பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவி ஏற்றிருப்பதையடுத்து, நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அடிப்படை கிராமப்புற வளர்ச்சியும், வேளாண்துறை வளர்ச்சியும் தான் என்ற மகாத்மா காந்தியின் போதனையை இந்த அரசு நன்றாக உணர்ந்திருக்கிறது என்பதை குடியரசுத் தலைவர் உரையிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
வேளாண் தொழிலை லாபகரமான ஒன்றாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்; வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் மற்றும் விலை தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விவசாயிகளுக்கு சாதகமான வகையில் தீர்வு காணப்படும்; எளிதில் அழுகக் கூடிய விளைபொருட்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல தனி தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அதேபோல், கிராமப்புற வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும், ஊரக& நகர்ப்புற இடைவெளியை குறைக்க ‘ஊரகநகரங்கள்’ உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத் தக்கவை. இதன்மூலம் கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயருவதை தடுக்க முடியும். ஊரகநகரங்கள் திட்டப்படி கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும்போது, கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
’ஒத்துழைப்பான கூட்டாட்சி’ மூலம் மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்தல், தேசிய வளர்ச்சிக்குழு உள்ளிட்ட அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை உன்னதமான அறிவிப்புகள். பொதுவினியோகத் திட்டத்தை வலுப்படுத்த மாநில அரசுகள் கடைபிடித்துவரும் சிறந்த நடைமுறைகளை மத்திய அரசு பின்பற்றும் என்று அறிவித்திருப்பதன் மூலம் மாநில அரசுகளின் எஜமானனாக இல்லாமல் நண்பனாக இருப்போம் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.
அதேபோல், வறுமை ஒழிப்பு, பட்டினியை ஒழிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், விலைவாசி குறைப்பு ஆகியவை ஏழை மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் அறிவிப்புகள் ஆகும்.
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, கறுப்புப் பணத்தை மீட்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி, உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள், கல்வி வளர்ச்சிக்கான உத்திகள், சரக்குப்போக்குவரத்துக்காக தனிப்பாதைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் மூலம் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டதைப் போல தொடர்வண்டிப் பாதைகளை மேம்படுத்துவதற்காக வைர நாற்கரத் தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஆகியவை செயல்வடிவம் பெறும்போது இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்பதில் ஐயமில்லை.
அனைத்து மாநிலங்களிலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு உயர்கல்வித் துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். அதேநேரத்தில் அனைத்து மாநில மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், இத்தகைய கல்வி நிறுவனங்களை அமைப்பதில் மாநில அரசுகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இவற்றில் சரிபாதி இடங்களை மாநில ஒதுக்கீடாக அறிவிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய இருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவையாகும்.அதேநேரத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மகளிரும் பயனடைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மொத்தத்தில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நம்பிக்கைத் தரும் நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது.
No comments:
Post a Comment