Tuesday, February 18, 2014

ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே இந்த கதியா?”-பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரியை தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுபற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை நுங்கம்பக்கத்தில் உள்ள பீடா கடை அருகில் சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவுடன் காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டதாகவும், ஒருகட்டத்தில் அவரது சட்டைக் காலரை பிடித்து தள்ளியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரிடம் இருந்த செல்போனை பறித்த காவலர்கள், முகத்தில் சரமாரியாக தாக்கியதாகவும், அவரை ஒரு குற்றவாளி போல இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.காவல் நிலையத்திலும் அவரை மிகக்கேவலமான முறையில் நடத்தியுள்ளனர். அவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அவரது நண்பர் கூறிய போதிலும் அதை காவலர்கள் பொருட்படுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. பின்னர் இன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வந்து நிலைமையை விளக்கிய பிறகே தர்மேந்திர பிரதாப்பை காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.காவலர்கள் தாக்கியதில் தர்மேந்திர பிரதாப்பின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியுள்ளது. கைகளிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அந்த அதிகாரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுவதைத் தான் இந்த சம்பவம் காட்டுகிறது. எவர் ஒருவரையும் தண்டிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை; விசாரிக்கும் அதிகாரம் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.அவ்வாறு இருக்கும்போது தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனத் தெரிந்தும் அவரை காவல்துறையினர் கேவலமாக நடத்தி தாக்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களிடம் மரியாதை கிடைக்கும் வகையில் காவல்துறையினர் நடந்து கொள்ளவேண்டுமே தவிர, பயம் வரும் வகையில் நடக்கக்கூடாது.பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வது எப்படி? என்பதை காவலர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுவது குறித்து முறையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்"என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: