந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புறநகர் பகுதியில் புதிய பேரூந்து நிலையம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பது சரியானது தான்.

ஆனால், புதிய பேரூந்து நிலையம் அமைப்பதற்காக பாசன வசதி கொண்ட வளமான விளைநிலங்களை கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்திருப்பது தான் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

புதிய பேரூந்து நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலம் தான் அப்பகுதியிலுள்ள 1200க்கும் அதிகமான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது. இந்தக் குடும்பங்கள் அனைத்துக்கும் விவசாயத்தைத் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது.

இந்த நிலையில் இவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், அவர்களுக்கு உணவளித்து வந்த விளைநிலங்களை கையகப் படுத்த முயல்வது கண்டிக்கத் தக்கது.

புதிய புறநகர் பேரூந்து நிலையம் அமைக்கப்படவுள்ள வண்டலூருக்கு மிக அருகிலேயே கொளப்பாக்கத்தில் அரசுக்கு சொந்தமாக 100 ஏக்கருக்கும் அதிகமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் அனைத்து வசதிகளுடன் பேரூந்து நிலையத்தை அமைக்க முடியும். அதை விடுத்து வேளான் விளைநிலங்களை கைப்பற்ற அரசு முயல்வது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழகம் முழுவதும் குறிப்பாக, வட மாவட்டங்களில்  விளை நிலங்களை வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நெல் உற்பத்தி குறைந்துவரும் நிலையில், இருக்கும் விளைநிலங்களையும் அரசே பறிக்க முயல்வது நியாயமற்றது.

எனவே, மாநிலத்தின் உணவு பாதுகாப்பு, 1200 குடும்பங்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வண்டலூரில் வேளான் விளைநிலங்களை கையகப்படுத்தி புதிய பேரூந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; மாறாக கொளப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில்  உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் புதிய பேரூந்து நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய வேண்டும்.

இல்லாவிட்டால் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அப்பகுதி மக்களைத் திரட்டி பா.ம.க. மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.

Thursday, March 28, 2013

மதுவிலக்கெல்லாம் அதிமுகவால் முடியாது, அதுக்கெல்லாம அவங்க சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கலையரசு, சமூகத்தின் மீதான அக்கறையுடன், தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைபாக்கிற்கு விலை சொல்வதைப் போல, கேட்கப்பட்ட கேள்வியை விட்டுவிட்டு, மாமல்லபுரத்தில் வன்னிய இளைஞர் பெருவிழா நடந்த போது அந்த பகுதியில் கூடுதலாக ரூ.50 லட்சத்திற்கு மது விற்பனை ஆனதாக எந்த அடிப்படையும் இல்லாத, ஓர் அவதூறை அவையில் கூறியிருக்கிறார்.
அதன்பின் மற்றொரு பா.ம.க. உறுப்பினர் கணேஷ் குமார் இப்பிரச்சினையை நேற்று சட்டப்பேரவையில் மீண்டும் எழுப்பியபோதும், இம்முறையாவது மாமல்லபுரம் இளைஞர் பெருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் மது அருந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சாத்தான் வேதம் ஓதுவதைப் போல அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருக்கிறார்.
இதன்மூலம், உழைக்கும் பாட்டாளி சமுதாயத்தை குடிகார சமுதாயம் என்று அவர் அவமரியாதை செய்திருக்கிறார். அமைச்சரின் இந்த வாய்நீளப் பேச்சு கடுமையாக கண்டிக்கத் தக்கது. ‘‘பதவி வரும் போது பணிவும் வரவேண்டும்... துணிவும் வர வேண்டும்'' என்பது எம்.ஜி.ஆர். நடித்த ஒரு பாடலின் வரியாகும். ஆனால், எம்.ஜி.ஆரின் வழிவந்ததாகக் கூறிக் கொள்ளும் அ.தி.மு.கவினர் அவையில் காட்ட வேண்டிய பணிவும், மது ஒழிப்பில் காட்ட வேண்டிய துணிவும் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். இந்த இரண்டும் இல்லாதவர்களிடம் அவை நாகரீகத்தையோ அல்லது மக்களுக்கு நன்மை அளிக்கும் முடிவுகளையோ எதிர்பார்க்க முடியாது.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் , ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். எத்தனையோ குடும்பங்கள் சீரழிகின்றன. இதைத் தடுக்க மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 24 ஆண்டுகளாக போராடி வருகிறது. இதனால் இன்று மதுவுக்கு எதிராக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை உணர்ந்து மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டிய தமிழக அரசு, இலக்கு நிர்ணயித்து மதுவை விற்பனை செய்துகொண்டிருக்கிறது.
அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லை. மேலும் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்ற பொய்யான சாக்கிற்குள் ஒளிந்து கொண்டு, மக்களை மது என்ற சாத்தானுக்கு தமிழக அரசு இரையாக்கி வருகிறது. மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத, வானத்தை வில்லாக வளைக்கும் செயல் அல்ல. தமிழக அரசு நினைத்தால், காவல்துறை உதவியுடன் ஒரு சொட்டு கள்ளச் சாராயம் கூட இல்லாமல் மதுவிலக்கை நடைமுறைப் படுத்த முடியும்.
1991-ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டியது அந்தந்த பகுதி காவல்நிலைய அதிகாரிமற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் பொறுப்பு; ஏதேனும் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதேபோன்ற ஆணையை இப்போதும் பிறப்பிப்பதன் மூலம் தமிழகத்தை மதுவோ அல்லது கள்ளச் சாராயமோ இல்லாத மாநிலமாக மாற்றலாம்.
ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு சிறிதும் இல்லை. மது, இலவசம், திரைப்படம் ஆகிய மூன்று தீமைகளுக்கு மக்களை அடிமைகளாக்கி, அவர்களை சிந்திக்கும் திறனற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் திராவிடக் கட்சிகளின் நோக்கமாகும். அதனால் தான் பொங்கல் திருநாளின் போது, பொங்கல் பரிசு என்ற பெயரில் வீட்டுக்கு வீடு ரூ.100 பணத்தைக் கொடுத்து, மக்களை குடிக்க வைக்கும் அவலத்தை தமிழக அரசு அரங்கேற்றியது.
இப்படிப்பட்ட அரசிடம் மதுவிலக்கை எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி 2016-ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பின் பிறப்பிக்கும் முதல் உத்தரவு மதுக்கடைகளை மூடும் உத்தரவாகத் தான் இருக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்', என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, March 23, 2013

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்! ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை இனப்படுகொலைகளுக்காக இராஜபக்சேவை தண்டிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், உப்புசப்பில்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க போராடுவதாகக் கூறி களமிறங்கிய அமெரிக்கா, இந்தியாவுடன் கை கோர்த்து, தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது.
ஈழத்தமிழர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்; இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறி வந்த மத்திய அரசு, இந்த இரண்டையுமே செய்யாமல் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது. இதை தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கு சாதகமாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்ற போதிலும், அதற்காக தமிழர்களும், தமிழக மாணவர்களும் நடத்திய தன்னெழுச்சியான போராட்டம் வீணாகி விடாது.
இராஜபக்சே தண்டிக்கப்படும் வரை தமிழகத்தின் உணர்ச்சிகரமான போராட்டம் தொடரும். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவியுடன் தப்பித்துக்கொண்ட இலங்கை, அடுத்ததாக உலக நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்ள காமன்வெல்த் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
வரும் நவம்பர் 15 முதல் 17 வரை கொழும்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்வது தான் இராஜபக்சேவின் நோக்கமாகும்.
ஆனால், ஓர் இனத்தையே அழித்துவிட்டு உத்தமர் வேடம் போட முயலும் இராஜபக்சேவின் முயற்சிக்கு துணை போகக் கூடாது என்ற எண்ணத்தில், இலங்கையில் தமிழர்கள் விரும்பும் மாற்றம் ஏற்படாத நிலையில், கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் கனடா பங்கேற்காது என அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார். அதேபோல் காமன்வெல்த் அமைப்பின் தலைவரான எலிசபெத் அரசியாரும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் இம்மாநாட்டை புறக்கணிப்பது குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
ஆனால், ஈழத்தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டிய இந்தியாவோ, இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக இலங்கைக்கு உதவி வருகிறது.
பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி காமன்வெல்த் அமைப்பிலிருந்து அந்நாடு பலமுறை நீக்கப்படுவதற்கு காரணமாக இருந்த இந்தியா, தற்போது கொலைகார நாடான இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்துவதை விடுத்து அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களை ஏமாற்றிய மத்திய அரசு, இனியாவது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்.
இந்த விசயத்தில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் கடமை தமிழகத்திற்கு உள்ளது. இதுவரை இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வந்த தமிழக மக்களும், மாணவர்களும், இனி இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் & காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட வேண்டும்.
மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சி மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வகையில், நாட்டையே உலுக்கும் அளவுக்கு இப்போராட்டம் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Friday, March 22, 2013

ஈகியர் விக்ரத்திற்கு வீர வணக்கம்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு அறிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத்தமிழர்களுக்கு தனித் தமிழீழம் அமைத்துத் தர வேண்டும் & இனப்படுகொலைகாரன் இராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நெற்குன்றத்தில் நேற்று இரவு தீக்குளித்த விக்ரம் என்ற இளைஞர் மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார் என்றசெய்தி கேட்டு பேரதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன்.
அவருக்கு எனது வீர வணக்கங்களை செலுத்துகிறேன்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்கள வெறியன் இராஜபக்சேவின் படைகள் படுகொலை செய்த கொடூரம் ஒருபுறம்... அவர்களுக்கு நீதி பெற்றுத்தருவதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நடந்த போராட்டத்தில் மத்திய அரசு செய்த துரோகம் மறுபுறம் என தமிழர்கள் கொந்தளித்துக்கிடக்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டம் முடிவடைந்து விட்டாலும், தமிழர்களுக்கு தனி ஈழம் & இராஜபக்சேவுக்கு போர்க்குற்ற தண்டனை என்ற இலக்கை நோக்கி தமிழக மக்களும், மாணவர்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு துணை நிற்பதை விடுத்து தீக்குளிப்பு போன்ற செயல்களில் வீரத்தமிழர்கள் ஈடுபடுவது நமது நோக்கத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.
ஈழத்தமிழர்களைக் காப்பதற்கான முயற்சியில் முத்துக்குமாரில் தொடங்கி முருகதாஸ், செங்கொடி, அண்மையில் கடலூர் மணி என இதுவரை 21 பேரை நாம் இழந்திருக்கிறோம். போராட்டக் களத்தில் நெருப்பாய் தகிக்கும் தமிழ் இளஞர்களை இனியும் இழக்க தமிழ் சமுதாயம் தயாராக இல்லை. தமிழீழத்தை வென்றெடுப்பதற்காக இன்னும் பல போராட்டங்களை நாம் நடத்த வேண்டிய நிலையில், தீக்குளித்து உயிர் தியாகம் செய்வது போன்ற செயல்களில் எவரும் ஈடுபடவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: