பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் மின்வெட்டு அடியோடு இரத்து செய்யப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், ஜூன் 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. இதை சுட்டிக்காட்டி கடந்த 7 ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட நான், மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருந்தேன்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், அல்லும் பகலும் பாடுபடும் ஜெயலலிதாவின் பகீரத முயற்சியால் இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கூறியிருந்தார்.
கேட்டதுமே சிரிப்பு வரும் வகையில் அமைச்சரின் பதில் அமைந்திருந்ததால், தமிழகத்தில் மின் திட்டங்களை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு அக்கறையின்றி செயல்படுவதை சுட்டிக்காட்டியதுடன், தமிழக மின்திட்டங்கள் தொடர்பாக 10 வினாக்களை எழுப்பியிருந்தேன். அவற்றுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனிடம்,‘‘ ஏன் தாமதம்?’’ என்று ஆசிரியர் கேட்டாராம். அதற்கு பதிலளித்த மாணவன், தமது தாமதத்தை மறைப்பதாக நினைத்துக் கொண்டு,‘‘ பேரூந்து தான் தாமதமாக வந்தது’’ என்றானாம். எனது வினாக்களுக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்துள்ள பதில்களும், மாணவன் அளித்த பதிலைப் போன்று தான் உள்ளன.
மின்திட்டங்களைத் தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதமானதாகவும், ஆய்வுப் பணிகள் நடந்துக் கொண்டிருப்பதாகவும் கூறி விரைவில் மின்திட்டப் பணிகள் முடிக்கப்படும் என்று பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே மாதிரியாக பதிலளித்துள்ளார். சில திட்டங்களுக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப் பட்டிருப்பதாக வேறு சில வினாக்களுக்கு விடையளித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசு அறிவித்த மின்திட்டங்கள் எதற்குமே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை; அனைத்து திட்டங்களுமே அனுமதி பெறும் நிலையிலும், ஆய்வு நிலையிலும் தான் உள்ளன என்பதை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த ‘நேர்மை’க்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
மின்திட்டங்கள் தாமதமாவதை நியாயப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில், மின்திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோரப்படுவது அரசு கட்டடங்களுக்கு ஒப்பந்தம் கோரப்படுவதைப் போன்றதல்ல; அதற்கு முன் ஏராளமான அனுமதிகள் பெறப்பட வேண்டியுள்ளன; இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் மருத்துவர் இராமதாசு குறைகூறுகிறார் என்று எனக்கு பாடம் கற்றுத் தர அமைச்சர் முயன்றுள்ளார்.
ஒரு மின்திட்டத்திற்கு என்னென்ன அனுமதிகளை பெற வேண்டும்? அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்ற விவரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். அனைத்து அனுமதிகளையும் பெற்று ஒரு மின்திட்டத்தை செயல்படுத்த அதிகபட்சமாக மூன்றரை ஆண்டுகள் தான் ஆகும். இவற்றில் உரிய அனுமதிகளைப் பெறுவதற்கு 6 மாதங்கள் ஆகும் என வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள 3 ஆண்டுகளில் கட்டுமானப்பணிகளை முடிக்க வேண்டும் என்பது தான் பொதுவான நடைமுறையாகும். இதை மத்திய திட்ட ஆணையமும், மின்னுற்பத்தித் துறை வல்லுனர்களும் உறுதி செய்துள்ளனர்.
அதன்படி பார்த்தால் 31.01.2011 அன்று அனுமதி அளிக்கப்பட்ட 1320 மெகாவாட் எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின்திட்டம், 24.10.2011 அன்று அனுமதி அளிக்கப்பட்ட உப்பூர் அனல்மின் திட்டம், 29.03.2012 அன்று அறிவிக்கப்பட்ட தலா 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் மற்றும் மாற்று அனல்மின் திட்டம் ஆகிய மின் திட்டங்கள் அதிகபட்சமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும். ஆனால், இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 2 முதல் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இவற்றுக்கான கட்டுமானப் பணிகளே இன்னும் தொடங்கப்படவில்லை. ஏன் இந்த தாமதம் என்று கேட்டால் பலவிதமான அனுமதிகளைப் பெற வேண்டும் என்ற நடைமுறை கூட எனக்கு தெரியவில்லை என்கிறார் அமைச்சர் விஸ்வநாதன்.
கடந்த 29.03.2012 அன்று சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதாவும் நான் கூறியதைப் போலவே 2015 ஆண்டு இறுதிக்குள் இந்த மின்திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறினார். அப்படியானால், திட்டங்களுக்கான அனுமதிகளைப் பெற வேண்டிய தேவை குறித்து ஜெயலலிதாவுக்கு தெரியாது என்று அமைச்சர் கூறுகிறாரா?
தூத்துக்குடியில் என்.எல்.சி. நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து செயல்படுத்தும் மின்னுற்பத்தித் திட்டப்பணிகள் 2013 ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், அதன்பின் ஓராண்டாகியும் மின்னுற்பத்தி தொடங்கப்படாதது ஏன்? என்று கேட்டால், மின்னல் வேகத்தில் பணிகள் நடப்பதாகவும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் அங்கு மின்னுற்பத்தி தொடங்கும் என்றும் அமைச்சர் பதிலளித்திருக்கிறார். நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட 14 மாதங்கள் தாமதமாக பணிகளை முடிப்பது தான் மின்னல் வேகத்தில் பணிகளை மேற்கொண்டதன் அடையாளமா?
மின் திட்டங்கள் தாமதமாவதற்கு காரணம் என தனது அறிக்கையில் அமைச்சர் சுட்டிக்காட்டுவது மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளை பெற வேண்டியிருப்பதைத் தான். எந்த ஒரு மின்திட்டமாக இருந்தாலும் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அனைத்து ஆவணங்களுடன் மாநில அரசு விண்ணப்பித்தால், அடுத்த 90 நாட்களில் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தப்பட்டு, அதிலிருந்து 30 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
மின் திட்டங்கள் தாமதமாவதற்கு காரணம் என தனது அறிக்கையில் அமைச்சர் சுட்டிக்காட்டுவது மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளை பெற வேண்டியிருப்பதைத் தான். எந்த ஒரு மின்திட்டமாக இருந்தாலும் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அனைத்து ஆவணங்களுடன் மாநில அரசு விண்ணப்பித்தால், அடுத்த 90 நாட்களில் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தப்பட்டு, அதிலிருந்து 30 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், தமிழக அரசின் மின் திட்டங்களுக்கு இந்த அனுமதி கிடைக்க இதைவிட அதிக காலம் ஆகியிருக்கிறது. இந்த கால தாமதத்தை தவிர்க்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மொத்தம் 139 கடிதங்களை ஜெயலலிதா எழுதினார். இவற்றில் 9 கடிதங்கள் தமிழகத்தின் மின்தட்டுப்பாடு தொடர்பானவையாகும். ஆனால், இவற்றில் ஒரு கடிதத்தில் கூட தமிழக மின்திட்டங்களுக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டும் என்று கோரவில்லை. மின்திட்டங்களை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு காட்டிய அக்கறை இந்த அளவு தான்.
அ.தி.மு.க.வின் 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் மின்னுற்பத்தித் திறனை 10 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு பெருக்கத் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு என்ன ஆனது? என்று நான் வினா எழுப்பியிருந்தேன். அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், கூடங்குளம் அணுமின்நிலையம், நெய்வேலி இரண்டாம் நிலை விரிவாக்கத் திட்டம், தூத்துக்குடி கூட்டு மின் திட்டம், வல்லூர் மின்திட்டம் என முழுக்க, முழுக்க மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட கூட்டு மின்திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டும், வெளி மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கப்படும் 3330 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டும் 12,730 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு மத்திய அரசிடமிருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கும் மின்சாரத்தையெல்லாம் தங்களின் தயாரிப்பு என்று பெருமை பேசும் மின்துறை அமைச்சரை பெற்றதற்கு தமிழக மக்கள் என்ன தவம் செய்தார்களோ தெரியவில்லை. எதையுமே செய்யாமல் ‘நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ என ரூ.200 கோடி செலவில் தம்பட்டம் அடித்துக் கொண்ட அரசிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
தமிழக அரசு அறிவித்த சூரிய ஒளி மின் கொள்கையின்படி தமிழகத்தில் 2014ஆம் ஆண்டில் 2000 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், ஒரு மெகாவாட் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்பது எனது குற்றச்சாற்று. இதற்கு நேரடியாக பதிலளிக்காத அமைச்சர் விஸ்வநாதன், மற்ற மின்திட்டங்களின் கீழ் 102 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்து தப்பிக்கப் பார்த்திருக்கிறார். சூரிய ஒளி மின் கொள்கையின்படி எத்தனை மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப் பட்டிருக்கிறது என்ற வினாவுக்கு அமைச்சரால் பதிலளிக்க முடியுமா? மற்ற மின்திட்டங்களின் மூலமாக 102 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் கூறுவதிலும் உண்மையில்லை.
சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த 2013 &14 ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறைக்கான மானியக் கோரிக்கையில் தமிழகத்தில் வெறும் 17 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் சூரிய ஒளி மின்திட்டங்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் 28.8 மெகாவாட் அளவுக்கு மட்டுமே சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 102 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படுவதாகக் கூறும் அமைச்சர், அது எங்கெங்கு தயாரிக்கப்படுகிறது என்பதையும், எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குவாரா?
தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாறவிருக்கிறது என்று முதலமைச்சர் கூறுவது உண்மையென்றால், வெளிமாநிலங்களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு 3330 மெகாவாட் மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் செய்திருப்பது ஏன்? என்ற கேள்விக்கு விடையளித்துள்ள அமைச்சர், ‘‘இந்த அளவுக்கு மின்சாரம் தயாரிக்க அதிக செலவும், காலமும் ஆகும் என்பதால் தான் வெளியிலிருந்து வாஙகப்படுகிறது’’ என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து உண்மையென்றால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மின்னுற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடையாது; மின்மிகை மாநிலமாக மாறாது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள அமைச்சர் தயாரா?
2007ஆம் ஆண்டு முதல் நிலவி வந்த மின்வெட்டை 3 ஆண்டுகளில் சீர்செய்து, மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஜெயலலிதா மாற்றியிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தான் நான் அரசை விமர்சிப்பதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தற்போது மின்வெட்டே இல்லை என்பதன் மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்துள்ளார். தலைமைச்செயலகத்திலும், அமைச்சர்களுக்கான மாளிகையிலும் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு ஜெயா தொலைக்காட்சியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், தமிழகம் ஒளிர்வது போன்றும், அதை பொதுமக்களும்,விவசாயிகளும், தொழில் முனைவோரும் பாராட்டுவது போன்றும் தான் தோன்றும். அமைச்சராக இருக்கும் விஸ்வநாதன் போன்றவர்கள் தங்களைச் சுற்றி அமைத்துக் கொண்டிருக்கும் வளையத்தைத் தாண்டி வெளியில் வந்தால் தான் ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு மின்வெட்டால் மக்கள் எந்த அளவுக்கு அவதிப்படுகிறார்கள் என்பதும், மின்வெட்டை அவ்வளவாக அனுபவிக்காத சென்னையில் இரவு நேரத்திலும் மின்வெட்டு நீடிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் மின்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதும் தெரியும்.
ஏற்கனவே கூறியதைப்போல இந்தப் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மாறாக, தமிழகத்தின் மின்வெட்டை நீக்க முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன். இந்த விஷயத்தில் எது சரி என்பதை இனி தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்கள் தான். இதன்பிறகும் மின்வெட்டை போக்கி தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக்கி விட்டதாக ஜெயலலிதா கருதுவாரேயானால், அதையே மக்கள் மன்றத்தில் முன் வைத்து பொது வாக்கெடுப்பு நடத்தவும், அதில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்ளவும் தயாரா? என்று சவால் விடுக்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment