பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மின்வெட்டு மீண்டும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வடசென்னை, மேட்டூர், நெய்வேலி அனல் மின் நிலையங்களிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதே மின்வெட்டுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றாலை மின்னுற்பத்தி முற்றிலுமாக ஓய்ந்துவிட்டதால் மின்நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கிறது.
நகர்ப்புறங்களில் 4 மணி நேரமும், கிராமப்புறங்களில் 6 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. சென்னையில் அறிவிக்கப்பட்ட 2 மணி நேரம் தவிர, அறிவிக்கப்படாத மின்தடையும் அடிக்கடி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடியால் ஏற்கனவே இந்த தொழிற்சாலைகள் நலிவடைந்திருந்த நிலையில், இப்போதைய மின்வெட்டு அவற்றின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது. 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மின்வெட்டு தலைதூக்கியிருப்பதால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் மின்வெட்டை போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததே இந்த அவலநிலைக்கு காரணம் ஆகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் மின்வெட்டு முற்றிலுமாக நீங்கிவிடும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கூட மின்வெட்டுக்கு தீர்வு காணப்படவில்லை. காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் போது மின்வெட்டு குறைவதும், உற்பத்தி குறையும் போது மின்வெட்டு அதிகரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மின்வெட்டைக் குறைப்பதில் காற்றாலைகளுக்கு இருக்கும் அக்கறை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாதது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.
ஒவ்வொரு முறை சட்டப்பேரவை கூடும்போதும் மின்வெட்டு குறைந்துவிடும் என்று ஜெயலலிதா அறிவிப்பதும், அதற்கு அடுத்த நாளிலிருந்து மின்வெட்டு அதிகரிப்பதும் வழக்கமாகி விட்டது. கடந்த 03.02.2014 அன்று சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமது அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிடும் என்று கூறி மீண்டும் ஒருமுறை, அதாவது 11 ஆவது முறையாக வாய்தா வாங்கியிருக்கிறார். உண்மையில் தமிழ்நாட்டின் மின்வெட்டை போக்க அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையையுமே மேற்கொள்ளவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும். கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக எந்த ஒரு மின்திட்டத்திற்கான பணிகளுமே தொடங்கப்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறேன். மின்வெட்டை போக்குவதில் தமிழக அரசின் தோல்வியைக் கண்டித்து பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறது. ஆனாலும், தமிழக அரசு இன்னும் உறக்கத்தைக் கலைத்து விழித்தெழ வில்லை.
மொத்தம் 3300 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள அனல் மின்திட்டங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலையம், 660 மெகாவாட் திறனுள்ள இரண்டு எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையங்கள், 660 மெகாவாட் திறனுள்ள 2 உடன்குடி அனல் மின் நிலையங்கள் ஆகியவை தான் முதலமைச்சர் கூறிய அந்த மின் திட்டங்களாகும். இவற்றில் எண்ணூர் அனல் மின் திட்டத்திற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் 15.03.2013 அன்று பெறப்பட்டும், ஏதோ காரணத்தால் இன்று வரை இறுதி செய்யப்படாமல் கிடக்கின்றன. இதனால், 2016 மார்ச் மாதத்தில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற இலக்கை இந்த மின்நிலையம் எட்டுமா? என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது.
எண்ணூர் சிறப்பு பொருளாதார அனல் மின் நிலையங்கள், உடன்குடி அனல் மின்நிலையங்கள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த ஜூலை& ஆகஸ்ட் மாதத்திலேயே பெறப்பட்டுவிட்டன. அதன்பின் 6 மாதத்திற்கு மேலாகியும் ஆட்சியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால் இந்த மின்நிலையங்களுக்கும் இன்னும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இவைதவிர மேலும் 8660 மெகாவாட் திறன் கொண்ட 7 மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடக்கின்றன. மொத்தத்தில் மின்னுற்பத்தியை பெருக்குவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. மின்திட்டங்களை செயல்படுத்துவதில் இவ்வளவு அலட்சியம் காட்டும் ஜெயலலிதா தான், தமிழகத்தை வெகுவிரைவில் மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என 3 மாதங்களுக்கு ஒருமுறை அறைகூவல் விடுத்து வருகிறார்.
எண்ணூர் சிறப்பு பொருளாதார அனல் மின் நிலையங்கள், உடன்குடி அனல் மின்நிலையங்கள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த ஜூலை& ஆகஸ்ட் மாதத்திலேயே பெறப்பட்டுவிட்டன. அதன்பின் 6 மாதத்திற்கு மேலாகியும் ஆட்சியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால் இந்த மின்நிலையங்களுக்கும் இன்னும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இவைதவிர மேலும் 8660 மெகாவாட் திறன் கொண்ட 7 மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடக்கின்றன. மொத்தத்தில் மின்னுற்பத்தியை பெருக்குவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. மின்திட்டங்களை செயல்படுத்துவதில் இவ்வளவு அலட்சியம் காட்டும் ஜெயலலிதா தான், தமிழகத்தை வெகுவிரைவில் மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என 3 மாதங்களுக்கு ஒருமுறை அறைகூவல் விடுத்து வருகிறார்.
கோடைக்காலம் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் மின்வெட்டு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று மின்துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். மின்வெட்டு அதிகரித்தால் அனைத்துத் துறையினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழக ஆட்சியாளர்கள் வெற்று வசனங்களை பேசுவதை விடுத்து, வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கியாவது நிலைமையை சமாளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment