தொடர்வண்டித்துறை அமைச்சர் சதானந்த கவுடாவை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி இராமதாசு இன்று (27.06.2014) மாலை சந்தித்துப் பேசினார்.
அப்போது மனு ஒன்றையும் அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் தமிழகத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக பாமக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் கொடுத்த மனுவில்:
1) மதுரை - கன்னியாக்குமரி இடையே இரட்டைப் பாதையை அமைக்க வேண்டும். இதன்மூலம் இந்த தடத்தில் 25க்கும் கூடுதலான தொடர்வண்டிகளை இயக்கலாம் என்பதால் நெரிசலை தவிர்க்கலாம்.
2) சென்னை -புதுச்சேரி இடையிலான புதிய பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனால் இத்திட்டத்திற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படவில்லை. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
3) எழும்பூர்- தாம்பரம் இடையே இப்போது 4 புறநகர் மின்தொடர்வண்டிப்பாதைகள் உள்ளன. இப்பாதைகளை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும். இதன்மூலம் சென்னைக்கு தினமும் பயணம் செய்யும் 3 லட்சம் பேர் பயனடைவார்கள்.
4) திண்டிவனம் - நகரி இடையே வந்தவாசி, செய்யார், ஆற்காடு வழியாக புதிய பாதை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பகுதி பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் நிதி ஒதுக்கப்படாததால் முடங்கிக் கிடக்கின்றன. உடனடியாக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
5) திண்டிவனம் - திருவண்ணாமலை இடையே செஞ்சி வழியாக புதிய பாதை அமைக்க ஒப்புதல் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் இன்னும் தொடங்கப் படவில்லை. உடனடியாக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.
6) ஜோலார் பேட்டை - ஓசூர் இடையே கிருஷ்ணகிரி வழியாக புதிய தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது கிருஷ்ணகிரி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகரம் என்ற போதிலும் இதுவரை தொடர்வண்டிப் பாதையால் இணைக்கப்படவில்லை. எனவே இந்த புதிய பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7) தேசியத் தலைநகர் தில்லியிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. தில்லி மற்றும் வேறு நகரங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் தொடர்வண்டிகள் தான் அதிக தூரம் பயணிக்கும் தொடர்வண்டிகள் ஆகும். இவற்றில் பயன்படுத்தப்படும் பெட்டிகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை ஆகும். அவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்தப் பெட்டிகள் அனைத்தையும் உடனடியாக மாற்ற வேண்டும். இதற்காக சுமார் 200 புதிய பெட்டிகள் தேவைப்படும்.
8) மராட்டிய மாநிலம் ஷிர்டி இந்துக்களின் புனித பூமியாகும். இந்த நகருக்கு சென்னையிலிருந்து நேரடியாக தொடர்வண்டிகளை இயக்க வேண்டும்.
9) சென்னை சென்ட்ரல்- எழும்பூர் இணைப்பு மிகவும் முக்கியமாகும். இதற்கான திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment