Monday, February 24, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான ஆசிரியர் நியமன முறையை 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு இரத்து செய்தது. அதற்கு மாற்றாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆசிரியர் நியமனத்தில் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிவித்ததுமே அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். இந்த புதிய முறை ஊழலுக்கும், முறைகேட்டுக்கும் தான் வழிவகுக்கும் என்று நான் அப்போதே கூறியிருந்தேன். அதைப்போலவே தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு மறுப்பு, போட்டித்தேர்வில் வினாத்தாள் குளறுபடிகள், ஆசிரியர்கள் நியமனத்தின்போது பொதுப்பிரிவில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுப்பு என பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின. அதன்பின்னர், தகுதித் தேர்விலாவது இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தனித்தனி தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்கும்படி தமிழக அரசை வலியுறுத்தினேன். சமூகநீதியில் அக்கறை கொண்ட மற்ற தலைவர்களும் இந்த கோரிக்கையை ஆதரித்தனர். ஆனால், ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை மட்டுமே சுட்டிக்காட்டி, தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படாததை  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சாமர்த்தியமாக மறைத்து வந்தார். இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அரசு பள்ளி ஆசிரியராகும் வாய்ப்பை இழந்து, தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழக அரசின் இந்த சமூக அநீதி குறித்து அளிக்கப்பட்ட புகார்களை விசாரித்த மத்தியச் சமூகநீதி அமைச்சகம், தமிழக அரசின் இந்தக் கொள்கை தன்னிச்சையானது; நியாயமற்றது; சட்டவிரோதமானது; இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையிட்டுள்ளது.

ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதன் பிறகும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல்  தொடர்ந்து சமூக அநீதிக் கொள்கையை கடைபிடித்து வந்த  தமிழக அரசுக்கு தனது கண்டனத்தின் மூலம் மத்தியச் சமூகநீதி அமைச்சகம் ‘குட்டு’ வைத்துள்ளது. அண்மையில் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் கூட இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, இனியாவது தனது தவறான அணுகுமுறையை மாற்றிக்கொண்டு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை உறுதியாக கடைபிடிக்க வேண்டும்.
அதன் முதல் கட்டமாக, மத்தியச் சமூக நீதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி  ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளுக்கும் இதே முறையை பின்பற்றி, குறைக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: