பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், பயிர்களை சாகுபடி செய்ய முடியாததாலும், ஒருவேளை நெல் உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டாலும் அவை கருகிவிடுவதால் அதற்காக செய்த செலவை திரும்ப எடுக்க முடியாததாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிராக்டர்களையும், பிற உழவுக் கருவிகளையும் தொழில்முறையில் உழவுப் பணிகளுக்கு வாடகைக்கு விடுபவர்களும் போதிய வருமானம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அவர்களால் வேளாண் கடனை தவணை தவறாமல் செலுத்த இயல வில்லை.
ஆனால், விவசாயிகளின் நிலைமையை புரிந்து கொள்ளாத பொதுத்துறை வங்கிகள் கடனைத் திரும்ப வசூலிப்பதற்காக அடாவடியான அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. பல மாவட்டங்களில், இதற்காகவே உள்ள குண்டர்களை அமர்த்தி, அவர்கள் மூலமாக கடன்களை வசூலிக்கும் முயற்சியில் வங்கிகள் ஈடுபட்டிருக்கின்றன.
வங்கிகளால் அமர்த்தப்பட்ட குண்டர்கள் கடன் பெற்ற விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்களை மிரட்டுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைப் பறித்துச் செல்லுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் அவமானத்திற்கும், கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
இன்னொருபுறம் கடனை முறையாக செலுத்தாத விவசாயிகளிடமிருந்து, அவர்கள் ஈடாக வைத்த வேளாண் விளைநிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களை ஜப்தி செய்வது, கடனாக பெற்ற டிராக்டரை பறிமுதல் செய்வது போன்ற கொடுமைகளும் நடக்கின்றன. கடன்களை வசூல் செய்யும் பணியில் குண்டர்களையோ அல்லது தனியார் முகவர்களையோ ஈடுபடுத்தக்கூடாது என்று கடந்த 2007 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதை மதிக்காமல் குண்டர்களை அனுப்பி விவசாயிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் மிரட்டுவதன் மூலம் அவர்களை அவமானப்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு வங்கிகள் தள்ளுகின்றன. சட்டத்தை மதிக்க வேண்டிய பொதுத்துறை வங்கிகளே சட்ட விரோத வழிமுறைகளை கையாளுவது கடுமையாக கண்டிக்க த்தக்கது.
எனவே, தவிர்க்க இயலாத காரணங்களால் வேளாண் கடன்களை திரும்பச் செலுத்த முடியாத விவசாயி களுக்கு எதிரான நடவடிக்கைகளையும், குண்டர்களை வைத்து மிரட்டுவதையும் வங்கிகள் நிறுத்த வேண்டும். வறட்சியால் விவசாயிகள் வாழவழியின்றி தவிப்பதால் இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, சுமூகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்; உழவர்கள் பெற்ற வேளாண் கடனை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்யவும் முன்வர வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment