Saturday, June 28, 2014

குண்டர்களை வைத்து விவசாயிகளை மிரட்டக்கூடாது : வங்கிகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்



பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், பயிர்களை சாகுபடி செய்ய முடியாததாலும், ஒருவேளை நெல் உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டாலும் அவை கருகிவிடுவதால் அதற்காக செய்த செலவை திரும்ப எடுக்க முடியாததாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிராக்டர்களையும், பிற உழவுக் கருவிகளையும் தொழில்முறையில் உழவுப் பணிகளுக்கு வாடகைக்கு விடுபவர்களும் போதிய வருமானம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அவர்களால் வேளாண் கடனை தவணை தவறாமல் செலுத்த இயல வில்லை.
ஆனால், விவசாயிகளின் நிலைமையை புரிந்து கொள்ளாத பொதுத்துறை வங்கிகள் கடனைத் திரும்ப வசூலிப்பதற்காக அடாவடியான அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. பல மாவட்டங்களில், இதற்காகவே உள்ள குண்டர்களை அமர்த்தி, அவர்கள் மூலமாக கடன்களை வசூலிக்கும் முயற்சியில் வங்கிகள் ஈடுபட்டிருக்கின்றன.
வங்கிகளால் அமர்த்தப்பட்ட குண்டர்கள் கடன் பெற்ற விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்களை மிரட்டுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைப் பறித்துச் செல்லுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் அவமானத்திற்கும், கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
இன்னொருபுறம் கடனை முறையாக செலுத்தாத விவசாயிகளிடமிருந்து, அவர்கள் ஈடாக வைத்த வேளாண் விளைநிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களை ஜப்தி செய்வது, கடனாக பெற்ற டிராக்டரை பறிமுதல் செய்வது போன்ற கொடுமைகளும் நடக்கின்றன. கடன்களை வசூல் செய்யும் பணியில் குண்டர்களையோ அல்லது தனியார் முகவர்களையோ ஈடுபடுத்தக்கூடாது என்று கடந்த 2007 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதை மதிக்காமல் குண்டர்களை அனுப்பி விவசாயிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் மிரட்டுவதன் மூலம் அவர்களை அவமானப்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு வங்கிகள் தள்ளுகின்றன. சட்டத்தை மதிக்க வேண்டிய பொதுத்துறை வங்கிகளே சட்ட விரோத வழிமுறைகளை கையாளுவது கடுமையாக கண்டிக்க த்தக்கது.
எனவே, தவிர்க்க இயலாத காரணங்களால் வேளாண் கடன்களை திரும்பச் செலுத்த முடியாத விவசாயி களுக்கு எதிரான நடவடிக்கைகளையும், குண்டர்களை வைத்து மிரட்டுவதையும் வங்கிகள் நிறுத்த வேண்டும். வறட்சியால் விவசாயிகள் வாழவழியின்றி தவிப்பதால் இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, சுமூகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்; உழவர்கள் பெற்ற வேளாண் கடனை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்யவும் முன்வர வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

Friday, June 27, 2014

அரசு போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்கினால்


 
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’சென்னையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் 463 புதிய பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருக்கிறார். ஒருபுறம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் உள்ள 40 விழுக்காடு வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி, 40 சதவீத வழித்தடங்களை தனியார்மயமாக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 19,507 வழித்தடங்களில் சுமார் 7800 வழித்தடங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட உள்ளன.
இவ்வளவு வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால், அரசுப் பேருந்துகளைவிட தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். அப்பேருந்துகள் தங்களது விருப்பம் போல கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால் ஏழைகள் பேருந்துகளில் பயணம் செய்வதே எட்டாக்கனியாகி விடும்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்க வேண்டிய தேவையே இல்லை. அரசு போக்குவரத்துக் கழகங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டனவே தவிர லாபம் ஈட்டுவதற்காக தொடங்கப்படவில்லை. எனவே, போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக சேவை செய்கின்றனவா என்பதைத் தான் பார்க்கவேண்டுமே தவிர லாபம் ஈட்டுகின்றனவா? என்று பார்க்கக் கூடாது.
ஒருவேளை போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் நிர்வாகச் சீர்திருத்தம் மூலமாக அவற்றை சரி செய்ய வேண்டுமே தவிர, தனியார் மயமாக்க முயற்சிக்கக்கூடாது. ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்துக் கழகங்கள் தான் தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இவை தனியார்மயமாக்கப்பட்டால் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
இதற்கு முன் 2001–2006 ஆட்சிக் காலத்தின்போது அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடமுள்ள வழித்தடங்களில் 50 விழுக்காட்டை தனியார் மயமாக்க அரசு முயன்றதும், நீதிமன்றத்தின் உதவியுடன் அதை தொழிற்சங்கங்கள் தடுத்து நிறுத்தியதும் நாடறிந்த வரலாறு ஆகும். அதையெல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் அத்தகைய நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கினால், அது தேன் கூட்டின் மீது கல் எறிவதற்கு சமமானதாகும்.
அத்தகைய சூழலில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து அனைத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பாட்டாளி தொழிற்சங்கம் நடத்தும்; மக்களின் சொத்தான போக்குவரத்துக் கழகங்களை காப்பதில் வெற்றி பெறும் என எச்சரிக்கிறேன்’’என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்தவேண்டும்: ராமதாஸ்


பாமக கடலூர் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவிற்கு முன்னரே முடிவுகளை தேவைக்கேற்றபடி கட்டுப்பாட்டு கருவி மென்பொருள் மூலம் தலைகீழாக மாற்ற வாய்ப்பிருப்பதாக அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஆய்வு செய்து தெரிவித்துள்ளன.
வளர்ச்சியடைந்த மேலை நாடுகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்த வாக்குச்சீட்டு முறையை பின்பற்றுகின்றனர். எனவே இந்தியாவிலும் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்தவேண்டும் என்றார்.

23 நாளில் தமிழக மின்வாரியத்திற்கு ரூ.127 கோடி இழப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு



மின்சாரம் வாங்கியதில் கடந்த 23 நாட்களில் ரூ.127 கோடி மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக அரசு மின்பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்குகிறது. தமிழகத்தில் உள்ள காற்றைலை மின் நிலையங்கள் மூலம் போதுமான மின்உற்பத்தி கிடைத்த போதிலும், அவற்றை வாங்காமல், எரிவாயு அனல்மின் நிலையங்களில் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதன் மூலம் தமிழக மின்வாரியத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3.10 பைசாவிற்கு கிடைக்கும் நிலையில், அவற்றை தவிர்த்து, எரிவாயு அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.14க்கு வாங்குகிறது. இதன்படி கடந்த 23 நாட்களில் மின் வாரியத்திற்கு ரூ.127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பெருமளவில் முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற நோக்கத்தில் தான் அரசு கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்குகிறது என்றார்.

சதானந்த கவுடா - அன்புமணி சந்திப்பு! தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தல்!



தொடர்வண்டித்துறை அமைச்சர் சதானந்த கவுடாவை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி இராமதாசு இன்று (27.06.2014) மாலை சந்தித்துப் பேசினார்.
அப்போது மனு ஒன்றையும் அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் தமிழகத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக பாமக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் கொடுத்த மனுவில்:
1) மதுரை - கன்னியாக்குமரி இடையே இரட்டைப் பாதையை அமைக்க வேண்டும். இதன்மூலம் இந்த தடத்தில் 25க்கும் கூடுதலான தொடர்வண்டிகளை இயக்கலாம் என்பதால் நெரிசலை தவிர்க்கலாம்.

2) சென்னை -புதுச்சேரி இடையிலான புதிய பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனால் இத்திட்டத்திற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படவில்லை. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

3) எழும்பூர்- தாம்பரம் இடையே இப்போது 4 புறநகர் மின்தொடர்வண்டிப்பாதைகள் உள்ளன. இப்பாதைகளை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும். இதன்மூலம் சென்னைக்கு தினமும் பயணம் செய்யும் 3 லட்சம்  பேர் பயனடைவார்கள்.

4) திண்டிவனம் - நகரி இடையே வந்தவாசி, செய்யார், ஆற்காடு வழியாக புதிய பாதை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பகுதி பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் நிதி ஒதுக்கப்படாததால் முடங்கிக் கிடக்கின்றன. உடனடியாக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவு படுத்த வேண்டும்.

5) திண்டிவனம் - திருவண்ணாமலை இடையே செஞ்சி வழியாக புதிய பாதை அமைக்க ஒப்புதல் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் இன்னும் தொடங்கப் படவில்லை. உடனடியாக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

6)  ஜோலார் பேட்டை - ஓசூர் இடையே கிருஷ்ணகிரி வழியாக புதிய தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது கிருஷ்ணகிரி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகரம் என்ற போதிலும் இதுவரை தொடர்வண்டிப் பாதையால் இணைக்கப்படவில்லை. எனவே இந்த புதிய பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) தேசியத் தலைநகர் தில்லியிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. தில்லி மற்றும் வேறு நகரங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் தொடர்வண்டிகள் தான் அதிக தூரம் பயணிக்கும் தொடர்வண்டிகள் ஆகும். இவற்றில் பயன்படுத்தப்படும் பெட்டிகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை ஆகும். அவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்தப் பெட்டிகள் அனைத்தையும் உடனடியாக மாற்ற வேண்டும். இதற்காக சுமார் 200 புதிய பெட்டிகள் தேவைப்படும்.

8) மராட்டிய மாநிலம் ஷிர்டி இந்துக்களின் புனித பூமியாகும்.  இந்த நகருக்கு சென்னையிலிருந்து  நேரடியாக தொடர்வண்டிகளை இயக்க வேண்டும்.

9) சென்னை சென்ட்ரல்- எழும்பூர் இணைப்பு  மிகவும் முக்கியமாகும். இதற்கான திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

Tuesday, June 24, 2014

தண்ணீரில் தன்னிறைவு பெற புதிய பாசனத் திட்டங்களை நிறைவேற்றுக! : ராமதாஸ்

 
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தென்மேற்குப் பருவமழையும், கர்நாடகமும் கைகோர்த்துக் கொண்டு தமிழகத்தைக் கைவிட்டதால் காவிரி பாசன மாவட்டங்களில் இந்த ஆண்டும் குறுவைப் பருவ சாகுபடி கனவாகி விட்டது. தொடர்ந்து 3-வது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், இனிவரும் காலங்களில் யாரையும் நம்பாமல் ஓரளவாவது பயிர் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 2000-வது ஆண்டிலிருந்து இதுவரையிலான 15 ஆண்டுகளில் சுமார் 10 ஆண்டுகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாததன் காரணமாக குறுவை சாகுபடி செய்யப் படவில்லை என்பது கசப்பான உண்மை. ஆனால், இதிலிருந்து நாம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ள வில்லை. ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் காவிரி பிரச்சினை பற்றி பேசுவதுடன் அரசியல் கட்சிகளும், உழவர் அமைப்பு களும் ஒதுங்கிக் கொள்கின்றன.

ஆட்சியாளர்களும் மும்முனை மின்சாரம் வழங்குகிறோம்; அதைக்கொண்டு நிலத்தடி நீரை எடுத்து குறுவை பயிரிட்டுக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்குவதுடன் தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால், தொடர் வறட்சிக் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதாலும், மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்காததாலும் குறுவை சாகுபடி 20% பகுதிகளில்¯ கூட நடப்பதில்லை என்பதையும், இதேநிலையும், இயற்கை வளங்களைச் சுரண்டும் வழக்கமும் தொடர்ந்தால் அடுத்த பல ஆண்டுகளில் காவிரிப் படுகையே பாலைவனமாக மாறும் ஆபத்து இருப்பதையும் நாம் நினைவில் கொள்வதில்லை.
அண்டை மாநிலமான ஆந்திராவும் ஒரு காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்த மாநிலம் தான். வறட்சியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு கடன் தொல்லை தாங்கமுடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகும் நிலைக்கு ஆந்திரம் தள்ளப்பட்டது. ஆனால், 2004 ஆம் ஆண்டில் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி ஜலயாக்னம் (நீர் யாகம்) என்ற பெயரில் தொடங்கி வைத்த நீர்ப்பாசனத் திட்டத்தின் பயனாக, ஆந்திராவில் ரூ.70,000 கோடி செலவில் 70 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிருக்கிறது. பாலைவனமாக மாறிவிடும் என்று அஞ்சப்பட்ட தெலுங்கானா இப்போது வளம் கொழிக்கும் பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் ஆந்திராவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை மாறி மகிழ்ச்சியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் எந்த பாசனத்திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை. ஆந்திரா அளவுக்கு தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லை என்பது உண்மை தான் என்றாலும், இருக்கும் நீர் ஆதாரங்களைக் கூட நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில்லை. 2008&09 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காவிரி& அக்கினியாறு- கோரையாறு- பாம்பாறு - வைகை - குண்டாறு இணைப்பத் திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை. திட்டமிட்டு செயல்பட்டால் தமிழக ஆறுகள் அனைத்தையும் 8 ஆண்டுகளில் இணைத்துவிட முடியும். ஆனால், அறிவிக்கப்பட்டு 6 ஆண்டு ஆகியும் இந்த நதிகள் இணைப்புத் திட்டங்கள் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கின்றன.
தமிழகத்தில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைக்க மொத்தமாக ரூ.50,000 கோடி செலவாகும். நதிகள் இணைப்பின் மூலம் உருவாக்கப்படும் நீர்வழிப்பாதை, மின்உற்பத்தி, மீன் வளம் போன்றவற்றால் ஆண்டுக்கு ரூ.5000 கோடி வருமானம் கிடைக்கும். இதைக்கொண்டு இதற்காக செலவிட்ட தொகையை 10 ஆண்டுகளில் எடுத்துவிட முடியும். மேலும், நதிகள் இணைப்பின் மூலம் தமிழகத்தில் 75 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் தமிழகத்தில் விவசாயம் செழிக்கும்.
நீர் நிலைகள் தூர் வாரப்படாததாலும், தடுப்பணைகள் கட்டப்படாததாலும் தமிழகத்தில் ஆண்டுக்கு 60 முதல் 70 டி.எம்.சி மழை மற்றும் வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது. நீர்நிலைகளை தூர் வாருவதுடன், செயற்கை நீர் நிலைகளை உருவாக்கி இந்த தண்ணீரை தேக்கி வைப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடி செய்ய முடியும். எனவே, நதிகள் இணைப்பு, நீர்நிலைகளை தூர் வாருதல், சிறப்புப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றுதல் ஆகிய 3 அம்சத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் வேளாண் மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

மெட்ரிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள ஆணை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது: ராமதாஸ்

மெட்ரிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள ஆணை
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் நலிவடைந்த, பின்தங்கிய  மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 25% இடங்களுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை இம்மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடை கிறது. அதன்பின் விண்ணப்பங்கள் ஆய்வுசெய்யப்படவுள்ள நிலையில் மெட்ரிக் கல்வித் துறை பிறப்பித்துள்ள ஆணை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,  ‘’ கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு பள்ளியிலும் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் வருமானச் சான்றிதழ் வழங்கும்படி பள்ளி நிர்வாகங்கள் கோரக்கூடாது என்பது தான் மெட்ரிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள ஆணை ஆகும். இதற்கான சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் மெட்ரிக் கல்வி இயக்குனர் அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆணையை மேலோட்டமாக பார்க்கும்போது ஏதோ சலுகை போன்று தோன்றும்; ஆனால், இது உண்மையில்  கல்வி பெறும் உரிமையின் நோக்கத்தை அடியோடு தகர்க்கும் மோசமான நடவடிக்கை.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி 25 விழுக்காடு இடங்கள் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதன் நோக்கமே சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் கல்வி பெற பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பது தான். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களின் குழந்தைகள் நலிவடைந்த பிரிவினராகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின, பழங்குடியின, அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளும் பின்தங்கிய பிரிவினராகவும் கருதப்படுவர் என்றும் கல்வி  உரிமைச் சட்ட விதிகள் தெரிவிக்கின்றன.

பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப் படவில்லை என்றாலும் அப்பிரிவிலுள்ள பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த குழந்தைகளுக்குத் தான் 25% ஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒருவர் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராகவே இருந்தாலும் அவர் பொருளாதார அடிப்படையில் வலுவானவராக இருந்தால் இந்த ஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்கக்கூடாது. இதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று இது முழுக்க முழுக்க ஏழைகளுக்கான ஒதுக்கீடு ஆகும். இன்னொன்று இட ஒதுக்கீட்டு விதிகளின் கீழ்  பயனடையும் பிரிவினருக்கு மீதமுள்ள 75% இடங்களில் உரிய இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களிடம் வருமானச் சான்றுகளைக் கோரக்கூடாது என்று அரசு ஆணை யிட்டிருப்பதால், அப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பெரும்தொகையை பெற்றுக் கொண்டு பணக்கார மாணவர்களைச் சேர்த்துவிட்டு, அவர்கள் அனைவரும் பின்தங்கிய பிரிவினர் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் பொய்யாக கணக்கு காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாகிவிட்டன. 25% இடஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இப்போது தான் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன; அவர்களைச் சேர்க்கும் நடைமுறை அடுத்த மாதத்தில் தான் தொடங்கும் என ஏட்டளவில் கூறப்படும் போதிலும், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த இடங்கள் பணக்கார மாணவர்களைக் கொண்டு நிரப்பப் பட்டுவிட்டன என்பது தான் உண்மை. இவ்வாறு முறைகேடாக செய்யப்பட்ட மாணவர் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் தரவே இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. எனவே, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை இரத்து செய்ய வேண்டும்.
மேலும், 25% இடங்கள் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே, முதல் கட்டமாக 25% ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆய்வு செய்து, ஒற்றைச் சாளர முறையில் தகுதியுள்ள மாணவர்கள் சேர்க்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஒருவேளை 25 விழுக்காடு இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்றால், காலியாக உள்ள இடங்களுக்கு கல்விபெறும் உரிமைச் சட்டப்படி அடுத்த 6 மாதங்களுக்குள் புதிதாக விண்ணப்பங்களைப் பெற்று இதேமுறையில் தமிழக அரசு நிரப்ப வேண்டும்’’  என்று வலியுறுத்தியுள்ளார்.

Wednesday, June 18, 2014

அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை செல்ல தயாராக உள்ளோம்: ராமதாஸ்



பாமக தலைமைச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்:

தேர்தலில் வெற்றி, தோல்விகள் சகஜமானவை. நாம் வெற்றி பெற்றபோது ஆர்ப்பரித்ததில்லை. அதேபோல தோல்வி அடைந்தபோதும் துவண்டதில்லை. ஆனால், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழக அரசு அம்மா உணவகம் மூலம் இட்லி, தோசை போடுவது, தண்ணீர் விற்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது வளர்ச்சிக்கான பாதை இல்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எங்களிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதனை நாங்கள் ஒரு புத்தகமாகவே போட்டு வைத்துள்ளோம்.
அதிமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டால் விவசாயிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு இல்லாமல் 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது நம்ப முடியாதது.
வெறும் பணத்துக்காக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை செல்வதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.
2016-ஆம் ஆண்டு தேர்தலில் பாமக வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். இத்தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளில் பாதி இடங்களில் டெபாசிட் இழக்க வேண்டும். ஏற்கெனவே இதை பெண்ணாகரத்தில் தருமபுரி மக்கள் செய்து காட்டினர். வரும் தேர்தலில் பாமக மற்ற தொகுதிகளிலும் இதை செய்து காட்ட வேண்டும் என்றார்.

மது தேவையா? வேண்டாமா? என்பதை வலியுறுத்தி பெண்களிடம் வாக்கெடுப்பை பாமக நடத்தும்: ராமதாஸ்



பாமக தலைமைச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்:
சி.பி.எஸ்.இ. கல்வி முறை போன்று தரமான பாடத் திட்டத்தை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், விவசாய பிரச்னைகளுக்காகவும் போராட்டம் நடைபெறும்.
மற்றொன்று மது தேவையா? வேண்டாமா? என்பதை வலியுறுத்தி பெண்களிடம் வாக்கெடுப்பை பாமக நடத்தும். வாக்கெடுப்பின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வாக்குப் படிவத்தில் வாக்களிப்பவரின் கைரேகை பதிவு செய்யப்படும். இதன் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

மின்வெட்டு தீர்ந்ததா? மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் சவால்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் மின்வெட்டு அடியோடு இரத்து செய்யப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், ஜூன் 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. இதை சுட்டிக்காட்டி கடந்த 7 ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட நான், மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருந்தேன்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், அல்லும் பகலும் பாடுபடும் ஜெயலலிதாவின் பகீரத முயற்சியால் இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கூறியிருந்தார்.
கேட்டதுமே சிரிப்பு வரும் வகையில் அமைச்சரின் பதில் அமைந்திருந்ததால், தமிழகத்தில் மின் திட்டங்களை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு அக்கறையின்றி செயல்படுவதை சுட்டிக்காட்டியதுடன், தமிழக மின்திட்டங்கள் தொடர்பாக 10 வினாக்களை எழுப்பியிருந்தேன். அவற்றுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனிடம்,‘‘ ஏன் தாமதம்?’’ என்று ஆசிரியர் கேட்டாராம். அதற்கு பதிலளித்த மாணவன், தமது தாமதத்தை மறைப்பதாக நினைத்துக் கொண்டு,‘‘ பேரூந்து தான் தாமதமாக வந்தது’’ என்றானாம். எனது வினாக்களுக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்துள்ள பதில்களும், மாணவன் அளித்த பதிலைப் போன்று தான் உள்ளன.
மின்திட்டங்களைத் தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதமானதாகவும், ஆய்வுப் பணிகள் நடந்துக் கொண்டிருப்பதாகவும் கூறி விரைவில் மின்திட்டப் பணிகள் முடிக்கப்படும் என்று பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே மாதிரியாக பதிலளித்துள்ளார். சில திட்டங்களுக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப் பட்டிருப்பதாக வேறு சில வினாக்களுக்கு விடையளித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசு அறிவித்த மின்திட்டங்கள் எதற்குமே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை; அனைத்து திட்டங்களுமே அனுமதி பெறும் நிலையிலும், ஆய்வு நிலையிலும் தான் உள்ளன என்பதை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த ‘நேர்மை’க்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
மின்திட்டங்கள் தாமதமாவதை நியாயப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில், மின்திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோரப்படுவது அரசு கட்டடங்களுக்கு ஒப்பந்தம் கோரப்படுவதைப் போன்றதல்ல; அதற்கு முன் ஏராளமான அனுமதிகள் பெறப்பட வேண்டியுள்ளன; இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் மருத்துவர் இராமதாசு குறைகூறுகிறார் என்று எனக்கு பாடம் கற்றுத் தர அமைச்சர் முயன்றுள்ளார்.
ஒரு மின்திட்டத்திற்கு என்னென்ன அனுமதிகளை பெற வேண்டும்? அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்ற விவரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். அனைத்து அனுமதிகளையும் பெற்று ஒரு மின்திட்டத்தை செயல்படுத்த அதிகபட்சமாக மூன்றரை ஆண்டுகள் தான் ஆகும். இவற்றில் உரிய அனுமதிகளைப் பெறுவதற்கு 6 மாதங்கள் ஆகும் என வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள 3 ஆண்டுகளில் கட்டுமானப்பணிகளை முடிக்க வேண்டும் என்பது தான் பொதுவான நடைமுறையாகும். இதை மத்திய திட்ட ஆணையமும், மின்னுற்பத்தித் துறை வல்லுனர்களும் உறுதி செய்துள்ளனர்.
அதன்படி பார்த்தால் 31.01.2011 அன்று அனுமதி அளிக்கப்பட்ட 1320 மெகாவாட் எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின்திட்டம், 24.10.2011 அன்று அனுமதி அளிக்கப்பட்ட உப்பூர் அனல்மின் திட்டம், 29.03.2012 அன்று அறிவிக்கப்பட்ட தலா 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் மற்றும் மாற்று அனல்மின் திட்டம் ஆகிய மின் திட்டங்கள் அதிகபட்சமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும். ஆனால், இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 2 முதல் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இவற்றுக்கான கட்டுமானப் பணிகளே இன்னும் தொடங்கப்படவில்லை. ஏன் இந்த தாமதம் என்று கேட்டால் பலவிதமான அனுமதிகளைப் பெற வேண்டும் என்ற நடைமுறை கூட எனக்கு தெரியவில்லை என்கிறார் அமைச்சர் விஸ்வநாதன்.
கடந்த 29.03.2012 அன்று சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதாவும் நான் கூறியதைப் போலவே 2015 ஆண்டு இறுதிக்குள் இந்த மின்திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறினார். அப்படியானால், திட்டங்களுக்கான அனுமதிகளைப் பெற வேண்டிய தேவை குறித்து ஜெயலலிதாவுக்கு தெரியாது என்று அமைச்சர் கூறுகிறாரா?
தூத்துக்குடியில் என்.எல்.சி. நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து செயல்படுத்தும்  மின்னுற்பத்தித் திட்டப்பணிகள் 2013 ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் உற்பத்தியைத்  தொடங்கும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், அதன்பின் ஓராண்டாகியும் மின்னுற்பத்தி தொடங்கப்படாதது ஏன்? என்று கேட்டால், மின்னல் வேகத்தில் பணிகள் நடப்பதாகவும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் அங்கு மின்னுற்பத்தி தொடங்கும் என்றும் அமைச்சர் பதிலளித்திருக்கிறார். நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட 14 மாதங்கள் தாமதமாக பணிகளை முடிப்பது தான் மின்னல் வேகத்தில் பணிகளை மேற்கொண்டதன் அடையாளமா?

மின் திட்டங்கள் தாமதமாவதற்கு காரணம் என தனது அறிக்கையில் அமைச்சர் சுட்டிக்காட்டுவது மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளை பெற வேண்டியிருப்பதைத் தான். எந்த ஒரு மின்திட்டமாக இருந்தாலும் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அனைத்து ஆவணங்களுடன் மாநில அரசு விண்ணப்பித்தால், அடுத்த 90 நாட்களில் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தப்பட்டு, அதிலிருந்து 30 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், தமிழக அரசின் மின் திட்டங்களுக்கு இந்த அனுமதி கிடைக்க இதைவிட அதிக காலம் ஆகியிருக்கிறது. இந்த கால தாமதத்தை தவிர்க்க  தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மொத்தம் 139 கடிதங்களை ஜெயலலிதா எழுதினார். இவற்றில் 9 கடிதங்கள் தமிழகத்தின் மின்தட்டுப்பாடு தொடர்பானவையாகும். ஆனால், இவற்றில் ஒரு கடிதத்தில் கூட தமிழக மின்திட்டங்களுக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டும் என்று கோரவில்லை. மின்திட்டங்களை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு காட்டிய அக்கறை இந்த அளவு தான்.
அ.தி.மு.க.வின் 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் மின்னுற்பத்தித் திறனை 10 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு பெருக்கத் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு என்ன ஆனது? என்று நான் வினா எழுப்பியிருந்தேன். அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், கூடங்குளம் அணுமின்நிலையம், நெய்வேலி இரண்டாம் நிலை விரிவாக்கத் திட்டம், தூத்துக்குடி கூட்டு மின் திட்டம், வல்லூர் மின்திட்டம் என முழுக்க, முழுக்க மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட  கூட்டு மின்திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டும், வெளி மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கப்படும் 3330 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டும் 12,730 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு மத்திய அரசிடமிருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கும் மின்சாரத்தையெல்லாம் தங்களின் தயாரிப்பு என்று பெருமை பேசும் மின்துறை அமைச்சரை பெற்றதற்கு தமிழக மக்கள் என்ன தவம் செய்தார்களோ தெரியவில்லை. எதையுமே செய்யாமல் ‘நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ என ரூ.200 கோடி செலவில் தம்பட்டம் அடித்துக் கொண்ட அரசிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும்  எதிர்பார்க்க முடியாது.
தமிழக அரசு அறிவித்த சூரிய ஒளி மின் கொள்கையின்படி தமிழகத்தில் 2014ஆம் ஆண்டில் 2000 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், ஒரு மெகாவாட் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்பது எனது குற்றச்சாற்று. இதற்கு நேரடியாக பதிலளிக்காத அமைச்சர் விஸ்வநாதன், மற்ற மின்திட்டங்களின் கீழ் 102 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்து தப்பிக்கப் பார்த்திருக்கிறார். சூரிய ஒளி மின் கொள்கையின்படி எத்தனை மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப் பட்டிருக்கிறது என்ற வினாவுக்கு அமைச்சரால் பதிலளிக்க முடியுமா? மற்ற மின்திட்டங்களின் மூலமாக 102 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் கூறுவதிலும் உண்மையில்லை.
சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த 2013 &14 ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறைக்கான மானியக் கோரிக்கையில் தமிழகத்தில் வெறும் 17 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் சூரிய ஒளி மின்திட்டங்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் 28.8 மெகாவாட் அளவுக்கு மட்டுமே சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 102 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படுவதாகக் கூறும் அமைச்சர், அது எங்கெங்கு தயாரிக்கப்படுகிறது என்பதையும், எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும்  விளக்குவாரா?
தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாறவிருக்கிறது என்று முதலமைச்சர் கூறுவது உண்மையென்றால், வெளிமாநிலங்களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு 3330 மெகாவாட் மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் செய்திருப்பது ஏன்? என்ற கேள்விக்கு விடையளித்துள்ள அமைச்சர், ‘‘இந்த அளவுக்கு மின்சாரம் தயாரிக்க அதிக செலவும், காலமும் ஆகும் என்பதால் தான் வெளியிலிருந்து வாஙகப்படுகிறது’’ என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து உண்மையென்றால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மின்னுற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடையாது; மின்மிகை மாநிலமாக மாறாது  என்ற உண்மையை ஒப்புக்கொள்ள அமைச்சர் தயாரா?
2007ஆம் ஆண்டு முதல் நிலவி வந்த மின்வெட்டை 3 ஆண்டுகளில் சீர்செய்து, மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஜெயலலிதா மாற்றியிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தான் நான் அரசை விமர்சிப்பதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தற்போது மின்வெட்டே இல்லை என்பதன் மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்துள்ளார். தலைமைச்செயலகத்திலும், அமைச்சர்களுக்கான மாளிகையிலும் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு ஜெயா தொலைக்காட்சியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், தமிழகம் ஒளிர்வது போன்றும், அதை பொதுமக்களும்,விவசாயிகளும், தொழில் முனைவோரும் பாராட்டுவது போன்றும் தான் தோன்றும். அமைச்சராக இருக்கும் விஸ்வநாதன் போன்றவர்கள் தங்களைச் சுற்றி அமைத்துக் கொண்டிருக்கும் வளையத்தைத் தாண்டி வெளியில் வந்தால் தான் ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு மின்வெட்டால் மக்கள் எந்த அளவுக்கு அவதிப்படுகிறார்கள் என்பதும்,  மின்வெட்டை அவ்வளவாக அனுபவிக்காத சென்னையில் இரவு நேரத்திலும் மின்வெட்டு நீடிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் மின்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதும் தெரியும்.
ஏற்கனவே கூறியதைப்போல இந்தப் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மாறாக, தமிழகத்தின் மின்வெட்டை நீக்க முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன். இந்த விஷயத்தில் எது சரி என்பதை இனி தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்கள் தான். இதன்பிறகும்  மின்வெட்டை போக்கி தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக்கி விட்டதாக ஜெயலலிதா கருதுவாரேயானால், அதையே மக்கள் மன்றத்தில் முன் வைத்து பொது வாக்கெடுப்பு நடத்தவும், அதில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்ளவும் தயாரா? என்று சவால்  விடுக்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Monday, June 16, 2014

அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது: ராமதாஸ்



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. இம்முறையும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்காமல் துரோகம் செய்து வருகிறது.
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் அரசுக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் விதியாகும். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப் பட்டது. 2006 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பா.ம.க. அளித்த அழுத்தம் காரணமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த தி.மு.க. ஆட்சியில் இரு முறை புதிய ஊதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
கடந்த ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட 11 ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 01.09.2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், அதன்பின் கிட்டத்தட்ட ஓராண்டாகியும் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்குக் கூட தமிழக அரசு தயாராக இல்லை. முந்தைய ஆட்சியில் நடைமுறைப்படுத்தியதைப் போன்றே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஊதிய ஒப்பந்தம் என்ற நிலையை ஏற்படுத்த தமிழக அரசு முயல்கிறதோ என்ற ஐயம் தொழிலாளர்களிடையே நிலவுகிறது.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதிலும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் அ.தி.மு.க. அரசு நடத்துகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த 01.06.2013 முதல் 8% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அதற்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. அதேபோல், அரசு ஊழியர்களுக்கு 01.01.2014 முதல் 10% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும், அது போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்னும்  அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் மின்வாரிய ஊழியர்களுக்கும், போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும்  மட்டும் தான் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு  அறிவிக்கப்படும்போதே, பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும். இந்த உரிமையை பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகே போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பெற்றுள்ளனர். ஆனால், அரசு ஊழியர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களுக்கும்  அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 6 மாதங்களாகியும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு மட்டும் இன்னும் வழங்காமல் தாமதப்படுத்துவது மிகப்பெரிய அநீதி; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அதேபோல் ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பயன்களை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்காமல் அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருக்கிறது. இதனால், தங்களது வாரிசுகளின் திருமணம், உயர்கல்வித் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல்  ஓய்வூதியர்கள் அவதிப்படுகின்றனர். விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வுகால சேமநல நிதி போன்ற சலுகைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் அத்தியாவசியத் சேவைகளில் ஒன்றான போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற மறுப்பது நியாயமா? என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுடன் 12ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சை உடனடியாக தொடங்கவேண்டும். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் வரை இடைக்கால நிவாரணமாக மதம் ரூ.3,000 வழங்க வேண்டும். 01.01.2014 முதல் வழங்கப்பட வேண்டிய 10% அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிப்பதுடன், கடந்த ஆண்டில் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும். ஓய்வூதியப் பயன்கள் உள்ளிட்ட உரிமைகளையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க போக்குவரத்து ஊழியர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்க  வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, June 12, 2014

நான் கூறியதும், ராமதாஸ் கூறியதும் தவறாக இருந்தால் முதல் அமைச்சரே பதில் சொல்லியிருப்பாரே? கலைஞர்


திமுக தலைவர் கலைஞர் 12.06.2014 வியாழக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

கேள்வி :- மின்சாரம் பற்றி டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும் - செம்மொழி பற்றி தாங்கள் விடுத்த அறிக்கைக்கும் முதலமைச்சர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியிருக்கிறார்களே? 

கலைஞர் :- அதிலிருந்தே நான் கூறியதும், டாக்டர் ராமதாஸ் கூறியதும் உண்மை என்று உங்களுக்குப் புரியவில்லையா? நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல் அமைச்சரே பதில் சொல்லியிருப்பாரே? உண்மை அவருக்கும் புரிந்தபடியால்தான், தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், இரண்டு அமைச்சர்களைப் பிடித்துப் பதில் சொல்ல வைத்திருக்கிறார். அமைச்சர்களும் விதியே என்று எதிர்க்கட்சிகளைத் தாக்கி அறிக்கையும் 
விடுத்திருக்கிறார்கள். எது உண்மை என்பதை மக்களே அறிவார்கள்! 

கேள்வி :- எப்படியோ இந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார ஒழுங்கு முறை ஆணையத் திற்கு புதிய தலைவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு விட்டாரே? 

கலைஞர் :- தி.மு. கழக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவராக நியமனம் பெற்ற திரு. கபிலன், கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்ற பிறகு, இரண்டரை ஆண்டு காலமாக அந்தப் பதவியிலே யாரும் நியமிக்கப்படவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மின் தொடரமைப்புக் கழக இயக்குநராக இருந்த அக்ஷய் குமாரை அரசு நியமித்துள்ளது. 

நியமிக்கப்பட்ட நிலையில் புதிய தலைவரின் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையம் நீதிமன்ற அந்தஸ்தில் செயல்படுவதாலும், பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டுமென்பதாலும், நீதித் துறையைச் சேர்ந்தவர்தான் இந்தப் பதவியிலே நியமிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்திலே தொழில் துறையினர் முறையிட்டுள்ளார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒழுங்கு முறை ஆணைய புதிய தலைவராக எஸ். அக்ஷய் குமார் அமைச்சர் முன்னிலையில் பதவியேற்றிருக்கிறார். பதவியேற்ற மறுநாளே, அவருடைய நியமனத்திற்குத் தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

கேள்வி :- முதலமைச்சர் ஜெயலலிதா 27-5-2014 அன்று வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 1ஆம் தேதி முதல் மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்று செய்த அறிவிப்பு என்ன ஆயிற்று? 

கலைஞர் :- 27ஆம் தேதி அறிக்கையிலே மட்டும்தான் ஜெயலலிதா அப்படி அறிவித்தாரா? ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதே அ.தி.மு.க. ஆட்சிக்கு வருமானால் மூன்றே மாதங்களில் மின்வெட்டே இல்லாமல் செய்வோம் என்று கூறித்தான் ஆட்சிக்கு வந்தார். அதற்குப் பிறகு பல முறை முதலமைச்சர் ஜெயலலிதாவும், மின் துறை அமைச்சரும் மின்வெட்டே இல்லாமல் செய்திடுவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் மின் வெட்டுதான் நிறுத்தப்படவில்லை. 

முதலமைச்சர் விடுத்த அறிக்கையில், “பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார். அதற்கான விளக்கத்தை நான் தெரிவித்திருந்தேன். நான் மட்டுமல்ல; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் 7-6-2014 அன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஜூன் 3ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மின்வெட்டு தொடங்கி விட்டது என்றும், மாவட்டங்களில் 4 முதல் 6 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்ததோடு, முந்தைய தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்திட்டங்களும், கூட்டு முயற்சி மின் திட்டங்களும் தற்போது நிறைவடைந்ததால் மின் உற்பத்தி தற்போது அதிகமாகி யிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும், அதே நேரத்தில் அதற்குத் தக்க பதில் இல்லாத நிலையிலும்தான் முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தத் துறையின் அமைச்சரைக் கொண்டு அறிக்கை விடச் சொல்லியிருக்கிறார். 

ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த மூன்றாண்டுகளில் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளின் விளைவாக, 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்தவுடன், இந்தப் புதிய மின் உற்பத்தி நிறுவு திறனுக்கான மின் திட்டங்கள், எங்கெங்கே - எந்தெந்தத் தேதியில் இவர்களுடைய ஆட்சியினால் தொடங்கப்பட்டன என்று விளக்கிடத் தயாரா என்று நான் கேட்டதற்கு இன்றுவரை முதலமைச்சரோ, இன்று அறிக்கை விடுத்துள்ள அமைச்சரோ எந்தவிதமான பதிலும் கூறவில்லை. 

தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்துதான் இந்த 2,500 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைக்கத் தொடங்கியிருக்கிறதே தவிர, ஜெயலலிதாவினால் புதிதாகத் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் எதுவும் இதுவரை தொடங்கப்படவும் இல்லை, அதிலிருந்து தற்போது மின்சாரம் கிடைக்கவும் இல்லை. மின்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போட்டிருந்த அனல் மின் உற்பத்தித் திட்டங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா முடுக்கி விட்டதன் காரணமாக 5 புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள் உற்பத்தியைத் தொடங்கி 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறன் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே, தற்போது கூடுதலாகக் கிடைக்கும் 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி, தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கழக ஆட்சியில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்படாவிட்டால் இந்த 2,500 மெகாவாட் மின் உற்பத்தி கிடைத்தே இருக்காது. அதற்காக கழக ஆட்சிக்கு நன்றி கூற வேண்டியவர்கள், இந்த ஆட்சியினர். 

முதலமைச்சர் அறிக்கையிலும், துறையின் அமைச்சர் அறிக்கையிலும் பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 3,330 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, அதுவும் 15 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு மின்சாரம் வாங்கும்போது, டெண்டர் கோரப்பட்டதா? என்ன விலை? அதுவும் ஒரே நேரத்தில் 15 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தம் போடப்பட்டதன் மர்மம் என்ன? 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டால், அதுவரை தமிழக அரசின் சார்பில் மின் உற்பத்தித் திட்டங்களே தொடங்க மாட்டார்களா? இது பற்றிய விவரங்களை மீண்டும் மீண்டும் கேட்டு இந்த அரசினர் அதற்கு மட்டும் பதிலளிப்பதில்லையே; என்ன காரணம்? இனியாவது பதிலளிப்பார்களா? 

இன்று (12-6-2014) வெளிவந்துள்ள “தினமலர்” நாளேட்டில் முதல் பக்கத் தலைப்புச் செய்தியே, “தனியாரிடம் 3,330 மெகாவாட் மின் கொள்முதலில் சிக்கல்! மின் வழித்தட இணைப்புப் பணி கால தாமதம்” என்ற தலைப்பிலே விரிவாக எழுதியிருக்கிறார்கள். அதில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்ததில், இம்மாதம் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் மின் வழித்தடம், வர்த்தகப் பயன்பாட்டிற்கு வராததால், மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். எனது கேள்விக்குத் தான் பதில் இல்லை என்றாலும், ஏடுகள் எழுதியிருப்ப தற்குப் பதில் என்ன? எனக்குப் பதிலளிக்க விரும்பாவிட்டாலும், பா.ம.க. நிறுவனர், அமைச்சரின் அறிக்கைக்குப் பதிலாக 10 கேள்விகளை விவரமாகக் கேட்டிருக்கிறார். அதற்காவது அரசினர் பதில் அளிப்பார்களா? 

ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது என்று முதல் அமைச்சர் அறிக்கை விடுத்தார். நேற்று “தினமலர்” பத்திரிகையின் முதல் பக்கச் செய்தி என்ன தெரியுமா? “சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிக்கு சிக்கல்; இரவில் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மின் தடை” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்திக்காவது பதில் கூறுவார்களா? 

Wednesday, June 11, 2014

போதையில் விபத்து ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை தேவை : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியவை என்ற போதிலும், மனிதத் தவறுகளை திருத்திக் கொள்ள வாகன ஓட்டிகள் தயாராக இல்லை எனும்போது இனி பயணங்கள் பாதுகாப்பானவையாக இருக்குமா? என்ற கவலை எழுகிறது.

சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்களைப் பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தான் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 67,757 ஆகும். இந்த விபத்துக்களில் சிக்கி 16,175 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 78,000 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோரில் சுமார் 7,000 பேர் உடல் உறுப்புகளை இழந்து முடமாகியுள்ளனர். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் சுமார் 23,000 குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றன. அந்த வகையில் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் இரண்டரை லட்சம் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விபத்துக்களுக்கு காரணமானவர்கள் எவரும் தவறுகளை உணர்ந்ததாக தெரியவில்லை.

தேசிய குற்ற ஆவணக் காப்பகமும், தமிழக போக்குவரத்து ஆணையமும் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் விபத்துகளுக்கு காரணமாக இருப்பவை சரக்குந்துகள் தான் என்று தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிகழ்வுகளில் 9192 விபத்துக்களுக்கு சரக்குந்துகளே காரணம் ஆகும். விபத்துக்களை ஏற்படுத்திய சரக்குந்து ஓட்டுனர்களில் 70 % மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டியதும் கண்டறியப்பட்டது. இந்தியாவிலேயே அதிக ஊர்திகளைக் கொண்ட மாநிலம் மராட்டியம் தான். 1.75 கோடி வாகனங்களைக் கொண்ட அம்மாநிலத்தில் ஆண்டுக்கு 45,000 விபத்துக்களும், 13,963 உயிரிழப்புகளும் மட்டுமே ஏற்படும் நிலையில், 1.5 கோடி ஊர்திகளை மட்டுமே கொண்ட தமிழகத்தில் 68,000 விபத்துக்களும், 16,175 உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் பெரும்பாலான ஓட்டுனர்கள் போதையில் வாகனம் ஓட்டுவது தான்.

அண்மையில், அரியலூர் அருகே 15 பேர் உயிரிழக்கக் காரணமான கொடூரமான சாலைவிபத்துக்கு  காரணம் சரக்குந்து ஓட்டுனர் அளவுக்கு அதிகமான போதையில் வாகனத்தை ஓட்டி பேரூந்து மீது மோதியது தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது கூட  பேரூந்துகளையும், மற்ற வாகனங்களையும் உரசிக் கொண்டு சரக்குந்துகள் சீறிப் பாய்வதையும்,  இதனால் சரக்குந்துகளைப் கண்டாலே மற்ற வாகனங்களின் ஓட்டுனர்கள், குறிப்பாக இருசக்கர ஊர்தி ஓட்டுபவர்கள் பயந்து ஒதுங்குவதையும் பார்க்க முடிகிறது. புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் தாறுமாறாக  பறக்கும் சரக்குந்துகள் மோதி இரு சக்கர ஊர்திகளில் சென்ற கணவன்& மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுகள் ஏராளம். இதேபோல், புதுச்சேரியிலிருந்து கடலூர், விழுப்புரம் செல்லும் சாலைகளிலும் இத்தகைய விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன. சரக்குந்துகளின் ஓட்டுனர்கள்  போதையில் கண்மூடித்தனமாக ஊர்திகளை ஓட்டுவது தான் இதற்கு காரணம் ஆகும். சரக்குந்து ஓட்டுனர்களில் பெரும்பாலானவர்கள் கவனத்துடனும், பொறுப்புடனும்   வாகனங்களை ஓட்டும் போதிலும், சிலர் குடித்துவிட்டு தாறுமாறாக ஓட்டுவதால் சரக்குந்து என்றாலே அஞ்சி நடுங்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் குடித்துவிட்டு ஊர்தி ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

தில்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உயிரிழக்கக் காரணமான சாலை விபத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி, சாலை விதிகளை 3 முறை மீறும் வாகன ஓட்டிகளின் உரிமம் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், அதன்பிறகும் விதிகளை மீறினால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் முற்றிலுமாக இரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது தான் என்ற போதிலும், விபத்துக்களைத் தடுக்க இது மட்டுமே போதாது. சரக்குந்து உள்ளிட்ட அனைத்து ஊர்திகளின் ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டியதாக ஒருமுறை பிடிபட்டாலே அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை இரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்;  தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமின்றி, மாநில நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற விதியை மிகவும் கடுமையாக செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 50 கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் சோதனைச் சாவடிகளை அமைத்து அனைத்து வகையான சரக்குந்துகளின் ஓட்டுனர்களும் மது அருந்தியிருக்கிறார்களா? என ஆய்வுசெய்ய வேண்டும். அவர்கள் மது அருந்தாமல் இருந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். அதேபோல், அனைத்து சரக்குந்துகளிலும் வேகத்தடை கருவி பொருத்தப்படுவதை உறுதி செய்வதுடன், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேகத்தில் செல்லும் ஊர்திகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்காக காவல்துறையில் விபத்துத் தடுப்புப் பிரிவை தனியாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Tuesday, June 10, 2014

மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாரா? : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் முழுமையாக நீக்கப்படும் என்று கடந்த மே 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், மின்வெட்டு நீக்கப்பட்டதற்கு மூன்றாவது நாளே சென்னை தவிர மற்ற  மாவட்டங்களில் 4  முதல் 6 மணி நேரம்  மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதையும், இதனால் மக்கள் அவதிப்பட்டதையும் கடந்த 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தேன்.

சட்டமன்றத்தில் மற்ற அமைச்சர்களின் துறை சார்ந்த அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் தாமே அறிவிக்கும் ‘பெரிய மனம்’ கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, மின்வெட்டு தொடர்பான எனது குற்றச்சாற்றுகளுக்கு மட்டும் பதிலளிக்கும் வாய்ப்பை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு தாராள மனதுடன் வழங்கியிருக்கிறார். அவரும் இட்ட பணியை நிறைவேற்ற வேண்டுமே என்பதற்காக நான்கு பக்கங்களுக்கு ஒரு நீண்ட கட்டுரையை எழுதி, அதில் தமது தலைவியை குளிர்விப்பதற்காக ஆங்காங்கே ‘பச்சை தன்னலவாதி’, ‘அரசியல் ஆதாரம் தேட நினைக்கிறார்’, ‘அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுபவர்’ என முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே பொருந்தும் வார்த்தைகளால் என்னை விமர்சித்து, அதை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். இதில்  வேடிக்கை என்னவென்றால், மின்வெட்டை போக்குவதற்காக அ.தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் ஒரு மின்திட்டத்தைக் கூட உருவாக்கி செயல்படுத்தவில்லை என்ற எனது முதன்மைக் குற்றச்சாற்றுக்கு  அறிக்கையின் முதல் பத்தி தொடங்கி கடைசி பத்தி வரை எங்குமே பதிலைக் காண முடியவில்லை. இப்போது கூடுதலாக உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படும் 2550 மெகாவாட் மின்சாரம் கடந்த காலங்களில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களிலிருந்து தான் கிடைத்தது என்பதையும் அவர் மறுக்க வில்லை. மாறாக, மின்வெட்டை போக்க ஜெயலலிதா பாடுபடுவதாக வெற்று வசனங்களை வீசியுள்ளார்.

மே 27 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘ நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்’’ என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். இதன் மூலம் 3 ஆண்டுகளில் மின்வெட்டைப் போக்குவதாக அவர் உறுதியளித்திருந்ததைப் போலவும், அதை இப்போது செய்து காட்டியதன் மூலம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். இது பச்சைப் பொய் என்பது தான் எனது குற்றச்சாற்று. மின்வெட்டைப் போக்குவதற்காக ஜெயலலிதா பத்துக்கும் மேற்பட்ட முறை வாய்தா கோரியதை மக்கள் மறந்துவிடவில்லை. ஒருவேளை ஜெயலலிதா மறந்திருந்தால் அவர் எந்தெந்த தேதிகளில் வாய்தா கோரினார் என்பதை அவருக்கு நினைவூட்ட நான் தயாராக இருக்கிறேன்.

தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஒரு மாதத்திற்குள் 10.06.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த ஜெயலலிதா,‘‘ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும்; விரைவில் மின்வெட்டே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்’’ என்றார். பின்னர் 04.02.2012 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர்,‘‘2012 அக்டோபருக்குள் 2550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். 2013ஆம் ஆண்டு மத்தியில் மின்வெட்டு அடியோடு நீக்கப்படும்’’ என்று உறுதியளித்தார். தொடர்ந்து 29.03.2012 அன்று 110 விதியின் கீழ் பேரவையில் அறிக்கை வாசித்த போதும் இதே வாக்குறுதியை அளித்தார். ஆனால், இவற்றில் எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

31.10.2012 அன்று கேள்வி நேரத்திற்குப் பிறகு நடந்த விவாதத்தின் போதும், 08.02.2013 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போதும், 25.04.2013 அன்று  110விதியின் கீழ் அறிக்கை படித்த போதும் 2013 ஆம் ஆண்டு இறுதிக்குள் மின்வெட்டு நீங்கும் என முதல்வர் கூறினார். அதுமட்டுமின்றி, 2013 இறுதிக்குள் 4385 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். இவையும் நிறைவேற்றப்பட வில்லை. 25.10.13 அன்று பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் எங்குமே மின்வெட்டே இல்லை என்று அறிவித்தார். அதற்கு அடுத்த நாளே தமிழகம் இருண்டது. ஆனால், மத்திய அரசின் சதியே இதற்கு காரணம் என பழி போட்டு தப்பிக்க முயன்றார். கடைசியாக 03.02.2014 அன்று சட்டப்பேரவையில் பேசும் போதும், அதன்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதும் மின்வெட்டு விரைவில் விலகும் என்றார். இப்படி வாய்தா மேல் வாய்தா வாங்கி விட்டு, வாக்குறுதியை சரியாக நிறைவேற்றி விட்டேன் என்று கூறுவது  தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற உயர் பதவியில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அழகா?

தமிழ்நாட்டில் மின்வெட்டைப் போக்க முதல்வர் ஜெயலலிதா அல்லும் பகலும் பாடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறுகிறார். இது உண்மை என்றால், தமிழக மின்திட்டங்கள் தொடர்பான கீழ்க்கண்ட வினாக்களுக்கு முதலமைச்சர் பதில் அளிப்பாரா?

1) அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் கடந்த 3 ஆண்டுகளில் 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 26.10.12 அன்று ஒப்பந்தம் கோரப்பட்டு, 31.03.2013க்கு முன்பாக ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டுவிட்ட நிலையில், அதன் பின் ஓராண்டு கழித்து 27.02.2014 அன்று ஒப்பந்தம் வழங்குவது தான் அல்லும்பகலுமாக அரும்பாடுபடும் லட்சனமா? அடுத்த ஆண்டு இறுதியில்  முடிவடைய வேண்டிய இத்திட்டப்பணிகள், 2 ஆண்டுகள் தாமதமாக 2017 செப்டம்பரில் தான் நிறைவடையும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு காரணம் யார்?

2) 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 26.07.2013 அன்றும், 1320 மெகாவாட் உடன்குடி மின்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் அதற்கு அடுத்த வாரமும் பிரிக்கப்பட்ட நிலையில், அதன்பின் 11 மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த மின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படாதது ஏன்? மின்வெட்டைத் தீர்ப்பதற்காக  மிகத் தீவிரமாக செயல்படும் அழகு இதுதானா?
3) கடந்த 29.03.2012 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை படித்த ஜெயலலிதா,  எண்ணூரில் இப்போதுள்ள பழைய 450 மெகாவாட் மின்நிலையத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில்  660 மெகாவாட் எண்ணூர் மாற்று அனல் மின் நிலையம் அமைக்கப்படும்; அதில் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என அறிவித்தார். அதன்பின் 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அத்திட்டத்திற்காக சாத்தியக் கூறு அறிக்கை தயாரித்ததைத் தவிர வேறு எந்த பணியும் நடக்கவில்லையே ஏன்?

4) தூத்துக்குடியில் என்.எல்.சி. நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கும் மின்திட்டத்தின் இரு அலகுகளில் முறையே 2013 ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் உற்பத்தி தொடங்கும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், கெடு முடிந்து ஓராண்டாகியும்  இதுவரை அங்கு மின் உற்பத்தி தொடங்காதது ஏன்?

5) அடுத்த ஆண்டு இறுதியில் மின்னுற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட 1600 மெகாவாட் திறன் கொண்ட இராமநாதபுரம் உப்பூர் மின்திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கூட இதுவரைக் கோரப்படாதது ஏன்?

6) மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபின் முதன்முறையாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தித் திறனை பெருக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார். இதை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவும், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

7) செய்யூரில் 4000 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. அதை செயல்படுத்த முந்தைய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முதலமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாற்றியிருந்தார். ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?

8) 2013 முதல் 2015 வரை ஆண்டுக்கு 1000 மெகாவாட் மீதம் 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சூரிய ஒளி மின்சாரக் கொள்கையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதுவரை ஒரு மெகாவாட்டாவது சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்கிறதா?

9) தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாறும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், மின்வெட்டை சமாளிக்க அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3330 மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்க நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக நத்தம் விஸ்வநாதன் கூறுகிறார். தமிழகம் மின்மிகை மாநிலமாகும் என முதல்வர் கூறுவதை நம்புவதா? அல்லது அடுத்த 15 ஆண்டுகளுக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என அவரது நம்பிக்கைக்குரிய நத்தம் விஸ்வநாதன் கூறுவதை நம்புவதா?

10) 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற போது அறிவிப்பு நிலையில் இருந்த மின் திட்டங்களை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மின்னுற்பத்தியை பெருக்க அ.தி.மு.க. அரசு புதிதாக உருவாக்கிய திட்டங்கள் எவை... அவற்றின் இன்றைய நிலை என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு விவாதிக்க முதலமைச்சர் ஜெயலலிதா தயாரா?

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதை நான் வாடிக்கையாக கொண்டிருப்பதாக விஸ்வநாதன் கூறியுள்ளார். தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க பங்களிப்பு செய்ததில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் எந்த கட்சியும் போட்டியிட முடியாது. இந்தியாவே போற்றும் 108 அவசர ஊர்தி, சேலத்தில் ரூ. 139 கோடியில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்களைக் கொண்டு வந்தவர் பா.ம.க.வின் மருத்துவர் அன்புமணி இராமதாசு தான் என்பதையும், தமிழகத்திற்கு தொடர்வண்டித் திட்டங்களே எட்டிப் பார்க்காத காலத்தில், தொடர்வண்டித் துறை இணை அமைச்சர்களாக பொறுப்பேற்ற பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் தான் தமிழகத்திலுள்ள அனைத்து மீட்டர்கேஜ் பாதைகளையும் அகல ரயில்பாதைகளாக மாற்றினார்கள். அதேநேரத்தில் மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை, ரூ.10,000 கோடி மதிப்புள்ள மத்திய அரசின் நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு வெளியில் தெரியாத காரணங்களுக்காக  முட்டுக்கட்டைப் போட்டு வருபவர் ஜெயலலிதா தான். இதையெல்லாம் வரலாற்று ஏடுகளைப் படித்தோ அல்லது அவற்றைப் படிப்பவர்களிடம் கேட்டோ நத்தம் விஸ்வநாதன் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வந்த முதல் 5 ஆண்டுகளில் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்கி, இன்றைய மதிப்பில்  ரூ.6000 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்த ‘சிவப்பு பொதுநலவாதி’ ஜெயலலிதா, மின்வெட்டு தொடர்பாக தமிழக மக்கள் சார்பில் நான் எழுப்பியுள்ள வினாக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரது விளக்கம் அமைந்தால் மின்வெட்டு பற்றி விமர்சிப்பதை நான் நிறுத்திக் கொள்கிறேன். இல்லாவிட்டால், மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க முதலமைச்சர் ஜெயலலிதா தயாரா? என அவர் கேட்டுள்ளார்

Monday, June 9, 2014

நம்பிக்கை தரும் குடியரசுத் தலைவர் உரை: ராமதாஸ் அறிக்கை



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவி ஏற்றிருப்பதையடுத்து, நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை இந்தியாவின் எதிர்காலம் குறித்து  நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அடிப்படை கிராமப்புற வளர்ச்சியும், வேளாண்துறை வளர்ச்சியும் தான் என்ற மகாத்மா காந்தியின் போதனையை இந்த அரசு நன்றாக உணர்ந்திருக்கிறது என்பதை குடியரசுத் தலைவர் உரையிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
வேளாண் தொழிலை லாபகரமான ஒன்றாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்; வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் மற்றும் விலை தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விவசாயிகளுக்கு சாதகமான வகையில் தீர்வு காணப்படும்; எளிதில் அழுகக் கூடிய விளைபொருட்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல தனி தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அதேபோல், கிராமப்புற வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும்,  ஊரக& நகர்ப்புற இடைவெளியை குறைக்க ‘ஊரகநகரங்கள்’ உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத் தக்கவை. இதன்மூலம் கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயருவதை தடுக்க முடியும். ஊரகநகரங்கள் திட்டப்படி கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும்போது, கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
’ஒத்துழைப்பான கூட்டாட்சி’ மூலம் மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்தல், தேசிய வளர்ச்சிக்குழு உள்ளிட்ட அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை உன்னதமான அறிவிப்புகள். பொதுவினியோகத் திட்டத்தை வலுப்படுத்த மாநில அரசுகள் கடைபிடித்துவரும் சிறந்த நடைமுறைகளை மத்திய அரசு பின்பற்றும் என்று அறிவித்திருப்பதன் மூலம் மாநில அரசுகளின் எஜமானனாக இல்லாமல் நண்பனாக  இருப்போம் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.
அதேபோல், வறுமை ஒழிப்பு, பட்டினியை ஒழிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், விலைவாசி குறைப்பு ஆகியவை ஏழை  மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் அறிவிப்புகள் ஆகும்.
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, கறுப்புப் பணத்தை மீட்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி, உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள், கல்வி வளர்ச்சிக்கான உத்திகள், சரக்குப்போக்குவரத்துக்காக தனிப்பாதைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் மூலம் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டதைப் போல தொடர்வண்டிப் பாதைகளை மேம்படுத்துவதற்காக வைர நாற்கரத் தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஆகியவை செயல்வடிவம் பெறும்போது இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்பதில் ஐயமில்லை.
அனைத்து மாநிலங்களிலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு உயர்கல்வித் துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். அதேநேரத்தில் அனைத்து மாநில மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், இத்தகைய கல்வி நிறுவனங்களை அமைப்பதில் மாநில அரசுகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இவற்றில் சரிபாதி இடங்களை மாநில ஒதுக்கீடாக அறிவிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய இருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவையாகும்.அதேநேரத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மகளிரும் பயனடைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மொத்தத்தில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின்  நம்பிக்கைத் தரும் நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது.

Saturday, June 7, 2014

சென்னை: தமிழகம் முழுவதும் மின்வெட்டுப்பிரச்சினை தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு சமாளித்துவிடலாம் என்று முதல்வர் ஜெயலலிதா நினைப்பது மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முயல்வதற்கு ஒப்பாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.05.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில்,‘‘ முந்தைய தி.மு.க. ஆட்சியினரால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும்'' என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி,‘‘நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்'' என செய்யாத சாதனைக்காக தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டிருக்கிறார்

சாயம் வெளுத்தது ஆனால், ‘‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு'' என்ற பழமொழியை விட விரைவாக இரண்டு நாட்களிலேயே தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது.
6 மணி நேர மின்வெட்டு ஜூன் மாதத்தின் முதல் இரு நாட்கள் மட்டும் மின்வெட்டு மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூன் 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. சென்னை தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் 4 முதல் 6 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இயல்பு வாழ்க்கை முடக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக கோடை வெயில் கொளுத்தும் வேளையில் இந்த மின்வெட்டால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் உற்பத்தி தடைபட்டிருக்கிறது. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், உயர்வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வகப் பணிகளும் மின்வெட்டால் முடங்கியுள்ளன.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மின்வெட்டு போக்கப்படும் என்று தான் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அதன்பின் பத்துக்கும் மேற்பட்ட முறை இதே வாக்குறுதியை மீண்டும் மீண்டும் கூறிய போதிலும், மின்வெட்டு அதிகரித்ததே தவிர குறையவில்லை. இப்போது காற்றாலைகள் மின்னுற்பத்தியைத் தொடங்கியிருப்பதால் அதைக் கொண்டு நிலைமையை சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில், தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது என அறிவித்ததுடன், அதை தமது சாதனையாகவும் காட்ட முதலமைச்சர் முயற்சி செய்திருக்கிறார். அதிலும், 3 ஆண்டுகளில் மின்வெட்டைப் போக்குவதாக அவர் உறுதியளித்திருந்ததைப் போலவும், அதை இப்போது செய்து காட்டியதன் மூலம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்.
வாய்தா மின்வெட்டு எப்போது நீங்கும் என்பது தொடர்பாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பலமுறை வாய்தா வாங்கியதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் இப்படி ஓர் அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் மின்வெட்டைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசின் மின் திட்டங்களையும் சேர்த்து தமிழகத்தின் நிறுவு திறன் 10,364 மெகாவாட்டாகவும், உற்பத்தி 8000 மெகாவாட்டாகவும் இருந்தது. அதன்பின் முந்தைய தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்திட்டங்களும், கூட்டு முயற்சி மின்திட்டங்களும் நிறைவடைந்ததால் நிறுவுதிறன் 12,814 மெகாவாட் ஆகவும், உற்பத்தி 10,300 மெகாவாட் ஆகவும் அதிகரித்திருக்கிறது.

Friday, June 6, 2014

எலைட் மதுக்கடைகள்: மக்களை மதுவுக்கு அடிமையாக்க வேண்டாம்! தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!



பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் எலைட் மதுக்கடைகளையும், தனி பீர் கடைகளையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிட்ட தமிழக அரசு மாநிலம் முழுவதும் புதுப்புது பெயர்களில் மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத் தக்கது.
ஒரு காலத்தில் கலாச்சாரம், கல்வி, மொழிச் செழுமை, நாகரீகம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்த தமிழகம் இப்போது மது மற்றும் குடிப்பழக்கத்தின் அடையாளமாக மாறிவிட்டது. மது அருந்துவதற்கு பணம் சேர்ப்பதற்காக பள்ளியில் அமரும் பலகைகளை மாணவர்களே உடைத்து விற்ற அவலம், 9 ஆம் வகுப்பு மாணவன் பீர் பாட்டிலை இடுப்பில் செருகிச் சென்ற போது வெடித்துச் சிதறி உயிரிழந்த சோகம் ஆகியவற்றுக்குப் பிறகும் மதுக்கடைகளை மூடி மாணவர்களைக் காக்க வேண்டும் என்ற சமூக அக்கறை இல்லாத தமிழக அரசு, பள்ளிகளுக்கு அருகிலேயே மதுக்கடைகளை திறந்து மது விற்பனை செய்கிறது.
தமிழ்நாடு முழுவதும் வறுமையும், வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடும் நிலையில் அதை  போக்குவதில் அக்கறை காட்டாத அரசு மது விற்பனையை பெருக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. தொடக்கத்தில் சென்னையில் சில இடங்களில் மட்டும் எலைட் மதுக்கடைகளை திறந்த தமிழக அரசு, அடுத்தகட்டமாக மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகரங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றிலும் எலைட் மதுக்கடைகள், தனி பீர் கடைகள் ஆகியவற்றை திறக்கத் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி,  தானியங்கி பீர் வழங்கும் எந்திரங்களை அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது. இவையெல்லாம் போதாது என உணவகங்களின் ஒரு பகுதியில் பீர், ஒயின் ஆகிய மதுவகைகளை பரிமாற அனுமதி வழங்கியுள்ளது.
மது அத்தியாவசிய பொருளும் அல்ல; அதை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது, நியாயவிலைக் கடைகளை திறப்பதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு, ஏற்கனவே மதுக்கடைகள் இருக்கும் பகுதிகளிலும் எலைட் மதுக்கடைகள், தனி பீர்கடைகளை திறப்பதற்கு வணிக நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. ஆண்டுக்கு  சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் அரசு, அதில் நான்கில் ஒரு பங்குக்கும் கூடுதலான தொகையை மது விற்பனை மூலம் தான் ஈட்ட வேண்டும் என்ற நிலையில் இருப்பது அவலமா? அற்புதமா? என்பதை ஆட்சியாளர்களின் மனசாட்சியே தீர்மானிக்கட்டும்.
மது விற்பனை தொடர்பான தமிழக அரசின் புதிய திட்டங்கள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பீர் விற்னைக்காக தனிக் கடைகளை திறப்பதும், உணவகங்களில் பீர் மற்றும் ஒயினை பரிமாறுவதும் இதுவரை மதுவுக்கு மயங்காதவர்களைக் கூட, குறைந்த போதை தருபவை தானே என்ற எண்ணத்தில், இந்த வகை மதுக்களை சுவைக்கத் தோன்றும்; நாளடைவில் இவற்றை அருந்துபவர்கள்  மற்ற மது வகைகளையும் குடிக்கத் தொடங்கி முழுமையான குடிகாரர்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. ஒருவேளை மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் உச்சத்தை தொடும் நோக்குடன் புதிய குடிகாரர்களை உருவாக்குவதற்கான உத்தியாகத் தான் இந்தக் கடைகளை அரசு திறக்கிறதோ? என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
மதுவின் தீமைகளையும், அதை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தையும் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் விளக்கியிருக்கிறது. குடியால் சீரழிந்த குடும்பங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை நாமே நேரில் பார்க்கிறோம். இதன்பிறகும் வருவாயை பெருக்குவதற்காக மக்களை மதுவுக்கும் அடிமையாக்கும் அரசு மக்கள் நலன் விரும்பும் அரசாக இருக்க முடியாது. எனவே, புதிதாக மது மற்றும் பீர் கடைகளை திறக்கும் திட்டத்தை கைவிட்டு, அண்ணல் காந்தியும், தந்தை பெரியாரும் விரும்பிய சமுதாயத்தை உருவாக்குவதற்காக தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: