Saturday, February 15, 2014

சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் விடும் திட்டத்தை கைவிட வேண்டும் : ராமதாஸ்





பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நலனை பாதுகாப்பதில் போட்டி போடாத மத்திய, மாநில அரசுகள், அரசின் சொத்துக்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதில் மட்டும் போட்டி போடுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு போட்டியாக தமிழகத்தில் உள்ள மாநில, மாவட்ட சாலைகளின் பராமரிப்பை தனியாரிடம் வழங்க மாநில அரசு தீர்மானித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த ஆசிய வளர்ச்சி வங்கி மிகப்பெரிய அளவில் கடன் வழங்குகிறது. இந்தத் தொகையைக் கொண்டு  சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தை  தமிழக அரசே செயல்படுத்தினால் சாலைகள் தரமாக இருக்கும்; அதற்கான செலவும் குறைவாக இருக்கும். ஆனால், மக்களின் நலனை விட தனியார் நிறுவனங்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட திராவிடக் கட்சிகளின் அரசுகள், சாலைகளை மேம்படுத்தி, பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கத் துடிக்கின்றன. சாலைப் பராமரிப்பை தனியார் மயமாக்குவதற்கான விதை கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் ஊன்றப்பட்டது. அப்போதே இத்திட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதையும் மீறி சில சாலைகளின் பராமரிப்புப் பணிகள் மட்டும் சோதனை அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட எந்த சாலையிலும் பராமரிப்பு பணி சரிவர மேற்கொள்ளப்படாததால் அவை மோசமான நிலையில் உள்ளன.

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு பொள்ளாச்சி மண்டலத்தில் உள்ள 400 கி.மீ நீளமுள்ள சாலைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 10,000 கி.மீ. நீளமுள்ள மாநில மற்றும் மாவட்ட சாலைகளின் மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டால், மாநில சாலை பராமரிப்பில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.

சாலைகளின் பராமரிப்பு தனியாரிடம் விடப்பட்டால் ஏற்கனவே அந்தப் பணியை செய்து வரும் மாநில நெடுஞ்சாலைத்துறை செயலிழந்துவிடும்; அதில் பணியாற்றும் அதிகாரிகளும், பணியாளர்களும் வேலை இழப்பார்கள். சாலைப் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு பொறுப்புடைமை இல்லை என்பதால் அவர்கள் சாலைகளை சரியாக பராமரிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இதுவரை சிறிய அளவில் ஒப்பந்தக்காரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் இனி ஒரே நிறுவனத்திடம் ஒட்டுமொத்தமாக வழங்கப்படுவதால் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதற்கெல்லாம் மேலாக, சாலை பராமரிப்பிற்கான தொகையை ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு மட்டுமே தமிழக அரசு வழங்கும். அதன்பின்னர், அந்தப் பணியை தனியார் நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் சாதாரண சாலைகளில் கூட சுங்கச் சாவடி அமைத்து சாலைகளை பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்கும் ஆபத்து உள்ளது. மராட்டியத்தில் நெடுஞ்சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பெருமளவில் வன்முறை வெடித்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழகத்தில் மாவட்ட சாலைகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் தமிழகத்திலும் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தமிழக நெடுஞ்சாலைத் துறை அனுபவம் மிக்கதாகும். பாம்பன் பாலம் உள்ளிட்ட கட்டுமானக் கலையின் அடையாளங்களாக திகழும் பல்வேறு முக்கியப்  பாலங்கலையும், சாலைகலையும் அமைத்தது மாநில நெடுஞ்சாலைத்துறை தான். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மாநில, மாவட்ட சாலைகளை பராமரிக்கும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: