சென்னை: ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் திரிவேதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த பொதுச் செயலாளர் ஜனார்தன் திரிவேதி கூறியிருக்கிறார்.அதுமட்டுமின்றி, தற்போதைய இடஒதுக்கீட்டு முறையில் தகுதியில்லாதவர்கள் தான் அதிகம் பயனடைவதாகவும் கூறியிருக்கிறார். சமூக நீதி அமைப்பையே கொச்சைப் படுத்தும் வகையில் திரிவேதி கூறியுள்ள கருத்துக்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல... உரிமை ஆகும். இந்த அடிப்படை உண்மை கூட தெரியாததால் தான் இட ஒதுக்கீடு என்பது சலுகை போலவும், அதை எவ்வாறு வழங்குவது என்பதை தாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டு திரிவேதி போன்றவர்கள் இலவசமாக ஆலோசனைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.சமூகநீதி என்பது சாதி சார்ந்ததாக மாறி வருகிறது என்றும் திரிவேதி கூறியிருக்கிறார். சமூகநீதி சாதி சார்ந்தது என்பதில் சந்தேகமே இல்லை. சமூக நீதியை சமூகத்தின் ஓர் அங்கமான சாதியின் அடிப்படையில் தான் வழங்க முடியும். அதனால் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16 (4) ஆவது பிரிவில், ‘‘சமூக நீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு தடை இல்லை'' எனக் கூறப்பட்டிருக்கிறது.இன்றைய சூழலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த ஒருவர் கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்திருந்தாலும், அவருக்கு முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஏழைக்கு கிடைக்கும் சமூக மரியாதை கிடைக்காது. சமூக மரியாதையை தீர்மானிக்கும் சக்தியாக சாதிகள் தான் திகழ்கின்றனவே தவிர, பணம் இல்லை என்பதால் தற்போதுள்ளவாறு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் கிரிமிலேயர் முறையை நீக்கிவிட்டு அனைத்து தரப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது மிகவும் ஆபத்தான யோசனை ஆகும்.அதுமட்டுமின்றி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை இந்திய அரசியல் சட்டமும் ஏற்றுக் கொள்ளவில்லை; உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் மன்றத்திலும் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு இல்லை. தமிழ்நாட்டில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. 1980 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததும், அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இரத்து செய்துவிட்டு, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்து வலுப்படுத்தியது தான் இதற்கெல்லாம் சிறந்த உதாரணங்கள் ஆகும்.மேலும், வருமான சான்றிதழ்களை பணம் கொடுத்து வாங்குவது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது நடைமுறை சாத்தியமானதும் இல்லை.உண்மையும், நடைமுறையும் இவ்வாறு இருக்கும்போது, ஆளும் காங்கிரசின் முன்னணித் தலைவரான ஜனார்தன் திரிவேதி போன்றவர்கள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறுவது சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் செயலாகும். திரிவேதியின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து கண்டனங்கள் குவிகின்றன.திரிவேதியின் யோசனையை ஏற்கப் போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மத்திய அரசும் அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. எனினும் சமூகநீதிக்கு எதிராக தெரிவித்த கருத்துக்காக திரிவேதி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
Thursday, February 6, 2014
இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஜனார்தன் திரிவேதி பேச்சு- பகிரங்க மன்னிப்பு கேட்க ராமதாஸ் வலியுறுத்தல்!
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment