பாமக தலைமைச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்:
தேர்தலில் வெற்றி, தோல்விகள் சகஜமானவை. நாம் வெற்றி பெற்றபோது ஆர்ப்பரித்ததில்லை. அதேபோல தோல்வி அடைந்தபோதும் துவண்டதில்லை. ஆனால், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழக அரசு அம்மா உணவகம் மூலம் இட்லி, தோசை போடுவது, தண்ணீர் விற்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது வளர்ச்சிக்கான பாதை இல்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எங்களிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதனை நாங்கள் ஒரு புத்தகமாகவே போட்டு வைத்துள்ளோம்.
அதிமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டால் விவசாயிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு இல்லாமல் 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது நம்ப முடியாதது.
வெறும் பணத்துக்காக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை செல்வதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.
2016-ஆம் ஆண்டு தேர்தலில் பாமக வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். இத்தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளில் பாதி இடங்களில் டெபாசிட் இழக்க வேண்டும். ஏற்கெனவே இதை பெண்ணாகரத்தில் தருமபுரி மக்கள் செய்து காட்டினர். வரும் தேர்தலில் பாமக மற்ற தொகுதிகளிலும் இதை செய்து காட்ட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment